படத்தொகுப்பு

முஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்


தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரர்களையும் நாங்கள் ஒன்று சேர்த்தே கைகோர்த்து முன்னோக்கி நகர வேண்டும்.  அன்று யாரோ சிலர் செய்த குற்றங்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம் தமிழ் மக்களையும் வடக்கில் இருந்து விரட்டியது மனிதாபிமானச் செயல் என்று எவ்விதத்திலுஞ் சொல்லமுடியாது. என்று ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் 
 
கொழும்பு கதிரேசன் மண்டபத்தில், நேற்றுமாலை நடைபெற்ற தந்தை செல்வா நினைவு நிகழ்வில், ‘இலங்கைத் தமிழர்கள் செல்வது எங்கே?‘ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் நிகழ்த்திய நினைவுப் பேருரையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். 
 
“தலைவரவர்களே! சிறப்பு விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே! 
 
தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரர்களையும் நாங்கள் ஒன்று சேர்த்தே கைகோர்த்து முன்னோக்கி நகர வேண்டும்.  அன்று யாரோ சிலர் செய்த குற்றங்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம் தமிழ் மக்களையும் வடக்கில் இருந்து விரட்டியது மனிதாபிமானச் செயல் என்று எவ்விதத்திலுஞ் சொல்லமுடியாது.
 
அதற்கு நாங்கள் வெட்கித் தலை குனிய வேண்டும். இனியும் அப்பேர்ப்பட்ட காரியங்களில் நாங்கள் ஈடுபடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.  இனியாவது தமிழ்ப் பேசும் மக்கள் என்ற முறையில் முஸ்லீம் மக்களும் கிறீஸ்தவ மக்களும் இந்து மக்களும், ஏன் பௌத்த மதத் தமிழ்ப் பேசும் மக்களும் ஒன்று சேர்ந்து கரங்கோர்த்து முன்னோக்கிப் பயணிக்கும் ஒரு வழியை நாங்கள் காண வேண்டும். 
 
இன்று முஸ்லீம் மக்களுக்கு நடப்பது அன்று தமிழ் மக்களுக்கு நடந்தேறிய அநியாச் செயல்களே. இன்று நாங்கள் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்திருந்து அவர்களுக்காகக் குரல் கொடுப்பது எங்கள் கடமை. 
 
நாங்கள் முன்னர் முஸ்லீம் மக்களுக்கு இழைத்த கொடுமைக்குப் பிராயச்சித்தமாகவேனும் எமது தோழமையையுஞ் சகோதரத்துவத்தையும் இக்காலகட்டத்தில் வெளிக்காட்ட வேண்டும். 
 
அன்று முஸ்லீம் மக்களைத் தம்முடன் இணைத்து அணைத்து அரசியல் நடத்தியவர் தந்தை செல்வா. 
 
என் நண்பர் மசூர் மௌலானா அவர்கள் அக்காலத்தில் தந்தை செல்வாவுடன் ஊரூராகச் சென்று தனது கணீர் குரலில் முஸ்லீம் மக்களின் தமிழ்க் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தவர்.  அதே காலம் மீண்டும் வர வேண்டும். பகைமைக்கும் பாகுபாட்டுக்கும் இனி இடங்கொடுக்கக் கூடாது. 
 
எமது பகைமை பாகுபாடு, பக்கச்சார்பான நடத்தைகள் யாவும் இன்று எம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. 
 
அதை விடுத்து எமக்கெதிராக இயங்குபவர்கள் எமது பகையாளிகள் அல்ல, அறியாமையால் அவர்கள் தவறிழைக்கின்றார்கள்,  அவர்களை மன்னித்து விடுவாய் இறைவா என்று இறைவனிடம் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டு அதே நேரம் எமது பிரச்சினைகளை அகிம்சை வழியில் எடுத்துரைப்பதே சத்தியாக்கிரகம். 
 
சத்திய வழியில் இனியாவது நாங்கள் செல்ல எங்களைத் தயார்படுத்திக் கொள்வோமாக!  மனித குலத்தின் சகோதரத்துவத்தை நாங்கள் வலியுறுத்தி அதே சமயம் எமக்கிழைக்கப்பட்டு வரும் அநியாயங்களை உலகிற்கு எடுத்துரைத்து வருவோமாக! 
 
எங்கள் சமூகத்தில் பலரை நாங்கள் அடக்கி ஒடுக்கி வைத்ததன் பலன்தானோ இன்றைய எமது நிலை என்று எங்கள் பழைய வாழ்க்கை முறை பற்றிச் சிந்திக்குங் காலம் எழுந்துள்ளது. 
 
நாங்கள் அன்று செய்த பிழைகள் இன்று இந்த நிலைக்கு எங்களை ஆளாக்கியுள்ளது என்றால், இன்று எங்களுக்கு எதிராக இழைக்கப்படும் தவறுகளுக்காக யார் யாரோ தண்டனை அனுபவிக்கப் போகின்றார்கள்.  அவர்களின் தவறுக்காக அவர்கள் தண்டனை அனுபவிக்கட்டும். 
 
எங்களைப் பொறுத்த மட்டில் நாங்கள் எந்த விதத்திலும் வன்முறையைக் கடைப்பிடிப்பதில்லை, அகிம்சை வழியையே கடைப்பிடிப்போம், நேர்வழியில் நேர்மையுடன் பயணிப்போம், யாவரையும் எம்முடன் சேர்த்துக்கைகோர்த்து ஒற்றுமையுடன் முன்னேறுவோம், வன்சிந்தனைக்கு இடமளிக்காதுமுன்னேறுவோம் என்று உலகிற்குப் பறைசாற்றி உத்தமர்கள் வழி நின்று புதியஉலகம் காணத் திடசங்கற்பம் பூணுவோமாக! 
 
தமிழ்ப்பேசும் மக்கள் வருங்காலத்திலேனுந் தமது வாழ்க்கையை வளமுடன்வாழ இறைவன் அருள் புரிவானாக! 
 
நன்றி 
வணக்கம் 
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.