படத்தொகுப்பு

முஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..!


 
(Gulbin Sultana 
Research Assistant at the Institute for Defence Studies and Analyses 
New Delhi)
 
‘பொது பல சேன’ என்கின்ற இந்த பௌத்த அதிகாரப் படை யூலை 2012ல் கிரம விமலஜோதி தேரர் [Ven. Kirama Vimalajothy Thera] மற்றும் கலகொடதே ஜனசர தேரர் [Ven. Galagodatthe Gnasara Thera] ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டாம் என மக்களிடம் கூறிவருதல் போன்ற பல்வேறு முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. 
 
கொழும்பு கல்ற்ஸ்டோபில் உள்ள சிறிலங்கா சட்டக் கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் முஸ்லீம்களுக்கு சார்பாக உள்ளதாக குற்றம் சாட்டி இங்கு பதிவு செய்யும் நடவடிக்கையை பௌத்த அமைப்பான பொது பல சேன தாமதப்படுத்தி வைத்திருந்தது. முஸ்லீம்களின் குடும்பத் திட்டத்திற்கு எதிராகவும் இவர்கள் தமது தீவிர விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். தற்போது முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
இவ்வாறான முஸ்லீம் எதிர்ப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பொது பல சேன அமைப்பானது பௌத்த மேலாதிக்கத்தை தனது நோக்காகக் கொண்டு செயற்படும் நவீன பாசிச அமைப்பாக பார்க்கப்படுகிறது. 
 
இந்த பௌத்த அமைப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் உறுதுணையாக இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. தான் எவ்வித அரசியல் சார் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உண்மையான சிங்கள பௌத்த ஆட்சியை நடாத்தினால் அவருக்கு தனது ஆதரவை வழங்கத் தான் தயங்கமாட்டேன் எனவும் பொது பல சேன அறிவித்துள்ளது. 
 
இந்த அமைப்பின் பௌத்த தலைமைத்துவ கல்லூரியின் திறப்பு விழா மார்ச் 09,2013 அன்று நடந்த போது சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கலந்து சிறப்பித்திருந்தார். இவர் தனது உரையில் இந்த அமைப்பானது ராஜபக்சவின் ஆதரவுடன் செயற்படுவதாக தெரிவித்தமை இந்த சந்தேகத்தை தெளிவாக்கியுள்ளது. 
 
பொது பல சேன, முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கூட முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்திற்கும் இந்த அமைப்பே பொறுப்பெனக் கூறமுடியாது. ஏனெனில் 2011ல் அநுராதபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று அழிக்கப்பட்ட போது இந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை. இதேபோன்று 60 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த தம்புள்ள பள்ளிவாசல் மீது ஏப்ரல் 2012ல் புத்த பிக்குகளின் தலைமையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இப்பள்ளிவாசலானது சட்ட ரீதியற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாக இதனை இடிக்க முற்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். 
 
ஆனால் இப்பள்ளிவாசல் நிர்வாகமானது இதில் பள்ளிவாசல் சட்டரீதியாகக் கட்டப்பட்டதற்கான சட்ட ஆவணங்களைக் கொண்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை சமூகங்களை நோக்கி மேற்கொள்ளப்படும் வன்முறைகள் ஆழமானதாகவும் பரவலாகவும் மேற்கொள்ளப்படுவதை இவ்வாறான சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 
 
சிறிலங்காவில் பெரும்பான்மைவாதம் – சிறுபான்மைவாதம் போன்றவற்றின் கொடிய அடையாளமாக பொது பல சேன ஒரு குறியீடாகக் காணப்படுகிறது. குறிப்பாக ஈழப்போர் முடிவடைந்த பின்னர் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள், சிறிலங்கா முஸ்லீம்கள் பெரும்பான்மையினரின் அடுத்த கட்ட ‘பலிக்கடாக்களாக’ குறிவைக்கப்படுகின்றனர் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. 
 
சிறிலங்கா முஸ்லீம்கள் மீதான தாக்குதலானது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை விசனங்கொள்ளச் செய்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் ரவூப் ஹக்கீம் கோரியிருந்தார். மூத்த அமைச்சரான M.H.M.பௌவ்சி மற்றும் அமைச்சர்களான றிசார்ட் பதியுதீன், A.L.M.அதவுல்லா ஆகியோர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து சிறிலங்கா அதிபரிடம் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், சிறுபான்மை சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை கவனத்தில் எடுக்குமாறும் கோரியுள்ளனர். 
 
இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் காவற்துறையினர் சிரத்தை எடுக்காதுள்ளமை குறித்து தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளதுடன், பொது பல சேன, ராவன பலய மற்றும் சிங்கள ராவய போன்ற தீவிரவாதக் குழுக்களைத் தடைசெய்ய வேண்டும் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கர கோரியுள்ளார். 
 
சிறிலங்காத் தீவில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு Facebook போன்ற சமூக இணையத்தளங்கள் மூலம் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக நோக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
தற்போது சிறிலங்காத் தீவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையானது முஸ்லீம் மற்றும் பௌத்தர்களுக்கு இடையிலான குழப்பமாக மட்டும் அமையவில்லை. சிறுபான்மை இனங்களின் மீது பௌத்த பேரினவாதம் தனது ஆதிக்கத்தைக் காண்பிப்பதற்கான ஒரு நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த பின்னர், பௌத்தமானது நாடெங்கிலும் விரிவுபடுத்தப்பட்டு அதன் மத அடையாளங்கள் புதிதாக உருவாக்கப்படுவது கண்கூடு. 
 
சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்கனலே இருந்த இந்து மத ஆலயங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் புதிதாக பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, திருகோணமலையில் கன்னியா சிவன் ஆலயம், இலங்கைத்துறை முகத்துவாரத்தில் முருகன் கோவில் போன்றன அழிக்கப்பட்டு இங்கு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
2011ல் களுத்துறை கொல்பல் தேவாலயமானது பௌத்த காடையர் குழுவால் தாக்கப்பட்டது. அம்பலாங்கொடவில் தேவாலயம் ஒன்று பெப்ரவரி 2012ல் தாக்கப்பட்டது. களுத்துறையில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் தாக்கப்பட்டார். இதேபோன்று களுத்துறையில் கத்தோலிக்கர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் மதசார் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டி பௌத்த காடையர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். 
 
இவ்வாறு சிறுபான்மை இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்பவர்களின் பின்புலத்தில் சிங்கள பேரினவாத தலைவர்கள் அரசியல் சார் ஆதரவுகளை வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்களத் தலைவர்களுக்கு சிறிலங்காவில் வாழும் இந்தியத் தமிழர்கள் அரசியல் அச்சுறுத்தலாக உள்ளனர் எனக்கருதப்பட்டு அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் என கடந்த கால வரலாறு கூறுகிறது. 
 
திட்டமிட்ட ரீதியில் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுவதானது இவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு பெரும்பான்மை சமூகத்தை எதிர்ப்பதற்கான அமைப்பொன்றை உருவாக்குவதற்கு வழிவகுக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக நோக்கில் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றுசேர்ந்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து நிற்பதற்கான அரசியல் படையாக தோற்றம் பெறும் என்பது சாத்தியமில்லை. ஏனெனில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மிக ஆழமான காழ்ப்புணர்வு என்பது இல்லாவிட்டாலும் கூட, இவ்விரு சமூகங்களினதும் உணர்வுகள் இருதரப்பு சந்தேகங்கள் குறிப்பாக அரசியல் அதிகாரப் பகிர்வு போன்றவற்றில் விட்டுக்கொடுக்காத நிலை காணப்படுகின்றன. 
 
தமிழ் மக்கள் அரசியலில் முதன்மைப் பங்கை வகிக்க வேண்டும் எனவும் முஸ்லீம்கள் இரண்டாந்தரப் பங்கை வகிக்க வேண்டும் என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எண்ணப்பாடாகும். இதனையே தற்போது தமிழ் அரசியற் தலைவர்களும் கைக்கொள்வதாக முஸ்லீம்கள் கூறுகின்றனர். தமிழ் அரசியற் கட்சிகளுடன் கூட்டுச்சேர்வதானது தமக்கு அரசியல் ஆபத்தை உண்டுபண்ணும் என முஸ்லீம்கள் எதிர்வுகூறுகின்றனர். இதனாலேயே 2012ல் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்காது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கியது. 
 
சிறுபான்மை இனங்களை அடக்குதல் மற்றும் ஓரங்கட்டும் கோட்பாடுகள் மூலம் பெரும்பான்மை சமூகமானது அதனுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும். ஆனால் பன்மைவாத சமூகம் ஒன்றில் சிறுபான்மை இனங்களின் அடையாளங்களை அழிப்பதானது நாட்டில் ஒருபோதும் நிலையான சமூகத்தை ஏற்படுத்தாது. 
 
சிறிலங்கா ஏற்கனவே பல பத்தாண்டுகளாக குருதி சிந்தப்பட்ட யுத்தத்தின் வடுக்களைத் தாங்குகின்றது. இப்போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் தனது அழுத்தங்களை வழங்கியுள்ளது. இதேபோன்று சிறிலங்காவில் வாழும் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அதனை ஓரங்கட்டினால் சிறிலங்காவுக்கு எதிராக பூகோள இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய ஆபத்தும் ஏற்படலாம்.  (புதினப்பலகை)