படத்தொகுப்பு

பொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.


( ஜஸாக் அல்லாஹ்  -எஸ். அஷ்ரப்கான் )

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை பயங்கரவாதத்துடன் சம்மந்தப்படுத்தி பொதுபல சேனாவின் தலைவர் தெரிவித்துள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பொது பல சேனாவிற்கு முஸ்லிம்கள் கொடுக்கவேண்டியது என்ன என்று விளங்கவில்லை. இலங்கையில் 30 வருடம் யுத்தம் நடைபெற்றபோது முஸ்லிம்கள் தேவைப்பட்டார்கள். யுத்தம் முடிந்த பிறகு தமிழர்களைத் தோற்கடித்துவிட்டோம் முஸ்லிம்களை ஒரு கைபார்த்து விடுவோம் என்று ஒரு இனவாத கும்பல் கிளம்பியிருப்பதன் வெளிப்பாடுதான்  இந்த பொதுபல சேனாவின் திடீர் தோற்றமும் முஸ்லிம்களுக்கு எதிரான முட்டாள்தனமான பிரச்சாரமுமாகும்.

பொதுபலசேனாவின் பகுத்தறிவிற்கு ஒவ்வாத பிரச்சாரங்களைப் பார்க்கின்றபோது இது ஒரு கொந்துராத்து அமைப்பாகவே படுகின்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பது இந்த நாட்டு முஸ்லிம்களின் அதியுயர் மார்க்க சபையாகும். முழுக்க முழுக்க இஸ்லாத்தைக் கற்றுத்தேர்ந்த அறிஞர்களைக் கொண்ட ஒரு சபையை அர்த்தமில்லாமல் பொது பலசேனா விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.

ஏனைய சமயத்தலைவர்களுக்கு கண்ணியம் கொடுக்கத் தெரியாத சமயத்தலைவர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக இப்பொதுபல சேனா இன்று செயற்படுவதால் கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும் பெரும் பான்மையான பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள்.

பௌத்த துறவிகளென்று தம்மை அழைக்கின்ற பௌத்த தர்மத்தின் அடிப்படைக்கொள்கைகளுக்கே முரணாக செயற்படுகின்ற ஒரு கும்பலினால் கேவலப்படுத்தப்படுவதை எண்ணி மனம் வெதும்பி  இன்று இவர்களுக்கு எதிராக பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் தமது அதிருப்தியை தெரிவித்து வருகின்றார்கள்.

அவர்களது எதிர்ப்பின் வெளிப்பாட்டைத்தான் தும்முல்லை சந்தியில் காட்டினார்கள். ஆனால் எதுவும் இநத சேனாக்களுக்கு உறைத்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் கொந்தராத்துக்காரர்கள் அடுத்தவர்களின் கருத்துக்களைப்பற்றி சிந்திப்பதில்லை. தனது கொந்தராத்து முடியும்வரை. பொதுபல சேனா தாமே அடிப்படைவாதிகளாக இருந்துகொண்டு மற்றவர்களை அடிப்படைவாதிகள் என்று அழைப்பதும் தாமே தீவிரவாதப் போக்கை கடைப்பிடித்துக்கொண்டு அடுத்தவர்களை தீவிரவாதிகள் அல்லது அதற்கு மேலாக பயங்கரவாதிகள் என்று அழைப்பதெல்லாம் அவர்களது கொந்தராத்தை செயற்படுத்துகின்ற உக்திகளாகும்.

இந்நாட்டில் பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் நல்லவர்கள், நேர்மையாக சிந்திக்கின்றவர்கள் என்பதனால் எமது வார்த்தைப் பிரயோகங்கள் அந்த நல்ல உள்ளங்களை புண்படுத்திவிடக்கூடாது என்பதற்காக நாம் பொறுமையாகவும் நிதானமாகவும் செயற்படுகின்றோம். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை பொதுபல சேனா புரிந்து  கொள்ள வேண்டும்.

அதேநேரம் அந்த நல்ல உள்ளம் கொண்ட சிங்கள பெளத்த மக்களையும் இந்த சேனாக்களையும் வேறாக பிரித்து அடையாளம் காணவேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த சேனாக்கள் சிறுபாண்மைகளுக்கு மாத்திரம் எதிரானவர்களல்ல. சிங்கள்பௌத்த மக்களுக்கும் எதிரானவர்கள் என்ற யதார்த்தம் நேர்மையாக சிந்திக்கின்ற அனைவராலும் ஜீரணிக்கப்பட்டாக வேண்டும். ஏனெனில் 30 வருட யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப்பாதையில்  கொண்ட செல்லப்பட எத்தனிக்கப்படுகின்ற இக்காலகட்டத்தில் மீண்டும் இன முறுகலை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் அதல பாதாளத்திற்கு தள்ள எத்தனிக்கின்ற இக்கும்பல் நிச்சயமாக சிங்கள பௌத்த மக்களினதும் நலனுக்கு எதிரானவர்களாகும்.

மேற்கத்தேய நாடுகள் இன்று இலங்கைக்கு எதிரான ஒரு போக்கை கையாளுகின்ற நிலையில் முஸ்லிம் நாடுகளே இலங்கைக்கு துணையாக நிற்கி்ன்றன. இந்த முஸ்லிம் நாடுகளையும் இலங்கைக்கு எதிராக திருப்பி விடுவதற்கான கொந்தராத்தைத்தான் இந்த சேனாக்கள் இன்று நிறைவேற்ற முனைந்து கொண்டிருக்கின்றார்கள். இது புரியாமல் சில அரசியல்வாதிகள் இவர்கள் மூலம் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்று இவர்கள் பின்னால் அலைகின்றார்கள்.

ஆனால் இந்நாட்டு சிங்கள பௌத்த மக்கள் சிந்தனைத் தெளிவு உள்ளவர்கள். அம்மக்கள்  இத்தீவரவாத போக்கு கொண்டவர்களையும் அவர்களோடு இருக்கும் அரசியல்வாதிகளையும் நடுத்தெருவில் கைவிடத்தான் போகின்றார்கள். அப்போது கொந்தராத்து தொகைகளை மீளளிக்கவேண்டி வரலாம். அதேநேரம் உங்கள் கொந்தராத்துகளுக்கு  பலிக்கடாவாக இந்நாட்டு முஸ்லிம்கள் இருக்க முடியாது.

அவ்வாறு இருக்க அனுமதி்க்கவும் மாட்டோம்.  முஸ்லிம்களுக்கு   உயிர்களை விட ஈமான் என்கின்ற இறை நம்பிக்கை மிகவும் முக்கியமானதாகும். அந்த இறை நம்பிக்கையை பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் எதையும் இழப்பார்கள். ஆனால் எதற்காகவும் அந்நம்பிக்கையை இழக்கமாட்டார்கள். மட்டுமல்ல அந்நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுவதையோ அல்லது அந்நம்பிக்கையின் அடிப்படைக்கடமைகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதையோ அனுமதிக்க மாட்டார்கள் என்பதையும் சொல்லிவைக்க விரும்புகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Photo: 323175040_640.jpg