படத்தொகுப்பு

பொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்


(இ. அம்மார்)
பொது பல சேனாவின் தலைவர் விமல ஜோதி தேரர் இலங்கையில் அல் கைய்தாஹ் மற்றும் அல் ஜிஹாத் பயங்கரவாத அமைப்புக்கள் உள்ளதாகவும் அதற்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை ஆதரவு வழங்குவதாதகவும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையினை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் தாம் ஜனாதிபதியிடம் முறைப்பாட்டினை முன்வைக்கவுள்ளதாக  என்று குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர்
அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வகையில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்படுத்தி பொது பல சோனவின் தலைவர் தெரிவித்துள்ள கருத்திற்கு எதிராக குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் வெளியிட்டுள்ள கருத்தில் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி நேற்று வெளிநாட்டு முஸ்லிம் இராஜதந்திரிகளைச் சந்தித்த போது இனப்பிரச்சினைகளை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சம்மந்தமாக தனக்கு ஆதாரத்தோடு முறைப்பாடு தெரிவிக்கும் போது அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இருந்தார். அந்த வகையில் எனது முறைப்பாட்டை விமல ஜோதி தேரர் சம்மந்தமாக ஜனாதிபதியிடம் நான் முன் வைக்கப் போகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.
புத்திபிரான் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே போதனை செய்தவர். விசேடமாக ஒரு பௌத்த பிக்கு என்ற பெயர் குத்தப்பட்ட ஒருவர் இப்படியான பொறுப்பற்ற முறையில் அறிக்கைகள் விட்டு சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை உண்டு பண்ணுதல் மக்களைத் தூண்டுதல் என்பது பெரும் வேட்கக் கேடான விடயம்.
இலங்கைக்குள் இப்படியான சட்டவிரோதமான தீவிரவாத முஸ்லிம் அமைப்புக்கள் இயங்குவதாயின் இது சம்மந்தமாக முறைப்பாடு தெரிவிப்பதற்கும் சட்ட நடடிவடிக்கை எடுப்பதற்கும் உரிய இடங்கள் உள்ளன. இவ்வாறான நிலையில் பத்திரிகைகளில் அறிக்கைகளை விட்டு இலங்கை வாழ் மக்களின் சக வாழ்வை சீர் குலைப்பது ஒரு கோழைத்தனமான செயலாகும்.
பொதுபல சேனாவின் தலைவர் விமல ஜோதி தேரரைச் நாங்கள் சந்தித்த போது அவர்கள் முஸ்லிம்கள் மீது பற்றுள்ளவர்கள் என்று கதைத்தார்கள். ஆனாலும் இவர்களது செயற்பாடுகளைப் பார்க்கும் போது மிகவும் வெறுக்கத் தக்கதாக உள்ளன. இவர்களின் இந்த அனாவசியமான தூண்டுதலானது 30 வருட கால யுத்தத்தால் சீர்குலைந்துள்ள இந்த நாட்டை மீண்டும் ஒரு இனப்பிரச்சினைக்கு மக்களைத் தூண்டும் ஒரு அபாயகரமான நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியவர்களாவே ஈடுபடுகின்றனர்.
எனவே இன்று நிம்மதியாக வாழும் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் மனக் கசப்கை உருவாக்கி நாட்டில் சக வாழ்வை சீர்குலைக்க எடுக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.