படத்தொகுப்பு

ஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது


20130418-223635.jpg

-tw-
பயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை தொடர்புபடுத்தி பொது பல சேனாவின் தலைவர் வெளியிட்டுள்ள கருத்தினை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2012 ஆம் ஆண்டு எமது நாட்டிற்காக ஜெனீவா வரை சென்று ஆதரவு பெற்றுக் கொடுத்த 85 வருடங்களைத் தாண்டிய ஒரு நிறுவனத்தை நேற்று முளைத்த பொது பல சேனா பயங்கரவாதமாக காட்ட முனைவது இந்நாட்டின் அரசுக்கும் இறைமைக்கும் எதிராக மேற்கொள்கின்ற மிக மோசமான குற்றச்சாட்டாகவே கருத வேண்டியுள்ளது.

இந்நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயற்பட்டுவருகின்ற பொது பல சேனாவை பொறுமையோடு எதிர்கொண்டு மக்களை முறையாக வழிநடத்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது இந்நாட்டையும் சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்துவதாகவே அமையும். மேலும் அநாவசியமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி முஸ்லிம் சமூகத்தை சீண்டிப்பார்க்கின்ற அபாயகரமாக பரிசோதனையில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான எத்தகைய அநீதிகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்று எமது நாட்டின் மாண்புமிகு ஜனாதிபதி சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்து அடுத்த நாளே இவ்வாறான பயங்கர அறிக்கைகள் பொது பல சேனாவினால் விடுக்கப்படுவது குறித்தும் பொது பல சேனாவின் சர்வதேச தொடர்புகள் குறித்தும் நாம் சந்தேகம் கொள்கிறோம்.

இவ்வாறான பயங்கரவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அமைப்புக்களை இந்நாட்டில் தடை செய்வதே இந்நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் சகவாழ்விற்கும் துணை செய்யும் என்று நாம் உறுதியாக நம்புவதோடு இது குறித்து சர்வதேச சமூகமும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisements