படத்தொகுப்பு

அதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்


 அமெரிக்க எம்பியை தொடர்ந்து அதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்தை சேர்ந்த எம்பி ரோஜர் விக்கர். இவரது பெயருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள தபால் அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும் ஸ்கேன் சோதனையில் இந்த கடிதத்தையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். 

 

அப்போது, அதில் ரைசின் என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதாவது கடிதத்தை எடுத்து படிப்பவர்களின் விரல்களில் இந்த விஷம் ஒட்டிக் கொள்ளும். விரலை ஏதேச்சையாக வாயில் வைக்கும் போது விஷம் உடலில் பரவி மரணம் ஏற்படும். இதையடுத்து, இந்த கடிதம் குறித்து எப்பிஐ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கடிதத்தை பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.

 

 இந்த பரபரப்பு அடங்கும் முன்பு அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அதிபர் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அது விஷம் தடவிய கடிதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கூறுகையில், ‘அதிபர் ஒபாமாவுக்கு வந்த கடிதத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இந்த கடித்ததை யாரும் பிரிக்கவில்லை. எப்பிஐ அதிகாரிகள் கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இது விஷம் தடவி அனுப்பப்பட்ட கடிதம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதை அனுப்பியது யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது’ என்றார். இந்நிலையில் விஷம் தடவிய 2 கடிதங்களையும் அமெரிக்கரே அனுப்பியதாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து எப்பிஐ அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.