படத்தொகுப்பு

ஹலால் இழுபறி நிலையை நீக்க முன்னணி பௌத்த தேரர்கள் முயற்சி


 

halaal

ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கமிட்டியில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு உதவுவதற்கு இலங்கையில் முன்னணி பௌத்த தேரர்கள் இருவர் முன்வந்துள்ளனர்.

அமரபுற நிக்காயவின் அநுநாயக்க இத்தாபான தம்மாலங்க தேரரும், கோட்டே நாக விகாரை அதிபதி சோபித தேரரும் இவ்வாறு உதவ முன்வந்துள்ளனர். கடந்த திங்களன்று நாக விகாரையில் இடம்பெற்ற முஸ்லிம் தூதுக்குழுவினரின் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் குழு ஒன்று சந்தித்த சகவாழ்வினை கட்டியெழுப்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஹலால் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் நகல் அறிக்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு சட்ட ரீதியான உரிமையில்லை என குறிப்பிட்டுள்ள வாசகம் தொடர்பாக சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் சம்பிக இது இடம்பெற வேண்டும் என்கின்றார். முஸ்லிம் அமைச்சர்கள் இந்த வாசகத்தை ஆட்சேபிக்கிறார்கள். இதன் காரணமாக ஒரு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் கவுன்சில் தூதுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜம்மியத்துல் உலமா நாட்டுக்காக இந்தப் பணியைச் செய்தது. அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதனை முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்க முடியாதென தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக தாம் குழுவின் தலைவர் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேசுவதாக சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் அண்மைக் காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் அஸ்கர்கான், மௌலவி ஏ.எல்.எல்.இப்றாஹிம், எம்.டி.எம்.ரிஸ்வி, மௌலவி எம்.எஸ்.ஓ.மஜிப், வர்த்தகப் பிரமுகர் அல்ஹாஜ் இக்ராம் பரிதா ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர். முஸ்லிம், சிங்கள ஐக்கியத்தை வலியுறுத்தும் சிங்கள வர்த்தகப் பிரமுகரான விக்ரமசிங்கவே இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

 

Advertisements