ஸகாத்


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இக்கட்டுரையில் 1. ஸகாத் கட்டாயக் கடமை 2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள் 3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காணவிருக்கின்றோம். நம்முடைய இந்தத் தொகுப்பில் ஸகாத் பற்றி வரக்கூடிய பலவீனமான ஹதீஸ்களை நாம் குறிப்பிடவில்லை. இன்ஷா அல்லாஹ் வரக் கூடிய இதழ்களில் ஸகாத் பற்றிய பலவீனமான ஹதீஸ்களை ஒரு தொகுப்பாக நாம் வெளியிடுவோம்.

நம்முடைய சக்திக்குட்பட்டு, நம்முடைய ஆய்வின் அடிப்படையில் ஸஹீஹான ஹதீஸ்களையே இக்கட்டுரையில் நாம் இடம் பெறச் செய்துள்ளோம். ஸகாத் என்றால் என்ன?

ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான். இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான். ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீஸ்களும் திருமறை வசனங்களும் ஸகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதற்கான ஆதாரங்களைக் காண்போம். இஸ்லாத்தின் ஒரு தூண்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 8

இறை நம்பிக்கையின் அடையாளம்

ஒருவன் அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கின்றான் என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்று ஸகாத்தை நிறைவேற்றுவதாகும். ஒருவனிடம் செல்வ வசதி இருந்தும் அவன் ஸகாத்தை நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயமாக அவனிடம் இறை நம்பிக்கை இல்லை என்பதற்கு அதுவே தெளிவான சான்றாகும். இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஸகாத் கொடுப்பதும், போர்ச் செல்வங்கல் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 7556

கட்டாயக் கடமை

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)

இவ்வவசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஸகாத்தைக் குறிப்பிடுவதாகும். ஏனெனில் இவ்வசனத்தின் இறுதியில் “இது அல்லாஹ்வின் கட்டாயக் கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸகாத் மார்க்கத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.  (அல்குர்ஆன் 99:5)

நபியவர்களின் உபதேசம்

ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவனுக்குத் தொழுகை எப்படி கட்டாயக் கடமையாகி விடுமோ அது போல் ஸகாத்தும் கட்டாயக் கடமையாகி விடும். அவன் கண்டிப்பாக தன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு வழங்கியாக வேண்டும். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பும் போது இந்த உபதேசத்தைச் செய்தே அனுப்பி வைக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1395

ஸகாத் என்ற அற்புதக் கடமை வறுமை ஒழிப்பிற்குரிய ஒரு அற்புத ஆயுதமாகும். இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தித் தான் நபியவர்கள் வறுமையை விரட்டியடித்தார்கள். நபியவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் வறுமையை இல்லாமல் ஆக்கிக் காட்டினார்கள். ஸகாத்தின் முக்கியமான நோக்கம் வறுமையை இல்லாமல் ஆக்குவது தான் என்பதை முஆத் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் செய்த உபதேசத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. செல்வத்தில் ஸகாத் தவிர வேறு கடமையில்லை

நம்முடைய செல்வத்திலிருந்து நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மம் ஸகாத் மட்டும் தான். இதனை நிறைவேற்றாவிட்டால் அதற்குரிய தண்டனையை நாம் மறுமையில் அனுபவித்தாக வேண்டும். ஏனைய தான தர்மங்கள் நாம் நம்முடைய செல்வத்திலிருந்து விரும்பிச் செய்பவையாகும். செய்தால் நமக்கு இறையருள் அதிகம் கிடைக்கும். செய்யாவிட்டால் தண்டனை கிடைக்காது. ஆனால் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டனை உண்டு. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்றார்கள். அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர” என்றார்கள்.  அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்” என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 46

ஸகாத் வழங்காதவர்களுடன் போர் தொடுத்தல்

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் ஸகாத் வழங்க மறுப்பவர்களிடம் போரிட்டாவது ஸகாத்தைப் பெற வேண்டியது ஆட்சியாளரின் கடமையாகும். ஒருவன் அல்லாஹ்வை நம்புகிறேன் என்று வாயால் மொழிந்த பிறகு  தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் நிறைவேற்றும் போது தான் வெளிப்படையில் அவனை ஒரு முஸ்லிம் என்று இஸ்லாமிய அரசாங்கம் தீர்மானிக்கும்.

வெளிப்படையில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் நிறைவேற்றுபவர்கள் மீது போர் தொடுப்பதும், அவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதும் மாபெரும் குற்றமாகும். பின்வரும் வசனம் மற்றும் ஹதீஸ்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.   (அல்குர்ஆன் 9:5)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காத வரை (இணை வைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 25

நபிவழியை நிலைநாட்டிய அபூபக்ர்

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு சிலர் ஸகாத்தை மறுத்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்காக அவர்களுடன் போர் தொடுத்தார்கள். இது நபிவழியின் அடிப்படையில் மிகச் சரியான நடவடிக்கையாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார்; தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர! அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், உமரை நோக்கி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்றார்கள்.

நூல்: புகாரி 1400

ஸகாத்திற்காகவே செல்வம் தரப்படுகிறது

நாம் சம்பாதிக்கும் செல்வம் என்பது முழுவதுமே நமக்குரியதில்லை. நம்முடைய தேவைக்கும் அதிகமாகத் தான் இறைவன் செல்வத்தைத் தருகிறான். எனவே இறைவன் நமக்குத் தரும் செல்வத்தில் ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்குரிய உரிமைகளை நாம் முறையாக வழங்கி விட வேண்டும். அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும்.   (அல்குர்ஆன் 70:24, 25)

இறைவன் செல்வத்தை நமக்கு வழங்கியிருப்பதே ஸகாத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் என்பதைப் பின்வரும் நபிமொழியும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அபூ வாகிதில் லைஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மீது இறைச் செய்தி அருளப் பெற்ற (கால கட்டத்தில்) நாங்கள் அவர்களிடம் வருபவர்களாக இருந்தோம். அவர்கள் அதனை எங்களுக்கு அறிவிப்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்:

கண்ணியமானவனும், யாவற்றையும் மிகைத்தவனுமாகிய அல்லாஹ் கூறினான்: நான் செல்வத்தை வழங்கியிருப்பதே தொழுகையை நிலை நாட்டுவதற்காகவும், ஸகாத்தை நிறைவேற்றுவதற்காகவும் தான். ஆதமுடைய மகனிற்கு (செல்வத்தால்) ஒரு கணவாய் இருந்தாலும் அவன் இரண்டாவதும் தனக்கு இருப்பதற்கு ஆசைப்படுவான். அவனுக்கு இரண்டு கணவாய்கள் இருந்தால் அவன் அந்த இரண்டுடன் மூன்றாவதும் தனக்கு ஆவதற்கு ஆசைப்படுவான். ஆதமுடைய மகனின் வயிற்றை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது. பிறகு யார் பாவ மன்னிப்புக் கோரி மீள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பை வழங்குகிறான்.

நூல்: அஹ்மத் 20900

மலை உச்சியிலிருந்தாலும் ஸகாத் கொடுக்க வேண்டும்

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் அரசாங்கமே முஸ்லிம்களிடமிருந்து ஸகாத்தை வசூலித்து விடும். ஆனால் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத இடத்தில் இருந்தாலும், ஸகாத்தை வசூலிப்பதற்கு யாருமே இல்லையென்றாலும் அவனே முன்வந்து ஏழைகளுக்குரிய ஸகாத்தை வழங்கிவிட வேண்டும். இதிலிருந்து இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாட்டில் வாழ்பவர்களுக்கும் ஸகாத் கடமை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். மலை உச்சியில் இருந்தால் கூட ஸகாத்தை கட்டாயம் நிறைவேற்றிவிட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் (குழப்ப நேரங்களில்) தமது சிறிய ஆட்டு மந்தையுடன் இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில், அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றின் நடுவில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை வழங்கி, மரணம் வரும் வரையில் தம் இறைவனை வழிபட்ட வண்ணம் வசித்து வருகிறார். மக்களில் இவரும் நன்மையிலேயே உள்ளார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3838

ஸகாத் வழங்குவோரின் சிறப்புகள்

செல்வ வசதியைப் பெற்ற ஒருவன் ஸகாத்தை நிறைவேற்றுவதன் மூலமே அவன் உண்மையான இறை நம்பிக்கையாளனாகவும், இறையச்சமுடையவனாகவும், நேர்வழி பெற்றவனாகவும், இறையருளுக்குச் சொந்தக்காரனாகவும், மறுமையில் வெற்றியாளனாகவும், நிரந்தரமான சொர்க்கத்திற்குரியவனாகவும் ஆகமுடியும் என்பதைப் பல்வேறு வசனங்களில் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் ஸகாத்தை நிறைவேற்றுபவர்களுக்குரிய சிறப்புகளை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

செல்வ வசதி பெற்ற ஒருவன் ஸகாத்தை நிறைவேற்றாமல் தன்னை ஒரு முஸ்லிம் என்று ஒரு போதும் சொல்லிக் கொள்ள முடியாது என்பதை இறை வசனங்கள் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன. ஒருவனிடம் அணு அளவு ஈமான் இருந்தால் கூட அவன் செல்வ வசதியைப் பெற்றிருந்தால் ஸகாத்தை நிறைவேற்றாமல் இருக்க மாட்டான் என்பதற்கும் திருமறை வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன. உண்மையான இறைநம்பிக்கையாளர்கள்

அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் தாம், உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. அல்குர்ஆன் 8:3, 4

தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிறவர்களே இறை  நம்பிக்கை கொண்டவர்கள். (அல்குர்ஆன் 5:56)

இது குர்ஆனின் – தெளிவான வேதத்தின் – வசனங்கள். இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நற்செய்தியுமாகும். அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தை வழங்குவார்கள். மறுமையை அவர்களே உறுதியாக நம்புவார்கள்.  (அல்குர்ஆன் 27:1-3)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப் படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.  (அல்குர்ஆன் 9:71)

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.    (அல்குர்ஆன் 22;41)

வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.  (அல்குர்ஆன் 24:37)

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர் (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். (அல்குர்ஆன் 23:1-4)

இவ்வசனத்தைத் தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களின் பல்வேறு பண்புகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான். இறுதியில் அல்லாஹ் இவர்களுக்குக் கிடைக்கும் வெற்றியைக் குறிப்பிடுகின்றான்.

பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.   (அல்குர்ஆன் 23:10,11)

இறையச்சமுடையோர்; வெற்றியாளர்கள்

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.  (அல்குர்ஆன் 2:177)

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிட மிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.  (அல்குர்ஆன் 2:1-5)

நேர்வழி பெற்றவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ் வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.  (அல்குர்ஆன் 9:18)

இறையருளுக்குரியவர்கள் எனது அருள், எல்லாப் பொருட்களையும் விட விசாலமானது. (என்னை) அஞ்சி, ஸகாத்தும் கொடுத்து, நமது வசனங்களை நம்புகிற மக்களுக்காக அதைப் பதிவு செய்வேன்” என்று (இறைவன்) கூறினான்.         (அல்குர்ஆன் 7:156)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:56)

மறுமையில் சாட்சியாளர்கள்

இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.   (அல்குர்ஆன் 22:78)

நன்மை செய்பவர்கள் இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்கள். நன்மை செய்வோருக்கு நேர் வழியும், அருளுமாகும். அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அவர்கள் தாம் மறுமையை உறுதியாக நம்புவார்கள்.  (அல்குர்ஆன் 31:2-4)

ஸகாத்தை அல்லாஹ் வளர்க்கிறான்

இறைவனின் திருமுகத்தை நாடி நாம் ஏழைகளுக்கு ஸகாத்தை வழங்குவதினால் நமது செல்வம் ஒரு போதும் குறைந்து விடாது. நம்முடைய செல்வத்தில் இறைவன் மறைமுகமான பரகத்தைச் செய்வான். இம்மையிலும் மறுமையிலும் அதனை அல்லாஹ் பன்மடங்காகப் பெருக்கித் தருவான். மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள். அல்குர்ஆன் 30:39

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 2:276

நாம் இறைவனுக்காக ஸகாத்தை வழங்கும் போது அல்லாஹ் ஒன்றுக்கு எழுநூறாகவும் அதைவிட அதிகமாகவும் தருவான். மறுமையில் இதைவிட மிகப் பெரும் சுவனம் எனும் கூலியை அல்லாஹ் தரவிருக்கின்றான். தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.  அல்குர்ஆன் 2:261, 262

உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும்

தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 59:9

உங்கள் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும்  சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர்.  அல்குர்ஆன் 64:15, 16

யாருடைய உள்ளம் கஞ்சத்தனத்திலிருந்து நீங்கியிருக்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள் என மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. நம்முடைய செல்வத்தைத் தகுதி உடையவர்களுக்கு வாரி வழங்குவதன் மூலமே கஞ்சத்தனத்திலிருந்து உள்ளத்தைப் பாதுகாக்க இயலும்.

நம்முடைய செல்வத்திலிருந்து நாம் ஸகாத்தை நிறைவேற்றும் போது நம்முடைய உள்ளம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. நம்முடைய உள்ளம் பரிசுத்தப்படுகிறது. (முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப் படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.  (அல்குர்ஆன் 9:103)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பனூ தமீம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமான செல்வமுடையவன் மேலும் மனைவியும் குழந்தையும், விருந்தினர்களும் உடையவன். நான் (என்னுடைய செல்வத்தை) எவ்வாறு செலவு செய்ய வேண்டும்? நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதை எனக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை வழங்குவாயாக. நிச்சயமாக அது பரிசுத்தமாக்கக்கூடியது. அது உன்னை பரிசுத்தப்படுத்தும். உன்னுடைய உறவினர்களை இணைத்து வாழ்வாயாக. யாசகம் கேட்பவர், அண்டை வீட்டார், மற்றும் ஏழை ஆகியோருக்கு (நீ உன்னுடைய செல்வத்தின் மூலம் செய்ய வேண்டிய) கடமை அறிந்து கொள்” என்று கூறினார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் குறைத்துக் கூறுங்கள்” என்று வேண்டினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உறவினருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவர்களுடைய உரிமையை வழங்கி விடுவீராக. நீர் ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்” என்று கூறினார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! (ஸகாத்தை வசூலிப்பதற்காக வரும்) உங்களுடைய தூதரிடம் ஸகாத்தை நான் ஒப்படைத்து விட்டால் (ஸகாத்தை நிறைவேற்றும் கடமையாகிய) அதிலிருந்து நான் நீங்கி அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் சார்நதவனாகி விடுவேனா? எனக்கு இது போதுமானதாகி விடுமா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதரவர்கள், “ஆம்! நீ என்னுடைய தூதரிடம் அதனை ஒப்படைத்து விட்டால் அதிலிருந்து நீ நீங்கியவனாகி விட்டாய். அதனுடைய கூலி உனக்குக் கிடைத்துவிடும். அதனை எவன் (மோசடி செய்து) மாற்றுகிறானோ அவன் மீதுதான் அதனுடைய பாவம் இருக்கிறது” என்று கூறினார்கள். நூல்: அஹ்மத் 11945

தன்னுடைய செல்வத்தையே பிறருக்கு வாரி வழங்குபவன் ஒரு போதும் அடுத்தவரின் செல்வத்தை அநியாயமான முறையில் எடுப்பதற்கு ஆசைப்பட மாட்டான். அவனுடைய உள்ளம் ஸகாத்தின் மூலம் பரிசுத்தமாகி விடும்.

செல்வத்தைப் பரிசுத்தப்படுத்தும்

ஸகாத் உள்ளத்தை மட்டும் பரிசுத்தப்படுத்துவதில்லை. அது நம்முடைய செல்வத்தையும் சேர்த்தே பரிசுத்தப்படுத்துகிறது. நம்முடைய செல்வத்திலிருந்து நாம் ஸகாத்தை நிறைவேற்றி விடும்போது அந்தச் செல்வம் பரிசுத்தமாகி விடுகிறது. அதன் பிறகு அதனை நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தங்கத்தையும் வெள்ளியையும் யார் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது” என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை” என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் 1417

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள் தாம்” அறிவிப்பவர்: அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1945

நாம் நம்முடைய செல்வத்திற்கு ஸகாத்தை வழங்கி விடுவதன் மூலம் நம்முடைய செல்வம் பரிசுத்தமானதாகி விடுகின்றது. ஸகாத்தின் மூலம் நம்முடைய செல்வம் பரிசுத்தமாவதன் காரணத்தினாலேயே நபியவர்கள் ஸகாத்தினை செல்வத்தின் அழுக்குகள் என்று குறிப்பிடுகிறார்கள். மகத்தான கூலி

தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.

அல் குர்ஆன் 4:162

மறுமைக்கான டெபாஸிட்

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 2:110

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 74:20

மறுமையில் கவலையில்லை

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 2:277

ஸகாத் பாவங்களை அழிக்கும்

இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தான். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். “நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களை சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். “உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்” என்று அல்லாஹ் கூறினான். அல்குர்ஆன் 5:12

சொர்க்கத்தில் நுழைவிக்கும்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செயல்படுத்தினால் அது என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்க வேண்டும்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை நீங்கள் வழங்க வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்தால் கட்டாயம் இவர் சொர்க்கம் சென்று விடுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)

நூல்: முஸ்லிம் 14, புகாரி 1396

உலகிலேயே சொர்க்கவாசியானவர்

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள்! நான் அதைச் செயல்படுத்தினால் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அந்த மனிதர், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு போதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்கவும் மாட்டேன்” என்று கூறினார்.

அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ!) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 15

நிம்மதியாக சொர்க்கம் செல்லலாம்

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் உரையாற்றும் போது நான் செவியுற்றேன். அவர்கள் கூறினார்கள்: (மக்களே) உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களுடைய ஐந்து (நேரத் தொழுகைகளை) தொழுது கொள்ளுங்கள், உங்களுடைய (ரமலான்) மாதத்தில் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள், உங்களுடைய செல்வத்தின் ஸகாத்தை நிறைவேற்றுங்கள், உங்களில் அதிகாரமுடையவர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) கட்டுப்படுங்கள், உங்களுடைய இரட்சகனின் சொர்க்கத்தில் நீங்கள் நுழைவீர்கள். நூல்: திர்மிதி 559

ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s