திருக்குர்ஆன் விளக்கவுரை


பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4701

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும்ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்: (சுஃப்யான்(ரஹ்) அல்லாத) மற்றவர்களின் அறிவிப்பில், ‘(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன்கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்’ என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது.

(இறைக் கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தை விட்டு பீதி அகற்றப்படும் போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், ‘நம் இறைவன் என்ன சொன்னான்?’ என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், ‘(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்’ என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்கள் செவியேற்று விடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்து கொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக் கேட்கின்றனர்.

சுஃப்யான்(ரஹ்) (தம் அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தம் வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள்.

அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தன் சகாவிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற்குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாக பூமிவரை அதைச் சேர்த்து விடுகிறார்கள்.

சுஃப்யான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘கடைசியில் அது பூமிக்கு வந்து சேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகிறான். (இதைக் கேட்கும்) மக்கள், ‘இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?’ என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக் கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்’ என்று இடம் பெற்றுள்ளது. அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், ‘சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது’ எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனி(ரஹ்) கூறினார்: நான் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் இந்த ஹதீஸை அம்ர் இப்னு தீனாரிடம் கேட்டபோது, அன்னார் இக்ரிமாவிடமும், இக்ரிமா அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமும் கேட்டதாகத் தெரிவித்தாரா?’ என வினவினேன். அதற்கு சுஃப்யான் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மேலும், நான் சுஃப்யான் அவர்களிடம் ‘இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள ‘ஃபுஸ்ஸிஅ’ (பீதி அகற்றப்படும் போது) எனும் சொல்லை நபி(ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (‘ஃபுஸ்ஸிஅ’ என்று) ஓதினார்கள் என நீங்கள் குறிப்பிட்டதாக ஒருவர் அறிவித்தாரே! (அது சரிதானா?)’ என்று வினவினேன். அதற்கு அன்னார் ‘அம்ர் இப்னு தீனார் அவர்கள் இவ்வாறுதான் ஓதினார்கள். ஆனால், அம்ர் (இக்ரிமாவிடமிருந்து) இவ்வாறுதான் செவிமடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது. இதுவே, எங்களின் ஓதல் முறையாகும்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4702

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஹிஜ்ர்’ வாசிகளைக் குறித்து, ‘இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும்போது அழுதுகொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப் போவதில்லையென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டி விடாமலிருக்க அவர்(களின் வசிப்பிடங்)களைக் கடந்து செல்லாதீர்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4703

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் நிலையில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், ‘(நான் அழைத்தவுடன்) நீ ஏன் என்னிடம் வரவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘நான் தொழுது கொண்டிருந்தேன்’ என்று சொன்னேன். அப்போது அவர்கள், ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்’ என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உனக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?’ என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அன்னார் சொன்னதை) நினைவு படுத்தினேன். அவர்கள், ‘அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ (என்று தொடங்கும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் தான்) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனுமாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4704

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4705

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 15:91 வது) வசனம் வேதக்காரர்களைக் குறிக்கிறது. அவர்கள் (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாகப் பிரித்துக்கொண்டு, அதில் (தமக்கு இசைவான) சிலவற்றை நம்பி ஏற்றார்கள். (இசைவில்லாத) சிலவற்றை ஏற்க மறுத்து விட்டார்கள் என ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4706

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘(தம்) வேதத்தைப் பலவாறாகப் பிரித்தோர் மீது (முன்னர்) நாம் (வேதனையை) இறக்கியதைப் போன்றே’ எனும் (திருக்குர்ஆன் 15:90 வது) வசனம் (வேதக்காரர்களான) யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. அவர்கள் (தம் வேதத்தில்) சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை மறுத்தார்கள். இதை அபூ சுப்யான் ஹுஸைன் இப்னு ஜுன்துப்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4707

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத் தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4708

அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார். இப்னு மஸ்வூத்(ரலி), பனூ இஸ்ராயீல், கஹ்ஃப் மற்றும் மர்யம் ஆகிய அத்தியாயங்கள் குறித்துக் கூறுகையில், ‘இவை அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் உள்ளவையாகும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் அடங்கும்’ என்று குறிப்பிட்டார்கள்.

(இந்த அத்தியாயத்தில் 56 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஸயுன்ஃம்ளுன’ எனும் சொல்லுக்கு, ‘(தலையை) அசைப்பார்கள்’ என்று பொருள்.

(இதே வார்த்தையின் இறந்தகால வினைச் சொல்லான) ‘நஃகளத் சின்னுக்க’ என்பதற்கு ‘உன் பல் அசைந்தது’ என்று பொருள் – என மற்றவர்கள் கூறுகிறார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4709

அபூ ஹுரைரா(ரலி), அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஈலியா’ (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாரிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக் கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் ‘உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4710

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இரவின் ஒரு சிறு பகுதியில் நான் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றுவந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவின்) ‘ஹிஜ்ர்’ எனும் (வளைந்த) பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தப்படியே அதன் அடையாளங்களை அவர்களுக்கு விவரிக்கலானேன் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸ¤ஹ்ரீ(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘இரவில் நான் பைத்துல் மக்திஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் குறைஷியர் என்னை நம்பமறுத்தனர். (அப்போது நான் ‘ஹிஜ்ர்’ பகுதியில் நின்றிருந்தேன்.)’ என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

(திருக்குர்ஆன் 17:68 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காஸிஃப்’ எனும் சொல்லுக்கு ‘எல்லாவற்றையும் பிடுங்கி எறியும் பலத்த காற்று’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4711

அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அறிவித்தார். அறியாமைக் காலத்தில், ஒரு குலத்தாரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால், ‘அமிர பனூ ஃபுலான்’ (இன்ன குலத்தார் எண்ணிக்கையில் பெருகிவிட்டார்கள்) என்று கூறிவந்தோம்.

மற்றோர் அறிவிப்பில் ‘(அமிர என்பதற்கு பதிலாக) ‘அமர’ என்று காணப்படுகிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4712

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு ‘நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்து கொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) ‘உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், ‘(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.

எனவே மனிதர்கள், ஆதம்(அலை) அவர்களிடம் சென்று, ‘நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு ‘ஆதம்(அலை) அவர்கள் (‘நான் செய்ததவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம்கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப்போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது’ என்று கூறிவிட்டு ‘நீங்கள் வேறெவரிடமாவது சொல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.

உடனே மக்களும் நூஹ்(அலை) அவர்களிடம் சென்று ‘நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான்.எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு நூஹ்(அலை) அவர்கள் ‘என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்து விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!’ (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

அவ்வாறே மக்களும் மூஸா(அலை) அவர்களிடம் சென்று ‘மூஸாவே நீங்கள் இறைத்தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தினை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப் படுத்தியுள்ளான். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள் ‘இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் சொல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, ‘ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஈசா(அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை – (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் – நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (எனவே,) நீங்கள் வேறெவரிடமாவது சொல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

அப்போது மக்கள் என்னிடம் வந்து ‘முஹம்மதே! நீங்கள் இறைத்தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களின் முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கம் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி ‘இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்’ என்பேன். அதற்கு ‘முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம்’ என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரண்டு பக்கங்களுக்கிடையேயான தூரம் ‘மக்காவிற்கும் (யமனிலுள்ள) ‘ஹிகியர்’ எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ அல்லது ‘மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ தூரமாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4713

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் – முழுவதையும் ஓதிவிடுவார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4714

அபூ மஅமர்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ‘இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களின் (உண்மையான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமானவர் யார் என்பதற்காக அவனுடைய நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 17:57 வது) வசனம் குறித்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் ‘ஜின்’ இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தம் (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ’17:56 வது வசனம் குறித்து விளக்கமளிக்கையில்…’ என்று காணப்படுகிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4715

அபூ மஅமர்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ‘இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாய்) அழைக்கின்றனரோ அவர்களே கூடத் தங்களின் (உண்மையான) இறைவனது நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்’ எனும் (திருக்குர்ஆன் 17:57 வது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்: ‘ஜின்’ இனத்தாரில் சிலர் (மனிதர்கள் சிலரால்) வணங்கப்பட்டு வந்தனர். பின்னர் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4716

இக்ரிமா(ரஹ்) அறிவித்தார். ‘(நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்) காட்சியையும், சபிக்கப்பட்ட மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்’ எனும் (திருக்குர்ஆன் 17:60 வது) வசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: இது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாருக்குக் காட்டப்பட்ட கண்கூடான காட்சியைக் குறிக்கிறது. ‘சபிக்கப்பட்ட மரம்’ என்பது ‘சப்பாத்திக் கள்ளி’ மரத்தைக் குறிக்கிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4717

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவர் தனியாகத் தொழுவதை விடக் கூட்டாகத் தொழுது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அதிகாலைத் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள். இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), ‘நீங்கள் விரும்பினால், ‘(நபியே!) அதிகாலையில் ஓதுவதைக் கடைப்பிடியுங்கள். (ஏனெனில்,) அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும்’ எனும் (திருக்குர்ஆன் 17:78 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4718

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மக்கள் மறுமை நாளில் பல குழுக்களாக ஆம்விடுவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தத்தம் நபியைப் பின்தொடர்ந்து சென்று, ‘இன்னாரே (எங்களுக்காக அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள்’ என்று கேட்பார்கள். (ஒவ்வொருவராகத் தம்மால் இயலாதென்று மறுத்துக்கொண்டே வர) இறுதியில் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரை (கோரிக்கை) செல்லும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள்.) நபியவர்களை அல்லாஹ் (‘மகாமு மஹ்மூத்’ எனும்) உயர் அந்தஸ்திற்கு அனுப்பும் நாளில் இது நடக்கும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4719

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது ‘இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தான (சொர்க்கத்தின்) உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அன்னாருக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை அனுப்பி வைப்பாயாக!’ என்று பிரார்த்திக்கிறவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும். இதை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4720

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறையில்லம் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருந்த நிலையில், நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்தார்கள். தம் கரத்திலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தியபடி, ‘சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதே!’ என்றும் ‘உண்மை வந்துவிட்டது; அசத்தியம் புதிதாக ஒன்றையும் செய்து விடவுமில்லை; (இனி) அது மீண்டும் ஒருமுறை பிறக்கப் போவதுமில்லை’ என்றும் கூறலானார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4721

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரீச்சந்தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) ‘இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்’ என்றார். மற்றவர், ‘உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது?’ என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் ‘நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)’ என்றார். பின்னர், (அனைவரும் சேர்ந்து) ‘அவரிடம் கேளுங்கள்’ என்றனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் உயிரை (ரூஹைப்) பற்றிக் கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் மெளனமாக இருந்து விட்டார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என அறிந்துகொண்டேன். எனவே, நான் என்னுடைய இடத்திலேயே எழுந்து நின்று கொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள், ‘(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையினால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது’ எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4722

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி), ‘(நபியே!)’ உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) இறைவசனம் தொடர்பாகக் கூறினார்கள்: ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருதி) மக்காவில் தம் தோழர்களுடன் மறைந்து தொழும்போது குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்கள். அதை இணைவைப்பவர்கள் கேட்கும்போது, குர்ஆனையும் அதை இறக்கியருளிய இறைவனையும், அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். எனவே, உயர்ந்தவனாகிய அல்லாஹ் தன் நபியிடம் ‘நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தாதீர்கள். அதாவது உரத்த குரலில் ஓதாதீர்கள். (ஏனெனில்,) இணைவைப்போர் அதைக் கேட்டுவிட்டு குர்ஆனை ஏசுவார்கள். (அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு ஒரேயடியாகக் குரலைத் தாழ்த்தவும் செய்யாதீர்கள். இவ்விரண்டுக்குமிடையே, மிதமான போக்கைக் கைக்கொள்ளுங்கள்’ என்று கூறினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4723

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார். ‘இந்த (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம், பிரார்த்தனை (துஆ எனும் வேண்டுதல்) தொடர்பாக அருளப் பெற்றது’ என ஆயிஷா(ரலி) கூறினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4724

அலீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடமும், ஃபாத்திமாவிடமும் இரவு நேரத்தில் வந்து, ‘நீங்கள் இருவரும் (‘தஹஜ்ஜுத்’) தொழவில்லையா?’ என்று கேட்டார்கள்.

(திருக்குர்ஆன் 18:22 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரஜ்மம் பில் ஃகைப்’ (மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர்களை போல்) என்பதன் கருத்தாவது: (குகைவாசிகள் எத்தனைபேர் என்பது பற்றிய உண்மை நிலை) அவர்களுக்குத் தென்படவில்லை.

(திருக்குர்ஆன் 18:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபுருத்’ எனும் சொல்லுக்குக் ‘கவலைக்குரியது’ என்று பொருள்.
(திருக்குர்ஆன் 18:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சுராதிக்’ எனும் சொல்லுக்கு ‘(நரகத்தின் ஜுவாலை) கூடாரங்களையும், கூடாரங்களால் சூழப்பட்ட அறையையும் போன்று (அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்)’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:37 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹாவிருஹு’ (அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்) எனும் சொல் ‘முஹாவரா’ (உரையாடல்) எனும் வேர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும்.

(திருக்குர்ஆன் 18:38 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லாகின்ன ஹுவல்லாஹு ரப்பீ’ எனும் தொடருக்கு ‘லாகின் அன ஹுவல்லாஹு ரப்பீ’ (நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னைப் படைத்துப் பராமரிப்பவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன்) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கிலாலஹுமா எனும் சொல்லுக்கு ‘அவ்விரண்டுக்கும் இடையே’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:40 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸலக்’ எனும் சொல்லுக்கு ‘யாரும் காலூன்றி நிற்கமுடியாத அளவுக்கு வழுவழுப்பானது’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:44 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல் வலாயா’ (அதிகாரம்) எனும் சொல், ‘அல்வல்யு’ எனும் வேர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும். (இதே வசனத்திலுள்ள) ‘உக்பன்’ எனும் சொல்லுக்கு ஆகிபத், உக்பா, உக்பத் ஆகிய சொற்களும் ஒன்றாகும். இவற்றுக்கு ‘முடிவு’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:55 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குபுல்’ மற்றும் (இன்ன பிற ஓதல் முறைகளில் வந்துள்ள) கபல், கிபல் ஆகிய சொற்களுக்குக் ‘(கண்) எதிரில்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:56 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லியுத்திஹளு’ எனும் சொல்லுக்கு ‘வீழ்த்தி விடுவதற்காக’ என்று பொருள். (இச்சொல்) ‘வழுக்கி விடுதல்’ எனும் பொருள் கொண்ட ‘தஹள்’ எனும் வேர்ச் சொல்லிருந்து வந்ததாகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4725

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘களிர் (அலை) அவர்களின் தோழரான மூஸா, இஸ்ரவேலர்களின் இறைத்தூதரான மூஸா(அலை) அல்லர். (அவர் வேறொரு மூஸா) என்று (பேச்சாளரான) நவ்ஃப் அல்பிகாலி கூறுகிறாரே!’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), ‘அல்லாஹ்வின் விரோதி பொய் உரைத்து விட்டார். உபை இப்னு கஅப்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செவிமடுத்ததாக எமக்கு அறிவித்தார்கள்.

(ஒரு முறை) மூஸா (அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?’ என்று வினவப்பட்டது. அதற்கு மூஸா(அலை) அவர்கள், ‘நானே’ என்று பதிலளித்து விட்டார்கள். எனவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில் மூஸா(அலை) அவர்கள் ‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு’ என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு, ‘(இல்லை;) இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்’ என்று அறிவித்தான்.

மூஸா(அலை) அவர்கள், ‘என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ‘நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்!) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவற விடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்’ என்று சொன்னான். எனவே, மூஸா(அலை) அவர்கள் ஒரு கூடையில் மீனை எடுத்துக்கொண்டு நடந்தார்கள். தம்முடன் தம் உதவியாளர் யூஷஉ இப்னு நூனையும் அழைத்துக் கொண்டார்கள். இருவரும் (இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு இருவரும் தலைவைத்து உறங்கினார்கள். கூடையிலிருந்த அந்த மீன் கூடையிலிருந்து குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துக் கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. நீரோட்டத்தை மீனைவிட்டு அல்லாஹ் தடுத்துவிடவே அதைச் சுற்றி ஒரு வளையம் போல் நீர் ஆகிவிட்டது.

மூஸா(அலை) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தபோது அன்னாருடைய தோழர் மீனைப் பற்றி அன்னாருக்குத் தெரிவிக்க மறந்து விட்டார். எஞ்சிய பகலிலும் இரவிலும் அவர்கள் ‘(தம் பயணத்தில்) தொடர்ந்து) நடந்தனர். மறுநாள் ஆனபோது மூஸா தம் உதவியாளரை நோக்கி, ‘நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வாரும்! நாம் நம்முடைய இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்’ என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 18:62)

அல்லாஹ் தமக்குக் கட்டளையிட்ட (இடத்)தை தாண்டிச் செல்லும் வரை, மூஸா(அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை. அவர்களின் உதவியாளர் ‘நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்ததையான விதத்தில் தன் வழியை அமைத்துக் கொண்டது’ என்று கூறினார். (திருக்குர்ஆன் 18:63)

‘அது மீனுக்குப் பாதையாகவும் மூஸா(அலை) அவர்களுக்கும் அன்னாருடைய உதவியாளருக்கும் வியப்பாகவும் அமைந்தது. அதற்கு மூஸா(அலை) அவர்கள் ‘அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடம்’ என்று கூறினார்கள். உடனே, அவர்களிருவரும் தங்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில் அந்தப் பாறைக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் மூடிக்கொண்டபடி ஒருவர்(களிர்) இருந்தார். மூஸா(அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர் (களிர்) ‘உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?’ என்று வினவினார்.

அதற்கு மூஸா(அலை) அவர்கள், ‘நானே மூஸா’ என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், ‘பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூஸாவா?’ என்று கேட்டார். மூஸா(அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, ‘உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், ‘உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூஸாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்; அல்லாஹ் உங்களுக்கும் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4726

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்துகொண்டிருந்தபோது அவர்கள், ‘என்னிடம் (ஏதேனும் விளக்கம் கேட்க நினைத்தால்) கேளுங்கள்!’ என்றார்கள். நான், ‘அபூ அப்பாஸ் அவர்களே!’ அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! (இராக்கிலுள்ள) ‘கூஃபா’நகரில் கதை சொல்லும் மனிதர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ‘நவ்ஃப்’ என்று சொல்லப்படும். அவர், (களிர்(அலை) அவர்களின் தோழரான) மூஸா(அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூஸா(அலை) அவர்கள் அல்லர்; (அவர் வேறொரு மூஸா தாம்)’ என்று கூறுகிறார்’ என்று சொன்னேன்.

அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை இப்னு கஅப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள். ஒருநாள் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் (தம் சமுதாய) மக்களுக்கு, (இறைவன் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை) நினைவூட்டிக் கண்கள் ததும்ப இதயங்கள் நெம்ழ்ந்துருகும் அளவுக்கு உபதேசித்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து சேர்ந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! பூமியில் உங்களைவிட அறிந்தவர் எவரேனும் உண்டா?’ என்று கேட்டார். மூஸா(அலை) அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். எனவே, மூஸா(அலை) அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூஸா(அலை) அவர்கள் ‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு’ என பதிலளிக்காமல்விட்டுவிட்டார்கள். எனவே, மூஸா(அலை) அவர்களிடம், ‘இல்லை. (உம்மைவிட அறிந்தவர் ஒருவர் பூமியில் இருக்கிறார்)’ என்று (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) சொல்லப்பட்டது. மூஸா(அலை) அவர்கள், ‘என் இறைவா! எங்கே (அவர் இருக்கிறார்)?’ என்று கேட்க, இறைவன், ‘இரண்டு கடல்கள் சங்கமிக்குமிடத்தில் (அவர் இருக்கிறார்)’ என்றான். மூஸா(அலை) அவர்கள், ‘என் இறைவா! நான் அவரைப் புரிந்துகொள்ள அடையாளமொன்றை எனக்கு ஏற்படுத்துவாயாக!’ என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்: ‘மீன் உங்களைவிட்டுப் பிரிகிற இடத்தில் (அவர் இருப்பார்) என அல்லாஹ் கூறினான்’ என்று அறிவிப்பாளர் அம்ர் இப்னு தீனார் என்னிடம் கூறினார்கள். ‘உயிரற்ற மீன் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள்; அதற்கு உயிரூட்டப்படும் இடமே (அவர் இருக்கும் இடமாகும்) என அல்லாஹ் கூறினான்’ என்று யஅலா இப்னு முஸ்லிம்(ரஹ்) என்னிடம் கூறினார்கள். ஆக, மூஸா(அலை) அவர்கள் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு (‘ஒஷஉபின் நூன்’ எனும்) தம் உதவியாளரிடம், ‘மீன் உம்மைவிட்டுப் பிரிந்துவிடும் இடத்தை நீர் எனக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதைத் தவிர வேறெந்தச் சிரமத்தையும் உமக்கு நான் தரமாட்டேன்’ என்றார்கள்.

உதவியாளர், ‘(எனக்கு) நீங்கள் அதிகமான சிரமத்தைத் தரவில்லை’ என்றார். ‘மூஸா தம் உதவியாளரை நோக்கி..’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 18:60 வது) இறைவசனம் இதையே குறிப்பிடுகிறது. உதவியாளர் என்பது யூஷஉ இப்னு நூனைக் குறிக்கிறது. அவரின் பெயர் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இல்லை. மூஸா(அலை) அவர்கள் ஈரப்பசை மிகுந்த ஓரிடத்தில் பாறையொன்றின் நிழலில் இருந்து கொண்டிருந்தபோது அந்த மீன் (உயிர் பெற்றுக் கடலில்) துள்ளிக் குதித்தது. அப்போது மூஸா(அலை) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உதவியாளர், ‘தாமாக விழித்தெழும் வரை நான் இவர்களை எழுப்பமாட்டேன்’ என்று சொல்லிக்கொண்டார். இறுதியில் (மீன் உயிர் பெற்றுவிட்ட செய்தியை) அவர்களுக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார். மீன் (கூடையிலிருந்து) துள்ளிக் குதித்துக் கடலினுள் நுழைந்துகொண்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட, மீன் சென்ற அடையாளம் கல்லில் பதிந்தது போலானது.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார். என்னிடம் அம்ர் இப்னு தீனார்(ரஹ்), ‘அந்த மீன் சென்ற (வழியின்) அடையாளம் வளையம் போலாகி விட்டது’ என்று கூறியவாறு தம்மிரு பெருவிரல்களையும் அவற்றை அடுத்துள்ள இரண்டு (ஆட்காட்டி) விரல்களையும் வளையமிட்டு இவ்வாறெனக் காட்டினார்கள். (மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். மறுநாள் புலர்ந்தபோது, மூஸா(அலை) அவர்கள் தம் உதவியாளரிடம், ‘நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா!) நாம் நம்முடைய இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்’ என்று கூறினார்கள். அதற்கு உதவியாளர், (மூஸா(அலை) அவர்களிடம்,)’ அல்லாஹ் உங்களிடமிருந்து களைப்பை அகற்றி விட்டான்’ என்று கூறினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4727

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘இறைத்தூதரான மூஸா(அலை) அவர்கள், களிரைச் சந்தித்த மூஸா(அலை) அல்லர்(; அவர் வேறொரு மூஸா) என்று (பேச்சாளர்) நவ்ஃப் அல்பிகாலி கூறுகிறார்’ என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), ‘அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை இப்னு கஅப்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்தார்கள்:

(ஒருமுறை) மூஸா(அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘மக்களில் மிகவும் அறிந்தவர் யார்?’ என்று வினவப்பட்டது. அதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘நானே’ என்று பதிலளித்து விட்டார்கள். எனவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூஸா(அலை) அவர்கள் ‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு’ என்று சொல்லாமல்விட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு, ‘இல்லை; இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்’ என்று அறிவித்தான். அதற்கு அல்லாஹ், ‘நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம்செய்யுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவற விடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார். அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்’ என்று சொன்னான்.

எனவே, மூஸா(அலை) அவர்கள் தம் உதவியாளர் ‘ஒஷஉ இப்னு நூனுடன்’ அந்த மீன் சம்தமாகப் புறப்பட்டு (இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்து அதனருகில் ஓய்வெடுத்தனர். உடனே மூஸா(அலை) அவர்கள் தம் தலையை வைத்து (படுத்து) உறங்கியும்விட்டார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், ‘மேலும் அந்தப் பாறைக்கடியில் ஒரு நீருற்று இருந்தது. அதற்கு ‘ஜீவ நீருற்று’ எனப்படும். அதன் நீர் பட்ட எந்தப் பொருளும் உயிர் பெறாமல் இருக்காது. அவ்வாறே அந்த மீனின் மீதும் அந்த ஊற்றின் நீர்பட்டது’ என்று காணப்படுகிறது. உடனே, அந்த மீன் (உயிர் பெற்று) அசைந்து, கூடையிலிருந்து நழுவி கடலுக்குள் புகுந்தது. மூஸா(அலை) அவர்கள் கண் விழித்தபோது தம் உதவியாளரை நோக்கி, ‘நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா! நாம் நம்முடைய இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்’ என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 18:62)

தமக்குக் கட்டளையிடப்பட்ட (இடத்)தைத் தாண்டிச் செல்லும்வரை மூஸா(அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை. உதவியாளர் யூஷஉ இப்னு நூன் மூஸா(அலை) அவர்களிடம், ‘நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தன் வழியை அமைத்துக் கொண்டது’ என்று கூறினார். அதற்கு மூஸா, ‘நாம் தேடி வந்த இடம் அதுதான்’ என்று கூறினார். (திருக்குர்ஆன் 18:63, 64)
எனவே, அவர்களிருவரும் தங்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். (மீன் நழுவிய பாறைக்கு அருகிலிருந்த கடற்பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது) மீன் (நீந்திச்) சென்ற இடத்தில் (இருந்த தண்ணீர்) வளையம் போலிருக்கக் கண்டனர். மூஸா(அலை) அவர்களின் உதவியாளருக்கு அது வியப்பாகவும், மீனுக்கு அது (தப்பும்) வழியாகவும் இருந்தது. அவர்கள் இருவரும் அந்தப் பாறைக்குப் போய்ச் சேர்ந்தபோது அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் (போர்த்தி) மூடிக் கொண்டபடி ஒருவர் (களிர்) இருந்தார். மூஸா(அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர் ‘உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?’ என்று வினவினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4728

முஸ்அப் இப்னு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரஹ்) அறிவித்தார். நான் என் தந்தை (ஸஅத் இப்னு அபீ வக்காஸ்) அவர்களிடம் ‘இந்த (திருக்குர்ஆன் 18:103 வது) வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், ‘ஹரூரிய்யாக்களா? என்று கேட்டேன்.அதற்கு அவர்கள், ‘(ஹரூரிய்யாக்கள்) இல்லை; யூதர்களும் கிறிஸ்தவர்களும் தாம் அவர்கள். யூதர்கள், முஹம்மத்(ஸல்) அவர்களை ஏற்க மறுத்தார்கள். கிறிஸ்தவர்களோ சொர்க்கத்தை நிராகரித்துள்ளார்கள்; அங்கு உணவோ, பானமோ கிடையாது என்று கூறினார்கள்.’ஹரூரிய்யாக்களே’, அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தபின் அல்லாஹ்வுடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறிப்பவர்கள் ஆவார்கள்’ என்று கூறினார்கள்.

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஹரூரிய்யாக்களை ‘பாவிகள்’ என்று குறிப்பிட்டு வந்தார்கள். (‘இறைமறுப்பாளர்கள்’ என்று கூறுவதில்லை.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4729

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். ‘மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்க மாட்டோம்’ எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4730

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், ‘சொர்க்கவாசிகளே!’ ‘இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார். அவர்கள், ‘ஆம்! இதுதான் மரணம்’ என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.

பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: ‘நரகவாசிகளே!’ என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் ‘இதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்பார். அவர்கள், ‘ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்’ என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டு விடும். பிறகு அவர், ‘சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை’ என்று கூறுவார்.

இதை அறிவித்த அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்: இதைக் கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள், ‘(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்று இருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 19:39 வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், ‘இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்’ என்றும் கூறினார்கள்

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4731

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: ‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?’ என்று கேட்டார்கள். அப்போதுதான் ‘(நபியே!) உங்களுடைய இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்களுடைய இறைவன் மறப்பவன் அல்லன்’ எனும் (திருக்குர்ஆன் 19:64 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4732

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார். ‘ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவர் எனக்குத் தர வேண்டியிருந்த ஒரு கடனைக் கேட்டு அவரிடம் நான் சென்றேன். ‘நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை, நான் உனக்குத் தரமாட்டேன்’ என்று அவர் கூறினார். நான், ‘நீ இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்’ என்று கூறினேன். அவர் ‘நான் இறந்து மீண்டும் எழுப்பப்படுவேனா?’ என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன். அதற்கவர், ‘அப்படியாயின், எனக்கு அங்கேயும் செல்வமும் சந்ததியும் கிடைக்கும். அப்போது உனக்குத் தரவேண்டிய கடனை நான் செலுத்தி விடுகிறேன்’ என்று கூறினார். அப்போதுதான் ‘(நபியே!) நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீங்கள் பார்த்தீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 19:77 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4733

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார். நான் மக்காவில் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். அப்போது ‘ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவருக்கு வாள் ஒன்றைச் செய்து கொடுத்தேன். பின்னர், அதற்கான கூலியைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், நீ முஹம்மதை நிராகரிக்காத வரை உனக்குத் தரமாட்டேன்’ என்று கூறினார். நான், ‘உன்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து, பிறகு உயிர்கொடுக்கும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்’ என்று சொன்னேன். அதற்கவர் ‘என்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து பிறகு என்னை எழுப்பினால், அப்போதும் எனக்கு செல்வமும் சந்ததியும் இருக்கும்’ என்று கூறினார். உடனே அல்லாஹ்: ‘நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா?’ எனும் (திருக்குர்ஆன் 19:77, 78) வசனங்களை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4734

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார். நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. நான் திருப்பித் தரும்படி கேட்டு அவரிடம் சென்றேன். அவர் ‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரைi நான் உனக்குத் தரமாட்டேன்’ என்று கூறினார். நான் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ மறுமையில் உயிரூட்டப்பட்டு எழுப்பப்படும் வரை நான் முஹம்மத்(ஸல்) அவர்களை நிராகரிக்க மாட்டேன்’ என்றேன். அவர், ‘அப்படியாயின், நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை என்னைவிட்டு விடு! பின்பு மறுமையில், எனக்குச் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படும். அப்போது நான் உன்னுடைய கடனைச் செலுத்துவேன்’ என்று கூறினார். அப்போதுதான் ‘நம் வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? மறைவானவற்றை அவன் அறிந்து கொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? எனும் (திருக்குர்ஆன் 19:77, 78 வது) வசனங்கள் இறங்கின.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4735

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார். நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. எனவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் ‘நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உன்னுடைய கடனைச் செலுத்தமாட்டேன்’ என்று கூறினார். நான், ‘நிர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒருபோதும் நிராகரிக்கமாட்டேன்’ என்று சொன்னேன். அதற்கவர் ‘இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா? அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும்போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன்’ என்று கூறினார். அப்போதுதான்’ நம் வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவானவற்றை அறிந்துகொண்டானா? அல்லது, கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? இல்லை; அவன் சொல்வதை நாம் எழுதி வைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம். அவன் (தன் உடைமைகள் எனப் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியனவாகி விடும். அவன் (செல்வம் சந்ததி எதுவுமின்றி) தனியாகவே நம்மிடம் வருவான்’ எனும் (திருக்குர்ஆன் 19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4736

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம், ‘நீங்கள் தாம் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா?’ என்று கேட்டார்கள். ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், ‘அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்து தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?’ என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் ‘ஆம்’ (கண்டேன்) என்றார்கள். இப்படி(ப் பேசி) மூஸா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(திருக்குர்ஆன் 20:39 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல் யம்மு’ எனும் சொல்லுக்குக் ‘கடல்’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4737

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் ‘இதுதான் மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘இவர்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். எனவே, நீங்கள் இந்நாளில் நோன்பு வையுங்கள்’ என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4738

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள் தாமே!’ என்று மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம்(அலை) அவர்கள் ‘மூஸா! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் ‘எழுதிவிட்ட’ அல்லது ‘விதித்துவிட்ட ‘ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறீர்கள்’ என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஆதம் (அலை) அவர்கள் (தம் இந்த பதிலால்) மூஸா(அலை) அவர்களைத் தோற்கடித்து விட்டார்கள்’ என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4739

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம், தாஹா மற்றும் அல்அன்பியா ஆகிய அத்தியாயங்கள் அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் அடங்கும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் உள்ளவையாகும்.

கத்தாதா(ரஹ்) கூறினார்: (திருக்குர்ஆன் 21:58 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுஃதாதன்’ எனும் சொல்லுக்குத் ‘துண்டு துண்டாக்கினார்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலக்’ எனும் சொல்லி(ன் விளக்கவுரையி)ல் ஹஸன் அல்பஸரீ(ரஹ்) ‘நூற்பு இயந்திரத்தின் தகளி போல் (சுழன்றபடி கோள்கள் அனைத்தும் அதன்னுடையன் நீள்வட்டப்பாதையில் நீந்திச் செல்கின்றன)’ என்று கூறினார்கள். ‘யஸ்பஹ_ன்’ எனும் சொல்லுக்குச் ‘சுற்றுகின்றன’ என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (திருக்குர்ஆன் 21:78 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஃபஷத்’ எனும் சொல்லுக்கு ‘மேய்ந்தது’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:43 வது வசனத்தின் மூலத்திலள்ள ‘வலா ஹும் மின்னா) யுஸ்ஹபூன்’ எனும் சொல்லுக்கு ‘(எம்முடைய வேதனையிலிருந்து) அவர்கள் தடுக்கப்படமாட்டார்கள்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:92 வது வசனத்திலுள்ள) ‘நீங்கள் யாவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே’ என்பதற்கு ‘நீங்கள் யாவரும் ஒரே மார்க்கத்தைச் சேர்ந்தவர்களே’ என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்: (திருக்குர்ஆன் 21:98 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹஸப்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘விறகு’ என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்: (திருக்குர்ஆன் 21:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹஸ்ஸ_’ (உணர்ந்தனர்) எனும் சொல்லுக்கு ‘அதை எதிர்பார்த்தனர்’ என்று பொருள். இச்சொல் ‘அஹஸஸ்த்து (இஹ்ஸாஸன்)’ எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். (இதற்கு ‘ஐம்புலன்களால் உணர்ந்தேன்’ என்று பொருள்.)

(திருக்குர்ஆன் 21:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காமிதீன்’ எனும் சொல்லுக்கு ‘அணைந்து போனவர்கள்’ என்று பொருள். ‘ஹஸீத்’ எனும் சொல்லுக்கு ‘வேரோடு அறுவடை செய்யப்பட்டது’ என்று பொருள். இச்சொல்லே ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூன்று நிலைகளுக்கும் பொருந்தும்.

(திருக்குர்ஆன் 21:19 வது வசனத்திலுள்ள) ‘அவர்கள் சோர்வடையமாட்டார்கள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘லா யஸ்தஸ்ஹிரூன்’ எனும் சொல்லுக்குரியதாகும். ‘ஹஸீர்’ (சோர்வடைந்தவன்), ‘ஹஸர்த்து பஈரீ’ (என் ஒட்டகத்தைக் களைப்படையச் செய்தேன்) ஆகிய சொற்கள் இதில் அடங்கும்.

(அடுத்த அத்தியாயத்தில் வரும் 22;27 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அமீக்’ எனும் சொல்லுக்குத் ‘தொலைவு’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4740

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, ‘(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் (செருப்பணியாத) வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, ‘விருத்த சேதனம்’ செய்யப்படாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்’ என்று கூறிவிட்டு, ‘முதலில் நாம் (அவர்களைப்) படைத்தது போன்றே (மறுமை நாளில்) நாம் அவர்களை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். நாம் இதனைச் செய்தே தீருவோம்’ எனும் (திருக்குர்ஆன் 21:104 வது) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு, மறுமை நாளில் உடை அணிவிக்கப்படும் முதல் மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’ என்று சொல்வேன். அதற்கு, ‘இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போல் ‘நான் அவர்களிடையே (வாழ்ந்துகொண்டு) இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய்’ என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்’ என்று கூறப்படும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4741

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் மறுமை நாளில் (ஆதி மனிதரை நோக்கி,) ‘ஆதமே!’ என்பான். அதற்கு அவர்கள், ‘என் இறைவா! இதோ வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன்’ என்று கூறுவார்கள். அப்போது ‘நீங்கள் உங்கள் வழித்தோன்றல்களிருந்து நரகத்திற்கு அனுப்பப்பட இருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான்’ என்று ஒருவர் அறைகூவல் விடுப்பார். ஆதம்(அலை) அவர்கள், ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)’ என்று பதிலளிப்பார். இப்படி அவர் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயரங்க சூல்நிலையின் காரணத்தால்) கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரை குறையாகப்) பிரசவித்து விடுவாள்; பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான். மக்களை போதையுற்றவர்களாய் நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், (அந்த அளவிற்கு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும்.’

நபியவர்கள் இவ்வாறு கூறியது (அங்கு கூடியிருந்த) மக்களுக்குச் சிரமமாக இருந்தது. (அச்சத்தினால்) அவர்களின் முகங்கள் நிறம் மாறிவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவருக்கு யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (தனியாகப் பிரிக்கப்படாமல், நரகம் செல்லும் குழுவிலேயே) இருப்பார்கள்’ என்று கூறிவிட்டு பிறகு, ‘நீங்கள் (மறுமை நாளில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்’ அல்லது ‘கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போன்றுதான்’ (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்’ என்று கூறினார்கள். பின்னர் ‘(என் சமுதாயத்தினராகிய) நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். உடனே நாங்கள் (மம்ழ்ச்சிஒட்டும் இந்த நற்செய்தி கேட்டு) ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். பிறகு நபியவர்களில், ‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒருபங்கினராக இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள். நாங்கள் (பெரும் மகிழ்ச்சியால் மீண்டும்,) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம். பிறகு நபியவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம்.

இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) இவ்வாறே காணப்படுகிறது. ஜரீர் இப்னு அப்தில் ஹமீத், ஈசா இப்னு யூனுஸ், அபூ முஆவியா(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், (இந்த 22:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘சுகாரா’ எனும் சொல்லுக்கு பதிலாக) ‘சக்ரா’ என்று காணப்படுகிறது. (பொருள் ஒன்றே).

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4742

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். ‘விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகிற சிலரும் மக்களிடையே உள்ளனர்’ எனும் (திருக்குர்ஆன் 22:11 வது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகையில், ‘சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர்களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, ‘இது (-இஸ்லாம்-) நல்ல மார்க்கம்’ என்று கூறுவார்கள். அவர்களின் மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டியிடவில்லையென்றால், ‘இது கெட்ட மார்க்கம்’ என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது)’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4743

கைஸ் இப்னு உபாதா(ரஹ்) அறிவித்தார். அபூ தர்(ரலி) ‘இவர்கள் தங்களின் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்கித்துக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 22:19 வது) வசனத்தொடர், பத்ருப் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) ஹம்ஸா மற்றும் அவர்களின் இரண்டு நண்பர்கள் (அலீ, உபைதா) விஷயத்திலும், (இறைமறுப்பாளர்களான) உத்பா மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் (ஷைபா, வலீத்) விஷயத்திலுமே அருளப்பெற்றது’ எனச் சத்தியமிட்டுக் கூறி வந்தார்கள். இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4744

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். (இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில், (அளவிலா அருளாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அறிவிப்பாளர் கைஸ் இப்னு உபாத்(ரஹ்) கூறினார்: இவர்களைக் குறித்தே, ‘இவர்கள் தங்களின் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்கித்துக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 22:19 வது) இறைவசனம் அருளப்பெற்றது. அவர்கள் பத்ருப்போரின்போது (களத்தில் இறங்கி) தனித்து நின்று போராடிய (முஸ்லிம்களான) அலீ, ஹம்ஸா, உபைதா(ரலி) ஆகியோரும் (மறுப்போரான) ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா ஆகியோரும் ஆவர்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4745

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ‘பனூ அஜ்லான்’ குலத்தாரின் தலைவராயிருந்த ஆஸிம் இப்னு அதீ(ரலி) அவர்களிடம் (அதே குலத்தைச் சேர்ந்த) ‘உவைமிர்’ என்பவர் வந்து ‘தன் மனைவியுடன் வேறொரு அன்னிய ஆடவன் (தகாத உறவுகொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த அன்னிய ஆடவனைக் கொன்று விடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழி வாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள்’ என்று கூறினார். எனவே, ஆஸிம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே!’ என்று (விஷயத்தைச் சொல்லி) கேட்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை (என்பதை உணர்ந்துகொண்டு திரும்பி வந்துவிட்டார்). நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என்று ஆஸிம்(ரலி) அவர்களிடம் உவைமிர்(ரலி) கேட்க, அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இத்தகைய கேள்விகளை விரும்பவில்லை; மேலும், இப்படிக் கேட்பதை அவர்கள் அசிங்கமாகக் கருதுகிறார்கள்’ என்று பதில் கூறினார்கள். உடனே உவைமிர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்காமல் ஓயமாட்டேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அன்னிய ஆடவன் இருக்கக் கண்டால் அவன் அம்மனிதனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டார்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் உம்முடைய விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் குர்ஆன் வசனத்தை அருளியுள்ளான்’ என்று கூறி, அவ்விருவருக்கும் அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிட்டுள்ள (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்யும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே, தம் மனைவி மீது (குற்றம் சாட்டி) உவைமிர்(ரலி) ‘லிஆன்’ செய்தார்கள். பிறகு ‘இறைத்தூதர் அவர்களே! நான் இவளை (விவாகரத்துச் செய்யாமல் என் மனைவியாகவே) வைத்திருந்தால், இவளுக்கு அநீதி இழைத்தவனாகி விடுவேன்’ என்று கூறிவிட்டு, அவளை விவாகரத்துச் செய்து விட்டார். இந்த வழிமுறையே அவர்களுக்குப் பின் ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியருக்கு முன் மாதிரியாகி விட்டது. பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘கவனியுங்கள்! கரு நிறமும் கன்னங்கரிய கண் பாவையும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையை இவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றி உண்மை பேசியதாகவே, கருதுகிறேன். அரணையைப் போல், சிவப்பான பிள்ளையை அவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றிப் பொய் பேசியதாகவே நான் கருதுவேன்’ என்று கூறினார்கள். பின்னர் உவைமிர் சொன்னதை மெய்ப்பிக்கும் விதத்தில் அவள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வர்ணித்த தோற்றத்திலேயே (கருநிறமும், கன்னங்கரிய கருவிழியும் தடித்த கால்களும் உடைய) பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இதனால் அக்குழந்தை தன் தாயுடன் இணைத்தே (‘இன்னவளின் மகன்’ என்று) அழைக்கப்படலாயிற்று.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4746

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டார். அப்போது அல்லாஹ் அந்தக் கணவன் மனைவி தொடர்பாகக் குர்ஆனில் தான் கூறியுள்ள ‘லிஆன்’ எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், ‘உம்முடைய விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப் பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் ‘லிஆன்’ செய்தார்கள். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்து விட்டார். (அன்றிலிருந்து) அந்த நிகழ்ச்சியே ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது. அப்பெண் கருவுற்றிருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை (‘தனக்குரியது’ என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டு வந்தான். பிறகு, அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகிற வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4747

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஹிலால் இப்னு உமய்யா(ரலி) (கர்ப்பவதியான) தம் மனைவியை ‘ஷரீக் இப்னு சஹ்மா’ என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்’ என்று கூறினார்கள். அதற்கு ஹிலால்(ரலி), ‘தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். என்னுடைய முதுகைக் கசையடிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்’ என்று கூறினார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி(ஸல்) அவர்களுக்கு ‘யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால்(ரலி) அவர்களின் மனைவி ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால்(ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகிறவர் யார்?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால்(ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி ‘இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்தி விடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)’ என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கி விடுவார் என்றே எண்ணினோம். ஆனால், பிறகு அவர், ‘காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை’ என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது ‘ஷரீக் இப்னு சஹ்மா’வுக்கே உரியதாகும்’ என்று கூறினார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், ‘இது பற்றிய இறைச்சட்டம் (‘லிஆன்’ விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4748

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் (உவைமிர்) தம் மனைவியின் மீது (விபசாரக்) குற்றம்சாட்டி அவளுடைய குழந்தையை (தன்னுடையதாக) ஏற்க மறுத்தார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் (‘சாப அழைப்புப் பிரமாணம்’ செய்திடுமாறு) உத்தரவிட்டார்கள். அவர்களும் (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ள முறைப்படி (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். பிறகு, நபி(ஸல்) அவர்கள் ‘குழந்தை அப்பெண்ணிற்குரியது’ என்று தீர்ப்பளித்து, ‘லிஆன்’ செய்த (கணவன், மனைவி) இருவரையும் (மண பந்தத்திலிருந்து) பிரித்து வைத்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4749

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப்பெரும் வேதனையுண்டு’ எனும் (திருக்குர்ஆன் 24:11 வது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்’ என்பானைக் குறிக்கிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4750

இப்னு யுஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸ¤ஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். என்னிடம் உர்வா இப்னு ஸ¤பைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா இப்னி மஸ்வூத்(ரஹ்) ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன கூறினார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா(ரலி) தூய்மையானவர்களென்று இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவிப்புச் செய்ததைப் பற்றியும் தெரிவித்தனர். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அவர்களில் சிலர் சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும், ஒருவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் மற்றவரின் அறிவிப்பு அமைந்திருந்தது.

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) தெரிவித்ததாக உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள். இவ்வாறே அவர்கள் தம் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். (அப்பயணத்தின்போது) நான் என்னுடைய ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன். அதில் நான் இருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கவும்படுவேன்.

நபி(ஸல்) அவர்கள் அநத்ப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள்மதீனாவை நெருங்கியபோது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள். அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக்கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன்.

அப்போது (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ‘ழஃபாரி’ நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டது. எனவே, நான் (திரும்பிச் சென்று) என்னுடைய மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக் கொண்டிருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது. எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக்கட்டி விட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்தபடி) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமல்போன) என்னுடைய மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்று விட்டிருந்தனர்.) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் என்னுடைய இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மேலிட்டு விட நான் தூங்கிவிட்டேன். படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸ¤லமி அத்தக்வானீ என்பவர் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவற விடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார். அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். எனவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்க முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார்.

அவர் என்னை அறிந்துகொண்டு ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில்) விலகியிருந்த) என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை. பிறகு அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்கால்களை (தம் காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார். இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு(ப் பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4751

ஆயிஷா(ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான்(ரலி) அறிவித்தார். தம் மீது அவதூறு கூறப்பட்டபோது (அதைக் கேள்விப்பட்ட) ஆயிஷா மூர்ச்சையடைந்து கீழே விழுந்துவிட்டார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4752

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். (திருக்குர்ஆன் 24:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஃத் தலக்கவ்னஹு’ (உங்கள் நாவுகளால் பரப்பிக்கொண்டிருந்த நேரத்தை) எனும் பதத்தை) ஆயிஷா(ரலி) ‘இஃத் தலிகூனஹு’ (நீங்கள் பொய் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தை) என்று ஓதுவதை செவியுற்றேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4753

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) இறப்பதற்கு முன், (இறப்பின் துன்பத்தால்) அவதிக்கு உள்ளாக்கப்பட்டிருந்த வேளையில் (அவர்களைச் சந்திக்க) இப்னு அப்பாஸ்(ரலி) அனுமதி கோரினார்கள். ஆயிஷா(ரலி) ‘என்னை அவர் புகழ்ந்து பேசி விடுவாரோ என அஞ்சுகிறேன்’ என்றார்கள். அப்போது ‘(வந்திருப்பவர்) நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் புதல்வரும் முஸ்லிம்களில் முக்கியமானவரும் ஆவார்’ என்று சொல்லப்பட்டது. உடனே ஆயிஷா(ரலி), ‘அவரை (உள்ளே வர) அனுமதியுங்கள்’ என்று கூறினார்கள். (அன்னார் உங்ளே வந்ததும்,) ‘உங்களுக்குத் தற்போது எப்படியுள்ளது?’ என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நான் அல்லாஹ்வை அஞ்சி நடந்திருந்தால் நலத்துடனே இருப்பேன்’ என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘அல்லாஹ் நாடினால் நலத்துடனேயே இருப்பீர்கள். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களைத் தவிர வேறெந்தக் கன்னிப் பெண்ணையும் மணக்கவில்லை. நீங்கள் நிரபராதி எனும் செய்தி வானத்திலிருந்து (வேத அறிவிப்பாகவே) இறங்கிற்று’ என்று (புகழ்ந்து) கூறினார்கள். (அவர்கள் சென்றவுடன்) அவர்களுக்குப் பின்னாலேயே இப்னு ஸ¤பைர்(ரலி) வந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி), ‘இப்னு அப்பாஸ் (என்னிடம்) வந்து என்னைப் புகழ்ந்தார். நான் முற்றாக மறக்கப்பட்டுவிட்ட (சாதாரணமான)வளாக இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4754

காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) கூறினார். இப்னு அப்பாஸ்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் வர அனுமதி கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: காசிம்(ரஹ்) மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அறிவித்தார்கள். அவர்கள் தம் அறிவிப்பில், ‘மறக்கப்பட்டு விட்டவளாக’ என்பதைக் கூறவில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4755

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் ‘(அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக் கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறிர்கள்?’ என்று கேட்டேன். ஆயிஷா(ரலி) ‘அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டு விட்டதல்லவா?’ என்று கூறினார்கள். ‘ஹஸ்ஸான்(ரலி) (கடைசி காலத்தில்) கண்பார்வை இழந்துவிட்டதையே ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார்கள்’ என சுஃப்யான்(ரஹ்) கூறினார்.

‘நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர். (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்’ என்று ஹஸ்ஸான்(ரலி) (ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார்கள்’ என சுஃப்யான்(ரஹ்) கூறினார்.

‘நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர். (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்’ என்று ஹஸ்ஸான்(ரலி) (ஆயிஷா(ரலி) அவர்களைக் குறித்து கவிதை) பாடினார்கள். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி), ‘ஆனால், நீங்கள் அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தாம் நீங்கள்)’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4756

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் (அவர்கள் மரணப்படுக்கையில் இருந்போது) வந்து, ‘நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்; (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்’ என்று அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடினார்கள். ஆயிஷா(ரலி) ‘(ஹஸ்ஸானே!) நீங்கள் அப்படியில்லையே!’ என்று கூறினார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘இவரைப் போன்றவர்களை நீங்கள் உங்களிடம் வர விடுகிறீர்களா? அல்லாஹ்வோ ‘இந்த அவதூறுப் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தவர்களுக்குப் பெரும் வேதனை உண்டு’ என்று (திருக்குர்ஆன் 24:11 வது வசனத்தில்) கூறுகிறானே!’ என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா(ரலி), ‘குருடாவதைவிடப் பெரிய தண்டனை வேறெது?’ என்று கேட்டுவிட்டு, ‘அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சார்பாக (அவர்களின் மீது வசைக் கவிதை பாடிய எதிரிகளுக்குக் கவிதை மூலமே) பதிலடி கொடுத்து வந்தார்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4757

ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் தொடர்பாக அவதூறு பேசப்பட்டபோது எனக்கு இன்னும் அது தெரிந்திராத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள். ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைத் தக்கபடி போற்றிவிட்டு, ‘என் மனைவியின் மீது அபாண்டப் பழி சுமத்தியவர்களின் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார்’ என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து, ‘அவர்களின் கழுத்தைச் சீவுவதற்கு என்னை அனுமதியுங்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். ‘கஸ்ரஜ்’ குலத்தாரிடையேயிருந்து ஒருவர் எழுந்து, ‘பொய் சொன்னீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (அவதூறு கற்பித்தவர்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால், அவர்களின் கழுத்துச் சீவப்படுவதை நீர் விரும்பமாட்டீர்’ என்று கூறினார். ‘ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் தாயார் அந்த மனிதரின் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். (அவர்களிடையே வாக்குவாதம் எந்த அளவுக்கு முற்றி விட்டதென்றால்) ‘அவ்ஸ்’ குலத்தாருக்கும் ‘கஸ்ரஜ்’ குலத்தாருக்குமிடையே பள்ளிவாசலிலேயே குழப்பமும், கைகலப்பும் மூண்டு விடப்பார்த்தது. (இவற்றில் எதுவுமே) எனக்குத் தெரியாது.

அன்று மாலை நான் (இயற்கைத்) தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பாருடன் புறப்பட்டேன். (வழியில்) அவரின் கால் (அவரின் கம்பளி அங்கியால்) இடறியது. அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான், ‘என் அன்னையே! உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் மெளனமாயிருந்தார். பிறகு இரண்டாவது முறையாக அவரின் கால் இடறியது. அப்போதும் அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான், ‘உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?’ என்று கேட்டேன். பின்னர், மூன்றாம் முறையாக அவரின் கால் இடறியது. அப்போதும் அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான் அவரை அதட்டினேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனை உங்களுக்காகத்தான் திட்டுகிறேன்’ என்று கூறினார். நான், ‘என்னுடைய எந்த விஷயத்திற்காக?’ என்று கேட்டேன். அப்போதுதான் அவர் என்னிடம் விஷயத்தை உடைத்தார். நான், ‘இப்படியா நடந்தது?’ என்று கேட்டேன். அவர் ‘ஆம்!’ அல்லாஹ்வின் மீதாணையாக, (இப்படித்தான் நடந்தது)’ என்று பதிலளித்தார். நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். (அதிர்ச்சியில்) நான் எங்கே போனேன்; எதற்காகப் போனேன் என்பது கூட எனக்கு நினைவில்லாதது போலாகி விட்டது. அதில் கொஞ்சமோ அதிகமோ எதுவும் நினைவில் இல்லை. எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பி விடுங்கள்’ என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில் விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

நான் வீட்டினுள் சென்றபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி) அவர்களைக் கீழ்த்தளத்திலும் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களை (குர்ஆன்) ஓதியவர்களாய் வீட்டின் மேல்தளத்திலும் இருக்கக் கண்டேன். என் தாயார், ‘என் அன்பு மகளே! என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து செய்தியைச் சொன்னேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அளவிற்குக் கவலை அவர்களுக்கு ஏற்படவில்லை! அப்போது அவர்கள் ‘என் அன்பு மகளே! இந்த விவகாரத்தை, உன் மீது (பெரிதாக்கிக் கொள்ளாமல்) இலோசாக்கிக் கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! தன்னை விரும்பும் கணவரிடம் இருக்கும் ஓர் அழகிய பெண்ணுக்குச் சக்களத்திகள் பல பேர் இருக்க, அவர்கள் அவளின் மீது பொறாமைப்படுவதும், அவளைப் பற்றிக் குறை கூறுவதும் இயல்பு தான்’ என்று கூறினார்கள். எனக்கு ஏற்பட்ட அளவிற்கு இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்படவில்லை என்பது இதிலிருந்து தெரிந்தது. நான் ‘என் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா?’ என்று கேட்டேன். தாயார் ‘ஆம்’ என்று கூறினார். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு..?’ என்று கேட்டேன். ‘ஆம்’ அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியும் என்றார் என் தாயார். நான் கண்ணீர் சிந்தி வாய்விட்டு அழலானேன். அபூ பக்ர்(ரலி) வீட்டின் மேல் தளத்தில் ஒதிக்கொண்டிருக்கையில், என் அழுகைச் சப்தத்தைக் கேட்டு கீழே இறங்கி வந்தார்கள். என் தாயாரிடம் ‘இவள் விஷயம் என்ன?’ என்று கேட்டார்கள். என் தாயார், ‘அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதூறுச் செய்தி அவளுக்கு எட்டிவிட்டது’ என்று கூறினார். உடனே அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்தன. பிறகு அவர்கள், ‘என் அன்பு மகளே! நீ என் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று உன்னிடம் வற்புறுத்துகிறேன்’ என்று கூறினார்கள். நான் திரும்பி வந்துவிட்டேன்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப் பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் ‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து ‘அவர்கள் பிசைந்து வைத்த மாவை’ அல்லது ‘அவர்கள் குழைத்து வைத்த மாவை’த் தின்றுவிட்டுச் செல்லும் அளவிற்கு (மெய் மறந்து) உறங்கி விடுவார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடமிருந்து) அறியவில்லை’ என்று சொல்லியிருந்தாள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்!’ என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக, பொற்கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமாறுவற்றதாகக் கருதுவோனோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்’ என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் ‘அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அன்னியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே!’ என்று கூறினார். பிறகு அவர் இறைவழியில் வீரமரணம் அடைந்தார். என் தாய் தந்தை இருவரும் என்னிடம் காலையில் வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு வரும்வரை அவர்கள் (என்னிடமே) இருந்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, என் தாய் தந்தை இருவரும் (ஒருவர்) என் வலப்பக்கமும், (மற்றவர்) என் இடப்பக்கமும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, போற்றிவிட்டு, ‘ஆயிஷா! நீ ‘தீய செயல் ஏதும் புரிந்திருந்தால்’ அல்லது ‘அநீதியிழைத்திருந்தால்’, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்! ஏனெனில் அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான்’ என்று கூறினார்கள். அப்போது அன்சாரிப் பெண்யொருத்தி வந்து வாசலில் அமர்ந்திருந்தாள். நான், (நபி(ஸல்) அவர்களிடம்,) ‘இந்தப் பெண் வெளியே சென்று ஏதாவது சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா?’ என்று கேட்டேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள். நான் என் தந்தையின் பக்கம் திரும்பி, ‘இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்’ என்றேன். அவர்கள் ‘நான் என்ன பதில் சொல்வது?’ என்று கேட்டார்கள். பிறகு நான் என் தாயாரிடம் திரும்பி, ‘இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்!’ என்றேன். அவர்கள், ‘நான் என்ன சொல்வேன்?’ என்று கேட்டார்கள். அவ்விருவருமே பதில் அளிக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழிகூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுடைய தகுதிக்கேற்ப அவனைப் போற்றிவிட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்) செய்யவில்லையென்று உங்களிடம் சொன்னால், -வலிவும் உயர்வும் மிக்க அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான். -அது எனக்கு உங்களிடம் பயனளிக்கப் போவதில்லை. நீங்கள் அதைப் பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும் விட்டது. நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் – நான் அப்படிச் செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிவான் ‘தனக்குத்தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டாள்’ என்று நீங்கள் சொல்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக காண்கிறேன்’ -அப்போது (யூசுஃப் அவர்களின் தந்தை) யஅகூப்(அலை) அவர்களின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தேன். ஆனால், நினைவுக்கு வரவில்லை. ‘(இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடமே பாதுகாப்புக் கோருகிறேன்’ என யஅகூப்(அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.

அந்த நேரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது, (குர்ஆன் வசனங்கள்) அருளப்பெற்றன. எனவே, நாங்கள் மெளனமாக இருந்தோ. ‘வஹீ’ (வேத அறிவிப்பு அருளப்படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்டபோது, நான் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைத் தெளிவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும், ‘ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருளி விட்டான்’ என்று கூறினார்கள். நான் அன்று கடுங்கோபத்துடன் இருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் ‘நீ எழுந்து நபி(ஸல்) அவர்களிடம் செல்!’ என்று கூறினர். அதற்கு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவுமாட்டேன். அவர்களைப் பாராட்டவுமாட்டேன். உங்கள் இருவரையுங் கூட பாராட்டமாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்றவளாக அறிவித்து வேத அறிவிப்பை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என் மீதான) அவதூற்றைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை; அதை மாற்ற முயலவுமில்லை’ என்று சொன்னேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: மேலும், ஆயிஷா(ரலி) (இவ்வாறு) கூறிவந்தார்கள்: (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுதலின் காரணத்தினால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்கு பெறவிடாமல்) காப்பாற்றி விட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே கூறினார்கள். ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறுபேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்து போனார். (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும், ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தும் ஆவர். நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும் பங்கு வகித்தவனும் அவன்தான். ஹம்னாவும் கூட.

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி), ‘மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒருபோதும் செய்யமாட்டேன்’ என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் ‘உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) இறைவசனத்தை அருளினான். (இந்த வசனத்தில்) ‘உலுல் ஃபள்ல்’ (செல்வம் படைத்தோர்) என்று அபூ பக்ர்(ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். ‘மஸாக்கீன்’ (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூ பக்ர்(ரலி), ‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்’ என்று கூறி, தாம் முன்பு செய்து வந்தது போன்றே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத் தொடங்கினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4758

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புக்கு மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்!’ எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4759

ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரஹ்) கூறினார். ‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்’ எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனம் அருளப்பட்டபோது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4760

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?’ என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.

(இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) ‘ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4761

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘கேட்டேன்’ அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது’ அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும்பாவம்)’ என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது’ என்று கூறினார்கள். நான் ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள் ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது’ என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 25:68 வது) இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4762

காசிம் இப்னு அபீ பஸ்ஸா(ரஹ்) அறிவித்தார். நான் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், ‘இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்வதனுக்குப் பாவமன்னிப்பு உண்டா?’ என்று கேட்டுவிட்டு, ‘மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை…’ எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) இறைவசனத்தையும் அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அதைக் கேட்ட ஸயீத்(ரஹ்), ‘இதே வசனத்தை நீங்கள் (என்னிடம்) ஓதிக்காட்டியது போன்றே நானும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள், ‘இது (திருக்குர்ஆன் 25:68) மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இ(தன் சட்டத்)தை, மதீனாவில் அருளப்பெற்ற ‘அந்நிஸா’ அத்தியாயத்திலுள்ள ஒரு வசனம் (திருக்குர்ஆன் 04:93) மாற்றிவிட்டது’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4763

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இறைநம்பிக்கையாளரை (வேண்டுமென்றே) கொலை செய்தல் (பாவமன்னிப்புக்குரிய குற்றமா என்பது) தொடர்பாக (இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். எனவே, நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை நோக்கி பயணம் மேற்கொண்டேன். அவர்கள், ‘இது (திருக்குர்ஆன் 04:93) இறுதியாக இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். இதை எந்த வசனமும் மாற்றவில்லை’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4764

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான், ‘அவனுக்குரிய தண்டனை நரகம் தான்’ எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் ‘அவனுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது’ என்று கூறினார்கள். புகழுயர்ந்த இறைவனின் ‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தைக் குறித்துக் கேட்டதற்கு, ‘இந்த வசனம் அறியாமைக் காலத்தைப் பற்றியதாகும்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4765

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனைநரகம்தான்’ எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றியும், ‘மேலும், (கொலை செய்யக்கூடாது என) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்’ என்று தொடங்கி ‘பாவமன்னிப்புக்கோரி இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர் தவிர’ என்று முடியும் (திருக்குர்ஆன் 25:68-70) வசனங்கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நானே அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடைவிதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீயசெயல்கள் புரிந்தோம். (எனவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)’ என்று கூறிக் கொண்டனர். எனவே, அல்லாஹ் ‘அவர்களில், மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரைத் தவிர. அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்’ எனும் (திருக்குர்ஆன் 25:70 வது) வசனத்தை அருளினான்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4766

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) ‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம் தான்..’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (அவ்வாறே) நான் அந்த வசனம் குறித்து அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனத்(தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை’ என்று கூறினார்கள். ‘அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அவர்கள் அழைப்பதில்லை’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி), ‘இது இணைவைப்போர் விஷயத்தில் அருளப்பெற்றது’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4767

மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார். (இந்த 25:77 வது வசனத்தில் ‘லிஸாமன்’ எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும் போது) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ‘(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று: புகை; இரண்டாவது, சந்திரன் பிளப்பது; மூன்றாவது, ரோமர்கள் (வெற்றி கொள்ளப்பட்டு மீண்டும் அவர்கள் வெற்றி பெறுவது); நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4768

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: இப்ராஹீம்(அலை) அவர்கள் மறுமை நாளில் தம் தந்தையின் மீது தூசியும், கரும் புழுதியும் படிந்திருக்கும் நிலையில் அவர்களைக் காண்பார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இந்த ஹதீஸின் முகத்தில் இடம்பெற்றுள்ள) ‘அல்ஃகபரா’, அல்கத்தரா’ ஆகிய சொற்களுக்கு (‘புழுதி’ எனும்) ஒரே பொருள் ஆகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4769

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது ‘இறைவா! ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவு படுத்தமாட்டாய்’ என எனக்கு வாக்களித்தாயே!’ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘இறைமறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்து விட்டேன்’ என்று பதிலளிப்பான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4770

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூ லஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி(ஸல்) அவர்கள், ‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்க, மக்கள் ‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்’ என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூ லஹப், ‘நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?’ என்று கூறினான். அப்போதுதான் ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்…’ என்று தொடங்கும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4771

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அல்லாஹ் ‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) வசனத்தை அருளியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் கூட்டத்தாரே!’ அல்லது ‘இது போன்ற ஒரு வார்த்தையைக் கூறியழைத்து, ‘உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்) கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்றிவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்றமுடியாது. அப்துல் முத்தலிபின் புதல்வரான (என் பெரிய தந்தை) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4772

முஸய்யப் இப்னு ஹஸன்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரணவேளை வந்துவிட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், ‘அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா இப்னி முஃகீரா’வையும் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘என் பெரிய தந்தையே! ‘லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)’ என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்’ என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் ‘அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, ‘நான் (என் தந்தை) அப்துல் முத்தலிப் மார்க்கத்தில் இருக்கிறேன்’ என்பதாகவே இருந்தது. ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்’ என்று கூறினார்கள். அப்போதுதான், ‘இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 09:113 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூ தாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ‘(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்தி விடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்’ எனும் (திருக்குர்ஆன் 28:56 வது) வசனத்தை அருளினான்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (திருக்குர்ஆன் 28:76 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலில் குவ்வத்தி’ (பலவான்கள்) என்பதன் கருத்தாவது: (காரூனின் பொக்கிஷங்களின் சாவிகளைப் பலவான்களான) ஆண்களில் ஒரு குழுவினரால் கூட சுமக்கமுடியாது. ‘லதனூஉ’ எனும் சொல்லுக்குச் ‘சிரமமாக மாறும்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபாரிஃகா’ எனும் சொல்லுக்கு ‘(மூஸாவுடைய தாயாரின் உள்ளம்) மூஸாவின் நினைவைத் தவிர (வேறெல்லாக் கவலைகளிலிருந்தும் நீங்கி) வெறுமையாக இருந்தது’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:76 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டோர்’ என்று பொருள். (இச்சொல்லுக்குப் ‘பூரிப்படைவோர்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 28:11 வது வசனத்திலுள்ள) ‘அவரை நீ பின்தொடர்ந்து செல்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘குஸ்ஸீஹி’ எனும் சொல்லுக்குரியதாகும். சில நேரங்களில் ‘சம்பவத்தை எடுத்துரைத்தல்’ எனும் பொருளிலும் இச்சொல் வருவதுண்டு. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் ஜுனுபின்’ எனும் சொல்லுக்கு ‘தூரத்திலிருந்து’ என்று பொருள். (இச்சொல்லும்) ‘அன் ஜனாபத்தின்’ எனும் சொல்லும் (பொருளில்) ஒன்றே. ‘அன் இஜ்தினாப்’ எனும் சொல்லும் அவ்வாறே!

(திருக்குர்ஆன் 28:19 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்திஷ்’ (தாக்க) எனும் சொல் ‘யப்துஷ்’ என்றும் வாசிக்கப்பட்டுள்ளது.
(திருக்குர்ஆன் 28:20 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஃதமிரூன்’ எனும் சொல்லுக்கு ‘ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனர்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உத்வான்’ எனும் சொல்லும், ‘அல் அதாஉ’ எனும் சொல்லும், ‘அத்தஅத்தீ’ எனும் சொல்லும் (‘வரம்பு மீறல்’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(திருக்குர்ஆன் 28:29 வது வசனத்திலுள்ள) ‘கண்டார்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ஆனஸ’ எனும் சொல்லுக்குரியதாகும்.

(திருக்குர்ஆன் 28:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜஃத்வா’ எனும் சொல்லுக்குத் ‘தீக்கொழுந்து இல்லாத கெட்டியான எரி கொள்ளி’ என்று பொருள். (திருக்குர்ஆன் 27:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்யுஹாப்’ எனும் சொல்லுக்குத் ‘தீக்கொழுந்து உள்ள எரிகொள்ளி’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜான்’ எனும் சொல், பாம்பு வகைகளில் ஒன்றை (வெண்ணிறச் சிறிய பாம்பை)க் குறிக்கும். ‘அஃபாஈ’ (பெண்ணின விஷப் பாம்பு) மற்றும் ‘அசாவித்’ (கருநாகம்) ஆகியவற்றையும் (திருக்குர்ஆன் 20:20 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹய்யத்’ (பாம்பு) எனும் சொல் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 28:34 வது வசனத்திலுள்ள) ‘உதவியாளர்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ரித்ஃ’ எனும் சொல்லுக்குரியதாகும். (இதே வசனத்திலுள்ள சொல்லை) இப்னு அப்பாஸ்(ரலி) ‘யுஸத்திக்குனீ’ (அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார்) என்று ஓதினார்கள். (மற்ற சிலர் ‘யுஸத்திக்னீ’ என்று ஓதியுள்ளார்கள்.)

இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (திருக்குர்ஆன் 28:35 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸ நஷுத்து’ எனும் சொல்லுக்கு, ‘உமக்கு நாம் உதவி புரிவோம்’ என்று பொருள். (‘ஸ நஷுத்து அளுதக்க’ என்பதற்கு உம்முடைய கரத்தை நாம் வலுப்படுத்துவோம்’ என்று பொருள்.) நீ யாருக்காவது உதவி புரியும் போதெல்லாம் நீ அவருக்காக கரமாக ஆகிறாய்! (அதனால், இங்கு ‘கரம்’ அல்லது ‘கொடுங்கை’ (‘அளுத்’) எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4773

இக்ரிமா(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆன் 28:85 வது வசனத்திலுள்ள) ‘நீங்கள் திரும்பவேண்டிய இடம்’ (மஆத்) என்பது மக்காவைக் குறிக்கிறது என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4774

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். ‘கிந்தா எனும் இடத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது ‘மறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப்புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக் கொள்ளும். இறை நம்பிக்கையாளருக்கு ஜலதோஷம் ஏற்படுவது போன்றிருக்கும்’ என்று கூறினார். (இதைக்கேட்ட) நாங்கள் பீதியடைந்தோம். உடனே நான், இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர்கள் கோபமுற்று (எழுந்து நேராக) அமர்ந்து கொண்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அறிந்தவர் சொல்லட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று சொல்லட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததை, எனக்குத் தெரியாது என்று சொல்வதும் அறிவின் பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் ‘சொல்லுங்கள்: நான் இதற்காக, உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனல்லன்’ என்று (திருக்குர்ஆன் 38:86) கூறியுள்ளான். மேலும், குறைஷியர் இஸ்லாத்தை ஏற்பதில் காலம் தாழ்த்தினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் குறைஷியருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, எனக்கு உதவி செய்!’ என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. இறுதியில் அதில் அவர்கள் (பலரும்) அழிந்து போனார்கள். மேலும், பலர் செத்தவற்றையும் எழும்புகளையும் உண்ண வேண்டியதாயிற்று. இன்னும் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே புகை போன்ற ஒன்றையே கான்பார். இந்நிலையில் அபூ சுஃப்யான் வந்து முஹம்மதே நீர் எங்களிடம் உறவுகளைப் பேணுமாறு கட்டளையிட்டபடி வந்தீர் உம் சமுதாயத்தினரோ அழிந்து கொண்டிருக்கிறார்கள் எனவே நீங்கள் (இந்தப் பஞ்சத்தை நீக்கும்படி) அல்லஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார் அப்போது நபி (ஸல்)அவர்கள் (நபியே) வெளிப்படையானதொரு புகை வானத்திலுருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள் மனிதர்களை அது துன்புறுத்தும் வேதனையாகும் என்று தொடங்கி மெய்யாகவே (நீங்கள் உணர்ச்சிபெறக் கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும் நீங்கள் (பாவம்செய்யவே) திரும்பச் செல்கிறீர்கள் என்பது வரையிலான (திருக்குர்ஆன் 44: 10- 15) வசனங்களை ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களை விட்டுப் பஞ்சம் அகன்று விட்டாலும் மறுமை வேதனை வந்தால் அது அவர்களைவிட்டு அகற்றப்படவா போகிறது (இல்லை . பஞ்சம் நீங்கிய) பிறகு மீண்டும் அவர்கள் இறை மறுப்புக்கே திரும்பி விட்டனர். இதைத்தான் அல்லாஹ் மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயமாக அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம் என்று (திருக்குர்ஆன் 44:16 வது வசனத்தில் பத்ருப் போரைக் குறிக்கும் வகையிலும் வ லிஸாமன் (தண்டனை உங்களை பிடித்தே தீரும்) என்று (திருக்குர்ஆன் 25:77 வது வசனத்தில் அதே பத்ருப் போரைக் குறிக்கும் வகையிலும் கூறுகிறான்.

மேலும் , ‘அலிஃ. லாம். மீம் . (நபியே) ரோமர்கள் அண்டை நாட்டில் (இப்போது) தோற்டிக்கப்பட்டு விட்டார்கள். (எனினும்) அவர்கள் இத்தோல்விக்குப்பின் சில ஆண்டுக்குள்ளேயே வெற்றி அடைவார்கள்’ என்றும் அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 30:1-3) இது முன்பே (நடந்து) முடிந்துவிட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4775

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டும் திருப்பி,) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப், பிறகு, ‘எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில், (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது’ எனும் (திருக்குர்ஆன் 30:30 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4776

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். ‘இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்கள்…’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. எனவே, அவர்கள், ‘எங்களில் எவர்தாம் தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடாமல் (கலப்பற்ற இறைநம்பிக்கைமிக்கவராய்) இருக்கிறார்?’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அது அப்படியல்ல் (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் ‘இணைவைப்பது மாபெரும் அநியாயமாகும்’ என்று சொல்லியிருப்பதை (குர்ஆன் வாயிலாக) நீர் கேட்கவில்லையா?’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4777

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே!’ ஈமான் எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார். அவர்கள், ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள். அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மைபுரிதல் என்றால் என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:

ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’ (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். நபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக அவர் வந்திருந்தார்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4778

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘மறைவானவற்றின் திறவுகோல் ஐந்தாகும்’ என்று கூறிவிட்டு, பிறகு ‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது வருமென்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 31:34 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4779

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அருள் வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், ‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்’ என்று கூறுகிறான்.

இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), ‘நீங்கள் விரும்பினால், ‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 32:17 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.’

மற்றோர் அறிவிப்பிலும் இவ்வாறே காணப்படுகிறது. அதில் (கூடுதலாக:) அறிவிப்பாளர் சுஃப்யான்(ரஹ்) அவர்களிடம் ‘இது நபிமொழியா? (அல்லது உங்களின் கருத்தா?)’ என வினவப்பட, அன்னார் ‘(இது நபிமொழி இல்லாமல்) வேறென்ன?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இன்னுமோர் அறிவிப்பில், அபூ ஹுரைரா(ரலி) (திருக்குர்ஆன் 32:17 வது வசனத்தின் மூலத்தில் உள்ள ‘குர்ரத்’ (குளிர்ச்சி) எனும் ஒருமையான சொல்லை) ‘குர்ராத்’ என(ப் பன்மையாக) வாசித்தார்கள் என்று காணப்படுகிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4780

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘மேன்மைமிக்க அல்லாஹ், ‘என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை, (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே) சொற்பமானவையே ஆகும்’ எனக் கூறுகிறான்’ என்று சொல்லிவிட்டு, பிறகு, ‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்) செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 32:17 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4781

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எந்த ஓர் இறை நம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், ‘திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார்’ எனும் (திருக்குர்ஆன் 33:6 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். ஒரு நம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தை விட்டுச்சென்றால் அவரின் தந்தை வழி உறவினர்கள் ‘அவர்கள் எவ்வகையினராயினும் சரி – அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்! (இறக்கும் போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச் செல்கிறவர்கள், அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச் செல்கிறவர்கள் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4782

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்’ எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களை ‘ஸைத் இப்னு முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4783

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். ‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 33:23 வது) வசனம், அனஸ் இப்னு நள்ர்(ரலி) விஷயத்தில் அருளப் பெற்றதென்றே நாங்கள் கருதுகிறோம்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4784

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார். நாங்கள் (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில்,) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33 வது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள்.(அந்த வசனம் இதுதான்:) ‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்.’ (திருக்குர்ஆன் 33:23)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4785

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். என்னிடம் தான் முதன் முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம்’ என்று கூறினார்கள். என்னுடைய பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிடப் போவதில்லை என்று நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘நபியே! உங்களுடைய துணைவியரிடம் கூறுங்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 33:28, 29) இரண்டு வசனங்களை முழுமையாகக் கூறினார்கள். அப்போது நான், ‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்’ என்று நபியவர்களிடம் சொன்னேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4786

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டளையிட்டப்பட்ட போது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) ‘நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம்’ என்று கூறினார்கள். என் பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப் போவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்லமுறையில் உங்களை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்து வைத்துள்ளான்’ எனும் (திருக்குர்ஆன் 33:28,வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், ‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்’ என்று சொன்னேன். பிறகு நபி(ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4787

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருந்தீர்கள்.’ எனும் இந்த (திருக்குர்ஆன் 33:27 வது) வசனம் (நபி(ஸல்) அவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) மற்றும் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களின் விஷயத்தில் அருளப்பெற்றது.

‘(நபியே!) உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்புக் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனத் தொடர்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துர்ஜீ’ எனும் சொல்லுக்கு ‘ஒதுக்கி வைக்கலாம்’ என்று பொருள். (இதன் ஏவல் வினைச்சொல்லும், 7:111 மற்றும் 26:36ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ளதுமான) ‘அர்ஜிஹி’ எனும் சொல்லுக்கு ‘அவரை விட்டுப்பிடி’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4788

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்’ என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4789

முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா(ரஹ்) அறிவித்தார். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்’ என்று ஆயிஷா(ரலி) கூறினார். நான், ‘அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! (வேறொரு மனைவிக்காக என்னுடைய நாளை விட்டுக் கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களை விட்டுக் கொடுக்க விரும்பமாட்டேன்’ என்று சொல்வேன்’ என்றார்கள்.

இதே ஹதீஸ் வேறுவழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4790

உமர்(ரலி) அறிவித்தார். நான், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!’ என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4791

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை. அதைக் கண்டபோது நபி(ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்து விட்டார்கள். அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்து விட்டார்கள். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ஸைனப்(ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து (கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றார்கள். நான் உடனே, உள்ளே சென்று நபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் உள்ளே சென்றார்கள். நானும், அவர்களுடன் உள்ளே செல்லப்போனேன். அதற்குள் நபி(ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ் ‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்’ என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 35:53 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4792

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (‘வலீமா’ விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டு விட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அல்லாஹ்’ இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்து விட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4793

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக, மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் உண்பார்கள். புறப்பட்டுவிடுவார்கள். பிறகு, மற்றொரு கூட்டத்தார் வருவார்கள். உண்பார்கள். போய்விடுவார்கள். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பது வரை நான் மக்களை அழைத்தேன். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழைப்பதற்கு இனி ஒருவரும் இல்லை’ என்றேன். அவர்கள், ‘உங்கள் உணவை எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள். (விருந்து முடிந்தும்) மூன்று பேர் மட்டும் வீட்டில் பேசிக்கொண்டே இருந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்குச் சென்று ‘வீட்டாரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்கிதுல்லாஹ் (உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!)’ என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), ‘வ அலைக்குமுஸ்ஸலாம், வரஹ்மத்துல்லாஹ் (தங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரக்கல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்!)’ என்று (மணவாழ்த்துச்) கூறினார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியர் அனைவரின் அறைகளையும் தேடிச்சென்று ஆயிஷா(ரலி) அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா(ரலி) அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா(ரலி) கூறியது போன்றே (பிரதி முகமனும், மணவாழ்த்தும்) கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் (புதுமணப் பெண் ஸைனப்(ரலி) அவர்களிடம்) திரும்பி வர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்களோ அதிக வெட்க(சுபாவ)ம் உடையவர்களாய் இருந்தார்கள். எனவே, (அவர்களைச் சீக்கிரம் போகச் சொல்லாமல்,) ஆயிஷா(ரலி) அவர்களின் அன்றைய நோக்கி நடந்தபடி (மீண்டும்) புறப்பட்டார்கள். அந்த மூவரும் வெளியேறி விட்டார்கள் என்று ‘நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா?’ அல்லது, ‘(மற்றவர் மூலம்) தெரிவிக்கப்பட்டதா?’ என்று எனக்குத் தெரியவில்லை. (இதைக் கேட்ட உடன்) நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்கு) திரும்பி வந்தார்கள். அவர்கள் ஒருகாலை வாசல்படியிலும் மற்றொன்றை வெளியேயும் வைத்தபோது, எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். (அப்போதுதான்) பர்தா (சட்டம்) தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4794

அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது ‘வலீமா’ (மணவிருந்து) கொடுத்தார்கள். மக்களுக்கு ரொட்டியும், இறைச்சியும் வயிறு நிரம்ப உண்ணக் கொடுத்தார்கள். பிறகு, துணைவியாருடன் தாம்பத்தியத்தைத் தொடங்கும் நாளின் காலையில் வழக்கமாகத் தாம் செய்து வந்ததைப் போன்று (தம் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களுடைய அன்னையரின் அறைகளுக்கு (அன்றும்) சென்றார்கள். அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். துணைவியரும் நபி(ஸல்) அவர்களுக்கு சலாம் (பிரதி முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். (ஸைனப்(ரலி) அவர்களிருந்த, (தம் இல்லத்திற்குத் திரும்பி வந்தபோது, இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவ்விருவரைக் கண்டதும் அவர்கள் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றதைப் பார்த்தபோது, வேகமாக (வெளியே) சென்றார்கள். அவ்விருவரும் வெளியே சென்றுவிட்டதாக ‘நானே நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேனா அல்லது ‘அவர்களுக்கு (இச் செய்தி வேறு யார் மூலமும்) தெரிவிக்கப்பட்டதா?’ என்று எனக்குத் தெரியவில்லை. (இதையறிந்த) உடனே, நபி(ஸல்) அவர்கள் வீட்டினுள் சென்று, (அவர்களைத் தொடர்ந்து வீட்டிற்குள் செல்ல முயன்ற) எனக்கம் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். அப்போதுதான் பர்தா தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.

இந்த ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தே வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4795

ஆயிஷா(ரலி) அறிவித்தார். பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப்(ரலி) பார்த்துவிட்டு ‘சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!’ என்று கூறினார்கள். சவ்தா(ரலி) உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா(ரலி) வீட்டினுள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர்(ரலி) என்னிடம் இவ்வாறெல்லாம் கூறினார்கள்’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4796

ஆயிஷா(ரலி) அறிவித்தார். பர்தா தொடர்பான வசனம் அருளப் பெற்ற பிறகு, என் வீட்டினுள் வருவதற்கு அபுல் குஅய்ஸின் சகோதரர் ‘அஃப்லஹ்’(ரலி) அனுமதி கேட்டார்கள். அப்போது, ‘நபி(ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்டுப் பெறாதவரை உள்ளே வர அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன்’ என்று கூறிவிட்டேன். ஏனெனில், எனக்குப் பாலூட்டியவர், அஃப்லஹின் சகோதரரான அபுல் குஅய்ஸ் அல்லர். அபுல் குஅய்ஸின் மனைவிதான் எனக்குப் பாலூட்டியவர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அபுல் குஅய்ஸின் சகோதரான ‘அஃப்லஹ்’ என்னிடம் (வீட்டினுள் வர) அனுமதி கேட்டார். தங்களிடம் அனுமதி கேட்காதவரை அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன் என்று மறுத்து விட்டேன்’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘உன் (பால்குடித்) தந்தையின் சகோதரருக்கு நீ ஏன் அனுமதி தரவில்லை?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குப் பாலூட்டியவர் அந்த (அபுல் குஅய்ஸ் என்ற) ஆண் அல்லவே? மாறாக, அபுல் குஅய்ஸின் மனைவிதானே எனக்குப் பாலூட்டினார்!’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு (அஃப்லஹுக்கு) அனுமதி கொடு! ஏனென்றால், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாம். உன் வலக்கரம் மண்ணாகட்டும்’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) உர்வா(ரஹ்) கூறினார்: இதனால்தான் ஆயிஷா(ரலி), ‘பிறப்பினால் (ஏற்படும் நெருங்கிய உறவுகளில்) யாரை மணப்பதற்குத் தடை விதிக்கிறீர்களோ, அவர்களை மணக்கப் பால்குடி உறவினாலும் தடைவிதியுங்கள்’ என்று கூறுவார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4797

கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களின் மீது ‘சலாம்’ கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். (தங்களின் மீது) ‘ஸலவாத்’ கூறுவது எப்படி?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்’ என்று சொல்லுங்கள்!’ என பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4798

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இது (தங்களின் மீது) சலாம் கூறும் முறை (தொழுகையில் ஓதப்படும் ‘அத்தஹிய்யாத்’ மூலம் இதனை நாங்கள் அறிவோம்.) ஆனால், உங்களின் மீது நாங்கள் ‘ஸலவாத்’ சொல்வது எப்படி?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம’ என்று சொல்லுங்கள்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘கமா பாரக்த்த அலா அலீ இப்ராஹீம’ (இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ சுபிட்சத்தை வழங்கியதைப்போன்று) என்று காணப்படுகிறது. யஸீத் இப்னு ஹாத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: ‘கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம’ (என்று சொல்லுங்கள்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4799

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. மூஸா(அலை) அவர்கள் அதிகம் வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். ‘மூஸாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து அவர் தூய்மையானவர் என்பதை அல்லாஹ் நிரூபித்தான். அவர் அல்லாஹ்விடம் கண்ணியம் பொருந்தியவராய் இருந்தார்’ எனும் (திருக்குர்ஆன் 33:69 வது) இறைவசனம் அதைத்தான் குறிக்கிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4800

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும்ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள். அப்போது வானவர்கள் பீதிக்குள்ளகிறார்கள்.) பின்னர், அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது (அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவர்களிடம்) ‘நம் இறைவன் என்ன சொன்னான்?’ என்று வினவுகிறார்கள்.

அதற்கு அவர்கள் வினவியோரிடம், ‘(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான் – அவன் உயர்ந்தவன்; பெரியவன்’ என்று கூறுவர். உடனே அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்களும் (அவர்களிடமிருந்து) ஒட்டுக்கேட்பவர்களும் ஒருவர் மற்றவர் மேலே இவ்வாறு இருந்துகொண்டு செவியேற்று விடுகின்றனர்.

இதைக் கூறும்போது (அறிவிப்பாளர்) சுஃப்யான்(ரஹ்), தம் விரல்களைச் சாய்த்து அவற்றுக்கிடையே பிரித்துக்காட்டி (ஒன்றன் மீது ஒன்றை அடுக்கி) விளக்கிக் காட்டினார்கள்.

ஆக, முதலில் ஒட்டுக் கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழேயிருப்பவரிடமும், பிறகு அவர் தமக்குக் கீழேயிருப்பவரிடமும், இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முதலில் ஒட்டுக் கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து) விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்து விடுவதுமுண்டு. (இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன் வரை அது போய்ச் சேர்கிறது.) அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்களிடம்) பேசுகிறான். அப்போது இதைக் கேட்கும் மக்களிடையே) இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென அவர் (குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லி விட்டிருக்கவில்லையா?’ என்று பேசப்படும். இப்போது வானத்திலிருந்து செவியேற்கப்பட்ட அந்த வார்த்தையினால் (குறி சொல்லும்) அவர் உண்மை சொல்லிவிட்டதாகக் கருதப்படுவார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4801

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக்குன்றின் மீது ஏறி, ‘யா ஸபாஹா!’ (‘உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!’) என்று கூறினார்கள்.உடனே அவர்களை நோக்கி குறையுயர் ஒன்றுதிரண்டு வந்து, ‘உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘எதிரிகள், காலையிலோ, மாலையிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘ஆம் (நம்புவோம்)’ என்று அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவனாவேன்’ என்று கூறினார்கள். உடனே அபூ லஹப், ‘உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை (இங்கே) ஒன்று கூட்டினாயா?’ என்று கேட்டான். உடனே அல்லாஹ், ‘அபூ லஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்..’ எனும் (திருக்குர்ஆன் 111:1 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4802

அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார். சூரியன் மறையும் நேரத்தில் நான் நபி(ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘சூரியன் எங்கு (சென்று) மறைகிறது என்று உமக்குத் தெரியுமா, அபூ தர்ரே?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறைவனின் அரியாசனத்திற்கு)க் கீழே சிரவணக்கம் (சஜ்தா) செய்வதற்காகச் செல்கிறது. இதைத்தான், ‘சூரியன், தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது வல்லமை மிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்ணயமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனம் குறிக்கிறது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4803

அபூ தர்(ரலி) அறிவித்தார். நான், நபி(ஸல்) அவர்களிடம், ‘சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது’ எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அதன் நிலை கொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4804

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘எவரும் தம்மை (இறைத்தூதர் யூனுஸ்) இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர் என வாதிடுவது தகாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4805

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘நான் யூனுஸ் இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர்’ என்று (என்னைக் குறித்து புகழ்ந்து) கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4806

அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) அறிவித்தார். நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்திலுள்ள (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டபோது அதற்கு அன்னார், ‘(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும் பின்பற்றிச் செல்லுங்கள்..’ என்ற (திருக்குர்ஆன் 06:90 வது) வசனத்தை பதிலாகக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) இந்த வசனத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வது வழக்கம்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4807

அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார். நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?’ என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்’ என்று தொடங்கி, ‘(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும் பின்பற்றுங்கள்…’ என்று முடியும் (திருக்குர்ஆன் 06:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். பிறகு, ‘எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தோ அத்தகையவர்களில் தாவூத்(அலை) அவர்களும் ஒருவராவார். எனவே, (நபி தாவூத்(அலை) அவர்களைப் பின்பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (‘ஸாத்’ அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்யவேண்டும்) என்று பதிலளித்தார்கள்.

(திருக்குர்ஆன் 38:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உஜாப்’ எனும் சொல்லுக்கு ‘வியப்புக்குரியது’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கித்து’ எனும் சொல்லுக்கு (பொதுவாக) ‘ஏடு’ என்று பொருள். ஆனால், இங்கு ‘நற்செயல்களின் பதிவேடு’ என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்: (திருக்குர்ஆன் 38:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸ்ஸத்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டவர்கள்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மில்லத்துல் ஆம்ரா’ (வேறு சமுதாயம்) எனும் சொல், குறைஷியர் சமுதாயத்தைக் குறிக்கிறது. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இக்திலாக்’ எனும் சொல்லுக்குப் ‘பொய்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்பாப்’ எனும் சொல், வானத்தின் வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுன்த்’ (படையினர்) எனும் சொல் குறைஷியரைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலாயிகல் அஹ்ஸாப்’ (அந்தக் கூட்டத்தினர்) என்பது முந்தைய தலைமுறையினரைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 38:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபவாக்’ (தாமதித்தல்) எனும் சொல்லுக்கு ‘(உலகின் பால்) திரும்புதல்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்த கஃத்னாஹும் சிக்ரிய்யா’ (நாம் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தோமா? என்பதன் கருத்தாவது: (தாழ்ந்தவர்களாக) அவர்களை நாம் அறிந்திருந்தோமா?

(திருக்குர்ஆன் 38:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்ராப்’ எனும் சொல்லுக்கு ‘வயதொத்தவர்கள்’ என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (திருக்குர்ஆன் 38:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அல்அய்த்’ எனும் சொல்லுக்கு ‘வணக்க வழிபாட்டில் செயலாற்றல்’ என்றும், ‘அல் அப்ஸார்’ எனும் சொல்லுக்கு ‘அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனை’ என்றும் பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4808

நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்: முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது – என்றோ, இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள் – அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது ‘இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் கிடைக்கமுடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக’ (திருக்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘எனவே, அதை நான் விரட்டி அடித்து விட்டேன்’ என்றும் இடம் பெற்றுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4809

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், ‘மக்களே! ஒன்றை அறிந்தவர், அதைப் பற்றிக் கூறட்டும்! அறியாதவர், ‘அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று கூறட்டும்! ஏனெனில் ஒருவர் தாம் அறியாததைக் குறித்து ‘அல்லாஹ்வே நன்கறிந்தவன் (எனக்குத் தெரியாது)’ என்று சொல்வதும் அறிவின் பாற்பட்டதாகும். வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ், ‘(நபியே!) கூறுக: நான் இதற்காக உங்களிடம் கூலி எதையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனும் அல்லன்’ என்று தன் தூதர்(ஸல்) அவர்களுக்குக் கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 38:86) இதோ (கிந்தா எனுமிடத்தில் ஒருவர் பேசிவரும்) புகையைக் குறித்து உங்களுக்கு நான் சொல்கிறேன் கேளுங்கள்): இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறையஷியரை இஸ்லாத்திற்கு (வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அவர்கள் அதில் காலம் தாழ்த்தினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! (இவர்களைத் திருத்த உன் தூதர்) யூசுஃப்(அலை) அவர்கள் காலத்து ஏழு (பஞ்சம் நிலவிய) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்!’ எனப் பிரார்த்தித்தார்கள். எனவே, அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அது அனைத்தையும் அழித்து விட்டது. எந்த அளவிற்கென்றால், (பஞ்சத்தின் கோரப் பிடியினால்) அவர்கள் பிணத்தையும், (பிராணிகளின்) தோல்களையும் உண்டார்கள். மேலும், கடும் பசியினால் (கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகையைத்தான் காண்பார்.

அல்லாஹ் கூறினான்: (நபியே!) தெளிவானதொரு புகை வானத்திலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும். (திருக்குர்ஆன் 44:10,11)

உடனே குறைஷியர், ‘எங்கள் இறைவனே! எங்களைவிட்டு இவ்வேதனையை நீக்கிவிடு; நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக்கிறோம்’ என்று வேண்டினர். (திருக்குர்ஆன் 44:12)

‘(ஆனால், அந்நேரத்தில்) அவர்களுக்கு நல்லுணர்ச்சி எவ்வாறு பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) வெளிப்படையான தூதர் அவர்களிடம் வந்தே இருக்கிறார். எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து (அவரைப் பற்றி, ‘இவர்) எவராலோ பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தாம்’ என்று கூறினர். மெய்யாகவே (நீங்கள் திருந்தக் கூடுமென்று) அவ்வேதனையை (இன்னும்) சிறிது (காலத்திற்கு) நீக்கி வைத்தோம். (எனினும்,) நிச்சயமாக நீங்கள், (பாவம் செய்யவே) மீளுகிறீர்கள்.’ (திருக்குர்ஆன் 44:13-15)

(நபி(ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றது.) ஆனால், மறுமை நாள் வேதனை (அவர்களை விட்டு) அகற்றப்படவா போகிறது? ஆக, பஞ்சம் அகற்றப்பட்டது. பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்பிற்கே திரும்பி விட்டார்கள். எனவே, அல்லாஹ் அவர்களை பத்ர் போரின்போது (கடுமையாகப்) பிடித்தான்.

அல்லாஹ் கூறினான்: மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம். (திருக்குர்ஆன் 44:16)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4810

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)’ என்று கூறினர். அப்போது, ‘(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை…’ எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனம் அருளப்பெற்றது. மேலும், ‘(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்..’ எனும் (திருக்குர்ஆன் 39:53 வது) வசனமும் அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4811

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, ‘நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்’ என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்’ என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4813

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியாசனத்தைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்ட போதே மூர்ச்சையாகாமல்) இதே நிலையில் அன்னார் இருந்தார்களா அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)?’ என்று எனக்குத் தெரியாது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4814

அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அந்த இரண்டு எக்காளத்திற்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். அவர்களின் நண்பர்கள், ‘அபூ ஹுரைரா அவர்களே! நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். ‘(இதற்கு பதில் சொல்வதை விட்டும்) நான் விலகிக் கொள்கிறேன்’ என்று அபூ ஹுரைரா(ரலி) பதிலளித்தார்கள். நண்பர்கள், ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலகிக்கொள்கிறேன்’ என்று பதில் கூறினார்கள். நண்பர்கள், ‘மாதங்கள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலகிக் கொள்கிறேன். (ஏனெனில், எனக்கே இது குறித்துத் தெரியாது)’ என்று கூறிவிட்டு, ‘மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஆனால் அவனுடைய (முதுகந்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியைத் தவிர! அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4815

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) கூறினார். நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களிடம், ‘இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு அன்னார் (பின்வருமாறு) கூறினார்கள்: (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிஜ்ர் பகுதியில்) தொழுது கொண்டிருந்தபோது, உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் முன்னோக்கி வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோளைப் பிடித்து, தன் துணியை அவர்களின் கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சுத் திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூ பக்ர்(ரலி) முன்னால் வந்து, அவனுடைய தோளைப் பிடித்து இழுத்துவிட்டு, (நபியவர்களைத் துன்புறுத்தவிடாமல் தடுத்து,) ‘என் இறைவன் அல்லாஹ்தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்’ (திருக்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4816

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) ‘குறைஷியரில் இருவரும் அவர்களின் துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப்’ குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களின் மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும்’ (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘நம்முடைய பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டார். அவர்களில் ஒருவர், ‘(நம்முடைய பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான்’ என்று பதிலளித்தார். மற்றொருவர் ‘நம்முடைய பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக் கொண்டிருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான்’ என்று கூறினார். அப்போதுதான், ‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை’ எனும் இந்த வசனம் (திருக்குர்ஆன் 41:22) அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4817

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் ‘குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்’ (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், ‘நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டார். மற்றொருவர், ‘நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை’ என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், ‘நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்’ என்று கூறினார். அப்போது அல்லாஹ், ‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்த்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை’ எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4818

தாவூஸ் இப்னு கைஸான் அல்யமானீ(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘உறவினர்களிடம் அன்பு காட்டுவதைத் தவிர’ எனும் (திருக்குர்ஆன் 42:23 வது) வசனத் தொடர் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்), ‘(இந்த வசனத்திலுள்ள) ‘உறவினர்கள்’ என்பது ‘முஹம்மத்(ஸல்) அவர்களின் உறவினர்களை (பனூ ஹாஷிமை)க் குறிக்கும்’ என்று கூறினார்கள். உடனே, இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவசரப்பட்டு விட்டீர்; குறைஷிக் குலத்தின் எல்லாக் கிளையினருக்கும் நபி(ஸல்) அவர்களுடன் உறவு முறை இருக்கத்தான் செய்தது’ என்று கூறிவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள், (குறைஷியரின் அனைத்துக் கிளையினரையும் நோக்கி) குறைந்தபட்சம் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள உறவு முறையைப் பேணி (நல்ல முறையில்) நடந்து கொள்ள வேண்டுமென்றே பெரிதும் விரும்புகிறேன் என்று கூறினார்கள்’ என விளக்கமளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4819

யஅலா இப்னு உமைய்யா அத்தமீமி(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், உரைமேடை (மிம்பர்) மீதிருந்தபடி, ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்!’ என்று (நரகவாசிகள்) சப்தமிடுவார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 43:77 வது) வசனத்தை ஓதக் கேட்டேன்.

கத்தாதா(ரஹ்) கூறினார்: (திருக்குர்ஆன் 43:56 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸலன் லில் ஆம்ரீன்’ எனும் சொற்றொடருக்குப் ‘பிற்கால மக்களுக்கு அறிவுரையாக (ஆக்கினோம்)’ என்று பொருள்.

கத்தாதா(ரஹ்) அல்லாதோர் கூறினார்: (திருக்குர்ஆன் 43:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முக்ரினீன்’ எனும் சொல்லுக்குக் ‘கட்டுப்படுத்தக் கூடியவர்கள்’ என்று பொருள். ‘இன்னார் இன்னாரைக் கட்டுப்படுத்தக் கூடியவர்’ என்பதைக் குறிக்க ‘முக்ரின்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

(திருக்குர்ஆன் 43:71 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்வாப்’ எனும் சொல்லுக்குக் ‘கைப்பிடிகள் இல்லாத கோப்பைகள்’ என்று பொருள்.

கத்தாதா(ரஹ்) கூறினார்: (திருக்குர்ஆன் 43:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்முல் கிதாப்’ என்பதற்கு ‘மொத்த ஏடு – மூல ஏடு’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 43:81 வது வசனத்தின் பொருளாவது:) ரஹ்மானுக்குக் குழந்தை இல்லை; (அவ்வாறு இருப்பதாக யாரும் கூறினால்) கடுமையாக எதிர்ப்பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். ‘ரஜுலுன் ஆபிதுன்’ எனும் சொல்லுக்கும், ‘ரஜுலுன் அபிதுன்’ எனும் சொல்லுக்கும் ‘வணங்கும் மனிதன்’ என்றே பொருள்.

(வகீலிஹீ யா ரப்பீ எனும் 43:88 வது வசனத்தை) ‘வ காலர் ரஸுலு யாரப்பீ’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஓதியுள்ளார்கள். ‘அபித, ‘ய அபது எனும் வினைச் சொற்கள் வழியாக வரும் (ஆபித் எனும் விணையாலணையும் பெயரின் பன்மையான) ‘ஆபிதின்’ என்பதற்கு மறுக்கக் கூடியவர்கள்’ என்று பொருள்’ என்றும் கூறப்படுகிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4820

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘(மறுமைநாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் நடந்து (முடிந்து) விட்டன. ஒன்று புகை; இரண்டாவது ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது); மூன்றாவது சந்திரன் பிளந்தது; நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4821

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி(ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தபோது நபி(ஸல) அவர்கள், ‘யூசுஃப்(அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்’ எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் ஒருவர் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து) களைப்படைந்து தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அப்போது அல்லாஹ், ‘(நபியே!) வெளிப்படையொனதொரு புகை வானிலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். அது மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அது துன்புறுத்தும் வேதனை ஆகும்’ எனும் (திருக்குர்ஆன் 44:10, 11ஆகிய) வசனங்களை அருளினான். அப்போது ஒருவர் (அபூ சுஃப்யான்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! முளர் குலத்தாருக்கு மழைவேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் அழிவுக்குள்ளாம்விட்டார்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘முளர் குலத்தினருக்கா? நீங்கள் துணிவுமிக்கவர் தாம்’ என்று கூறிவிட்டு, (அவர்களுக்காக) மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே, அவர்களுக்கு வானம் பொழிந்தது. அப்போது, ‘மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 44:15 வது) வசனம் அருளப்பட்டது. (பிறகு அவர்களுக்குப் பஞ்சம் விலகி,) வளமான வாழ்வு ஏற்பட்டபோது, பழைய (இணைவைக்கும்) நிலைக்கே திரும்பிச் சென்றனர்.

அப்போது வல்லவனும் மாண்பாளனுமாகிய அல்லாஹ், ‘மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்’ எனும் (திருக்குர்ஆன் 44:16 வது) வசனத்தை அருளினான். அந்நாள் பத்ருப்போர் நாளாகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4822

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். (ஒருமுறை) நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நீங்கள் அறியாத ஒன்றைக் குறித்து (கேட்கப்படும்போது,) ‘அல்லாஹ்வே நன்கறிவான்’ என்று கூறுவது அறிவின் பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரிடம், ‘(நபியே! அவர்களிடம்) நீங்கள் கூறிவிடுங்கள்: இந்த (அழைப்பு)ப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பவானை செய்வோரில் ஒருவன் அல்லன்’ என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 38:86). குறைஷியர்நபி(ஸல்) அவர்களிடம் வரம்பு மீறி நடந்து, மாறு செய்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. மக்கள் (பசிக்) கொடுமையால் எலும்புகளையும், செத்தவற்றையும் தின்றனர். அவர்களில் ஒருவர் பசி மயக்கத்தால், (கண் பஞ்சடைந்து) தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அவர்கள் ‘எவர்கள் இறைவனே! எங்களைவிட்டு இந்த வேதனையை நீக்கிடுவாயாக! நிச்சயமாக, நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்’ என்று கூறினர். (திருக்குர்ஆன் 44:12)

அப்போது, (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) ‘நாம் அவர்களைவிட்டுச் சற்று வேதனையை அகற்றிவிட்டால், அவர்கள் (பழைய இணைவைப்பு நிலைக்குத்) திரும்பச் சென்றுவிடுவர்’ என்று கூறப்பட்டது. ஆனாலும், நபி(ஸல்) அவர்கள் (அவர்களுக்காக) தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், அவர்களைவிட்டு (தன்னுடைய வேதனையை) அகற்றினான். உடனே அவர்கள் (பழைய இணைவைக்கும் நிலைக்கே) திரும்பச் சென்றனர். (சத்திய நெறியை ஏற்போம் என்று அவர்கள் செய்து கொடுத்த வாக்குறுதியை விட்டெறிந்தனர்.) எனவே, அல்லாஹ் பத்ருப் போர் நாளில், அவர்களைப் பழிவாங்கினான். இதைத்தான் ‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்’ என்று தொடங்கி, ‘நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்’ என்று முடியும் (திருக்குர்ஆன் 44:10-16) வசனங்கள் குறிப்பிடுகின்றன.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4823

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். (சிறு உரையாடலுக்குப்) பிறகு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை நம்ப மறுத்துத் தமக்கு மாறுசெய்த குறைஷியருக்கெதிராக, ‘இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்கள் (பசியினால்) செத்த பிராணிகளைப் புசிக்கலாயினர். அவர்களில் ஒருவர் பசியினாலும் களைப்பினாலும் எழுந்து (பார்த்தால் கண் பஞ்சடைந்துப் போய்) தமக்கும் வானுக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். பிறகு, ‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்’ என்று தொடங்கி, ‘மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக் கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்’ என்று முடியும் (திருக்குர்ஆன் 44:10-15) வசனங்களை இப்னு அப்பாஸ்(ரலி) ஓதினார்கள். பிறகு அன்னார், அவர்கள் ‘மறுமை நாளில் அவர்களைவிட்டு வேதனை அகற்றப்படுமா என்ன?’ என்று கேட்டுவிட்டு, ‘பலமாக பிடிக்கும் நாள்’ என்பது, ‘பத்ருப் போர் தினமாகும்’ என்று (திருக்குர்ஆன் 44:16 வது வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4824

மஸ்ரூக்பின் அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்: அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை (நபியாக) அனுப்பி ‘(நபியே!) கூறிவிடுங்கள்: இந்த (அழைப்பு)ப் பணிக்காக உங்களிடம் நான் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன்’ என்று கூறினான். (திருக்குர்ஆன் 36:86) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தமக்குக் குறையுயர் மாறுசெய்ததைக் கண்டபோது ‘இறைவா! ஒசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவர்களைப் பஞ்சம் வாட்டியது; அனைத்துப் பொருட்களையும் அழித்துவிட்டது. அவர்கள் (பசியினால்) எலும்புகளையும் தோல்களையும் புசிக்க வாட்டியது.

அறிவிப்பாளர்களில் ஒருவர் ‘அவர்கள் தோல்களையும், செத்தவற்றையும் சாப்பிட்டனர்’ என்று கூறினார். (அப்போது) பூமியிலிருந்து புகையின் தோற்றத்தைப் போல் வெளியேறத் தொடங்கியது. அப்போது அபூ சுஃப்யான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘முஹம்மதே! உம் சமுதாயத்தினர் அழிந்துவிட்டார்கள். அவர்களைவிட்டும் (பஞ்சம்) விலகப் பிரார்த்தனை புரியுங்கள்!’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (பஞ்சமும் அகன்றது.) பிறகு ‘இதற்குப் பின் நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிவிடுவீர்கள்’ என்று கூறினார்கள்.

மன்ஸுர் இப்னு முஃதமிர்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்’ என்று தொடங்கித் ‘திரும்பச் செல்கிறீர்கள்’ என்று முடியும் (திருக்குர்ஆன் 44:10-15) வசனங்களை ஓதினார்கள்’ என்றும், ‘(அவர்களை விட்டும்) மறுமையின் வேதனை அகற்றப்படுமா என்ன? புகை, பலமான பிடி, வேதனை ஆகியன நடந்து முடிந்து விட்டன’ என்றும் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவர் சந்திரன் பிளந்தது பற்றியும், இன்னொருவர் ரோம (பைஸாந்திய)ர்கள் (தோற்கடிக்கப்பட்டு, பிறகு வென்றது) குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4825

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாயங்கள் நடந்து (முடிந்து)விட்டன. ஒன்று, (பத்ருப் போரில் எதிரிகளுக்குக் கிடைத்த) தண்டனை இரண்டாவது, ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது). மூன்றாவது, இறைவனின் தண்டனைப் பிடி, நான்காவது, சந்திரன் பிளந்தது. ஐந்தாவது, புகை

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4826

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4827

யூசுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார். மர்வான் இப்னு அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா(ரலி) நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒரு நான் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா(ரலி) அவர்களின் புதல்வர் யஸீத் குறித்துப் பேசியவாறு முஆவியாவுக்குப் பின்னர் யஸீதுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்ய வேண்டுமெனக் கூறினார். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) மர்வானுக்கு (மறுப்புக் தெரிவித்து) ஏதோ கூறினார். உடனே மர்வான் ‘அவரைப் பிடியுங்கள்’! என்று (தம் சிப்பாய்களுக்கு) உத்தரவிட்டார். உடனே, அப்துர் ரஹ்மான்(ரலி) தம் சகோதரி ஆயிஷா(ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து கொண்டார்கள். எனவே, அவரைப் பிடிக்க அவர்களுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. அப்போது மர்வான் ‘ஒருவன் தன் பெற்றோரிடம் ‘சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா?…’ எனும் (திருக்குர்ஆன் 46:17 வது) வசனத்தை இவர் (போன்றவர்களின்) விஷயத்தில் தான் அல்லாஹ் அருளினான்’ என்று கூறினார். அப்போது ஆயிஷா(ரலி) திரைக்கப்பால் இருந்துகொண்டு, ‘(அபூ பக்ர்(ரலி) அவர்களின் குடும்பத்தினராகிய) எங்களின் விஷயத்தில், என் கற்பொழுக்கத்தை அறிவிக்கும் வசனத்தைத் தவிர, வேறு எந்த வசனத்தையும் குர்ஆனில் அல்லாஹ் அருளவில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4828

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4829

ஆயிஷா(ரலி) அறிவித்தார். மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், ‘இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (‘ஆத்’ எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, ‘இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்’ என்றே கூறினர்’ என பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4830

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘என்ன?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்’ என்று கூறியது. ‘உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!’ என்று கூறியது. அல்லாஹ் ‘இது (அவ்வாறுதான்) நடக்கும்’ என்று கூறினான்.

அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி), ‘நீங்கள் விரும்பினால் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4831

ஸயீத் இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார். மேற்கண்ட இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப் பிறகு, ‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4832

மேற்சொன்ன இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுளள்து.

(திருக்குர்ஆன் 47:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘மாறுகின்ற’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4833

அஸ்லம்(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) ஏதோ ஒன்றைக் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர்(ரலி) (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), ‘உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே’ என்று கூறினார்கள்.

மேலும், உமர்(ரலி) கூறினார்: அதற்குப் பிறகு நான் என்னுடைய ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்த படி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக்கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள் ‘இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதே அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்’ என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம்’ என்று (தொடங்கும் 48:1 வது இறைவசனத்தை) ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4834

கத்தாதா இப்னு தீஆமா(ரஹ்) அறிவித்தார். ‘(நபியே!) நாம் உங்களுக்கு பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம்’ எனும் (திருக்குர்ஆன் 48:1 வது) இறைவசனம் ஹுதைபிய்யா உடன் படிக்கையையே குறிக்கிறது’ என்று அனஸ்(ரலி) கூறினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4835

அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தம் ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48 வது) அத்தியாயத்தைத் ‘தர்ஜீஉ’ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்டிருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4836

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் ‘தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்?)’ என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4837

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?’ என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி(ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். ‘ருகூஉ’ செய்ய நினைக்கும்போது, எழுந்து (சிறிதுநேரம்) ஓதுவார்கள். பிறகு, ‘ருகூஉ’ செய்வார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4838

அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 48:8 வது) குர்ஆன் வசனத்தையே ‘தவ்ராத்’ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:

‘நபியே! நிச்சயமாக, நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (‘முத்தவக்கில்’) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்.)

(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்து விட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரின் உயிரைக் கைப்பற்ற மாட்டான். மக்கள் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4839

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக் கொண்டிருந்தார். அவரின் குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது. அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டு கொண்டிருந்தது. விடிந்தவுடன் அவர் நபி(ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4840

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஹுதைபிய்யா நாளில் நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4841

அந்த மரத்தினடியில் நடைபெற்ற (‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸ்னீ(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை) இரண்டு விரல்களால் எறிந்து விளையாடும்) ‘கத்ஃப்’ எனும் கல்சுண்டு விளையாட்டிற்குத் தடைவிதித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4842

உக்பா இப்னு ஸ¤ஹ்பான்(ரஹ்) கூறினார். குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூற கேட்டேன். (நபி(ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4843

அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார். அந்த மரத்(தடியில் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு அள்ளஹ்ஹாக்(ரலி) (கூறினார்கள்:)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4844

ஹுபைப் இப்னு அபீ ஸாபித்(ரஹ்) கூறினார். நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம் (‘காரிஜிய்யா’ எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள். நாங்கள் ‘ஸிஃப்பீன்’ எனுமிடத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது ‘(அப்துல்லாஹ் இப்னு அல்கவ்வா’ என்றழைக்கப்படும்) ஒருவர், ‘அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படுகிறவர்களை நீங்கள் காணவில்லையா?’ என்று கேட்டதற்கு அலீ(ரலி), ‘ஆம், (அல்லாஹ்வின் வேதம் கூறுகிற தீர்ப்புப்படி செயல்பட அழைப்புவிடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக்கொள்வேன்’) என்று கூறினார்கள். அப்போது ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) கூறினார்:

(இப்போரில் கலந்து கொள்ளாததற்காக யார் மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். நபி(ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடைபெற்ற ஹுதைபியா நாளில் எங்களை பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போரிடுதல் பொறுத்தமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பவர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக் கூட ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர்(ரலி) வந்து, ‘(அல்லாஹவின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும்) இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டு விடும்போது நம் வீரர்கள் சொர்க்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். உமர்(ரலி) ‘அப்படியிருக்க, நாம் நம்முடைய மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வின் தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்’ என்று கூறினார்கள்: (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணைவைப்பாளர்களின் மீது) உமர்(ரலி) கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து ‘அபூ பக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?’ என்று (நபி(ஸல்) அவர்களிடம் கேட்டது போன்றே) கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ‘கத்தாபின் புதல்வரே! நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்’ என்று கூறினார்கள். அப்போது ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48 வது) அத்தியாயம் இறங்கிற்று.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4845

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். (ஒருமுறை) நல்லவர்களான அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாயுஉ குலத்தவரான அக்ரஃ இப்னு ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூ பக்ர்), இன்னொருவரை (கஅகாஉ இப்னு மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். ‘அந்த இனனொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது’ என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) கூறினார்: அப்போது அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், ‘எனக்க மாறு செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘தங்களுக்கு மாறு செய்வது என் விருப்பமன்று’ என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, ‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!’ எனும் (திருக்குர்ஆன் 49:2 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

இப்னு ஸ¤பைர்(ரலி) கூறினார்: இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி(ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள். இப்னு ஸ¤பைர்(ரலி) இந்த ஹதீஸில் தம் பாட்டனார் அபூ பக்ர்(ரலி) அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4846

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (திருக்குர்ஆன் 49:2 வது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர் ‘அவரைக் குறித்த செய்தியை தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தம் தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தம் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம், ‘உங்களுக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டதற்கு ஸாபித்(ரலி), ‘(என்னுடைய நிலை) மோசம் தான். நான் நபி(ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். நான் நரகவாசிகளில் ஒருவன்தான்’ என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஸாபித் இப்னு கைஸ் இப்படி இப்படிக் கூறினார்’ என்று தெரிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான மூஸா இப்னு அனஸ்(ரஹ்) கூறினார்: அந்த மனிதர் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம், (இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஸாபித் இப்னு கைஸ் அவர்களிடம் சென்று ‘நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்!’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4847

அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினார்.) அப்போது அபூ பக்ர்(ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) ‘கஅகாஉ இப்னு மஅபத்’ அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்’ என்று (யோசனை) கூறினார்கள். உமர்(ரலி), ‘அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!’ என்று (யோசனை) கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு மாறு செய்வதை’ அல்லது ‘எனக்கு எதிராக மாறு செய்வதையே’ நீங்கள் விரும்பினீர்கள்’ என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), ‘உங்களுக்கு எதிராகப் பேசுவது என்னுடைய நோக்கமன்று’ என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்து விட்டன. இது தொடர்பாகவே ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் அறிபவனாகவும் இருக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 49:1 வது) இறைவசனம் முழுவதும் இறங்கிற்று.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4848

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தன்னுடைய பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘போதும்! போதும்!’ என்று கூறும் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4849

முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார். நரகத்திடம் ‘உனக்கு வயிறு நிரம்பி விட்டதா?’ என்று கேட்கப்படும். அது, ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும். அப்போது அருள் வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் தன்னுடைய பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது ‘போதும்! போதும்!’ என்று கூறும்.

இதை அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். (ஆனால், இதன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ சுஃப்யான் அல்ஹிகியரீ(ரஹ்) பெரும்பாலும் ‘அபூ ஹுரைரா(ரலி) கூறினார்’ என்றே (மவ்கூஃபாக) அறிவிப்பார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4850

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், ‘பெருமை அடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்’ என்று சொன்னது. சொர்க்கம், ‘எனக்கு என்ன நேர்ந்தோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்’ என்று கூறியது.

அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்’ என்று கூறினான். நரகத்திடம் ‘நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்’ என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் ‘போதும்! போதும்!’ என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4851

ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஓர் இரவில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதினான்காம் இரவின் முழுநிலவைக் கூர்ந்து நோக்கியபடி, ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் உங்களுடைய இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டு, ‘சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 50:39 வது) வசனத்தை ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4852

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் (தன்னைத்) துதிக்கும்படி நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவே ‘சுஜூத் செய்து வணங்கி முடித்த பின்பும்…’ எனும் (திருக்குர்ஆன் 50:40 வது) இறை வசனத்தின் கருத்தாகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4853

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். ‘நான் நோயுற்றுள்ளேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின்போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், ‘நீ மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி வருவாயாக!’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் சுற்றி வந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52 வது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுது கொண்டிருந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4854

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52 வது) அத்தியாயத்தை ஓதக்கேட்டேன். ‘(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கிறார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்களுடைய இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள் தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?’ எனும் இந்த (திருக்குர்ஆன் 52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்து விடுமளவுக்குப் போய்விட்டது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:. ‘மஃக்ரிப் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ அத்தியாயத்தை ஓதினார்கள்’ என்று முஹம்மத் இப்னு ஜுபைர்(ரஹ்) தம் தந்தை (ஜுபைர் இப்னு முத்யிம்)யிடமிருந்து அறிவித்தார்கள்’ என்பதை மட்டுமே ஸ¤ஹ்ரி(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். என் நண்பர்கள் எனக்கு அறிவித்த (மீதமுள்ள) கூடுதல் தகவலை நான் ஸ¤ஹ்ரீ அவர்களிடமிருந்து செவியேற்கவில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4855

மஸ்ரூக் இப்னு அஜ்த(ரஹ்) அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘அன்னையே முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின?) அவற்றை உங்களிடம் தெரிவிக்கிறவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் கூறுகிறவர் பொய் சொல்லி விட்டார்’ என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக), ‘கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்’ எனும் (திருக்குர்ஆன் 06:103 வது) வசனத்தையும், ‘எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகிறவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 42:51 வது) வசனத்தையும் ஒதினார்கள். மேலும், ‘உங்களிடம் முஹம்மது(ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்’ என்று சொல்கிறவரும் பொய்யே கூறினார்’ என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக,) ‘எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 31:34 வது) வசனத்தை ஓதினார்கள். மேலும், ‘உங்களிடம் முஹம்மத்(ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள்’ என்று சொன்னவரும் பொய்யே கூறினார்’ என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக) ‘தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்…’ (எனும் 5:67 வது) வசனத்தை ஓதினார்கள். ‘மாறாக, முஹம்மத்(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களையே அவரின் (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4856

ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அறிவித்தார். ‘(வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்’ எனும் (திருக்குர்ஆன் 53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்வூத்(ரலி) எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4857

அபூ இஸ்ஹாக் அஷ்ஷைபானீ(ரஹ்) அறிவித்தார். நான் ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அவர்களிடம், ‘(வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜீப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்’ எனும் (திருக்குர்ஆன் 53:9, 10) வசனங்கள் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஜிப்ரீல் (அலை) அவர்களை அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) முஹம்மத்(ஸல்) அவர்கள் கண்டார்கள்’ என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எங்களிடம் தெரிவித்தார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4858

அர்கமா இப்னு கைஸ் அந்நகஈ(ரஹ்) கூறினார். ‘உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார்’ எனும் (திருக்குர்ஆன் 53:18 வது) வசனத்தின் கருத்தாவது: அடிவானத்தை அடைத்திருந்த பச்சை விரிப்பு ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4859

அபுல் ஜவ்ஸா அவ்ஸ் இப்னு அப்தில்லாஹ் அர்ரப்ஈ(ரஹ்) கூறினார். ‘லாத், உஸ்ஸா…’ எனும் (திருக்குர்ஆன் 53:19 வது) வசனத்திலுள்ள ‘லாத்’ என்பது, ஹாஜிகளுக்காக மாவு பிசைந்து தந்து கொண்டிருந்த ஒரு மனிதராவார் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4860

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4861

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் (‘ஹஜ்ஜில் ஸஃபா மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 02:158 வது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன?’ என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘முஷல்லல் எனும் குன்றில் இருந்து ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில், சுற்றி வராமலிருந்தார்கள். அப்போதுதான் ‘நிச்சயமாக ‘ஸஃபா’, ‘மர்வா’ (எனும் இரண்டு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்…’ எனும் (திருக்குர்ஆன் 02:158 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றி வந்தனர்’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) ‘குதைத்’ எனும் இடத்தில் ‘முஷல்லல்’ எனும் குன்றிலிருந்த சிலையாகும்’ என்று கூறினர்கள். ஆயிஷா(ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், ‘இந்த (திருக்குர்ஆன் 02:158 வது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும், ‘ஃகஸ்ஸான்’ குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் ‘மனாத்’ சிலைக்காக, இஹ்ராம் கட்டி வந்தனர்’ என்று தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.

ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயிருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டி வந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் இறைத்தூதர் அவர்களே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றி வராமலிருந்தோம்… என்று கூறினார்’ எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4862

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு உலைய்யா(ரஹ்) தம் அறிவிப்பில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை (அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4863

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஓதலுக்குரிய) ‘சஜ்தா’ அருளப்பெற்ற முதல் அத்தியாயம் ‘அந்நஜ்ம்’ ஆகும். அதை ஓதியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) ‘சஜ்தா’ செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர! அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டு சென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை கண்டேன். பின்னர் அவன் (பத்ருப் பேரின் போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை கண்டேன். அவன்தான் உமய்யா இப்னு கலஃப் ஆவான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4864

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4865

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4866

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4867

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மக்காவாசிகள் (நபி(ஸல்) அவர்களிடம்) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4868

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4869

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (குர்ஆனின் 54 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃபஹ்ல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர்’ என்றோ ஓதவில்லை.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4870

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (குர்ஆனின் 54 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்’ (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர்’ என்றோ ஓதவில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4871

அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈ(ரஹ்) அறிவித்தார். ஒருவர் அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்களிடம் (54 வது) அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின் (ம்) முத்தகிர்’ என்று ஓத வேண்டுமா? அல்லது ‘முஃதக்கிர்’ என்று ஓத வேண்டுமா? என்று கேட்டதற்கு அவர்கள், ‘ஃபஹல் மின் முத்தகிர்’ என்றே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஓதக் கேட்டேன். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள், ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என ‘தால்’ (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை கேட்டேன் என அப்துல்லாஹ் கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4872

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (54 வது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) நபி(ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4873

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (54 வது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர்’ என்றே ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4874

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் ‘ஃபஹ்ல் மின்(ம்) முஸ்ஸகிர்’ என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், ‘ஃபஹ்ல் மின்(ம்) முத்தகிர் (என்றே ஓதுக!)’ என்றார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4876

யூசுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார். நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், ‘நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோது, மக்காவில் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு, ‘தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 54:46 வது) இறைவசனம் அருளப் பெற்றது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4877

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பத்ருப்போரின்போது தம் கூடாரமென்றில் இருந்தபடி, ‘(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப் போவதில்லை’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘போதும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, ‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4879

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4880

மேலும், இரண்டு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரண்டு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் தங்கத்தினால் ஆனவை. ‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது என அப்துல்லாஹ் இப்னு கைஸ் (அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4881

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால், ‘(படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 56:30 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4882

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘அத்தவ்பா’ எனும் (9 வது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூடவிட்டு வைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டு விட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்’ என்று கூறினார்கள். நான் அவர்களிடம் , ‘அல் அன்ஃபால்’ எனும் (8 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘பத்ருப்போர் குறித்து அது அருளப்பெற்றது’ என்று பதிலளித்தார்கள். நான் ‘அல்ஹஷ்ர்’ என்று பதிலளித்தார்கள். நான் ‘அல்ஹஷ்ர்’ எனும் (59 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4883

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (59 வது அத்தியாயத்தின் பெயரை) ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். அவர்கள் ‘அந்நளீர்’ அத்தியாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4884

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘புவைரா’ எனுமிடத்திலிருந்து ‘பனூ நளீர்’ குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும், (சிலவற்றை) வெட்டினார்கள். அப்போது அல்லாஹ், ‘நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அவற்றின் அடி மரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)’ எனும் (திருக்குர்ஆன் 59:5 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4885

உமர்(ரலி) அறிவித்தார். பனூநளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்களின்) குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிருக்கவில்லை. எனவே, அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தம் ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4886

அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’ என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)’ என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்’ என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்’ என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), ‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!’ என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4887

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) கூறினார்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து உம்மு யஅகூப் எனும் பெண்மணி அறிவித்த இந்த ஹதீஸை நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4888

அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். (‘அபூ லுஃலுஆ ஃபைரோஸ்’ என்பவனால் கத்தியால் குத்தப்பட்ட பிறகு) உமர்(ரலி), ‘(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து (அவர்களின் கண்ணியத்தைக் காத்துக்) கொள்ளவேண்டும் என்று (எனக்குப் பின்னர் வரவிருக்கும்) ‘கலீஃபா’வுக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், நபி(ஸல்) அவர்கள் (மற்றும் நபித்தோழர்கள்) ‘ஹிஜ்ரத்’ செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு இறைநம்பிக்கையை (உறுதியாகப்) பற்றிக் கொண்ட அன்சாரிகளில் நன்மைபுரிபவரிடமிருந்து (அவரின் நன்மையை) ஏற்று, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்திட வேண்டும் என்று நான் அந்த கலீஃபாவுக்கு உபதேசம் செய்கிறேன்’ என்றார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4889

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்’ என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, ‘(இவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே!’ என்று கூறினார்.

அதற்கு அவர் மனைவி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை’ என்று பதிலளித்தார். அவர், ‘(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்’ என்று கூறினார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் ‘வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) ‘சிரித்துக் கொண்டான்’ என்று கூறினார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்.’. எனும் (திருக்குர்ஆன் 59:9 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4890

அலீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸ¤பைர் இப்னு அவ்வாம் அவர்களையும், மிக்தாத் இப்னு அஸ்வத் அவர்களையும் ‘நீங்கள் ‘ரவ்ளத்துகாக்’ எனுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு ‘ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ’ நம்முடைய இரகசியத் திட்டங்களை எழுதித் தெரிவித்துள்ள) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். அதை அவளிடமிருந்து கைப்பற்றி வாருங்கள்!’ என்று கூறியனுப்பினார்கள்.

உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த ‘ரவ்ளத்து காக்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், ‘கடிதத்தை வெளியே எடு!’ என்று சொன்னோம். அதற்கு அவள், ‘என்னிடம் கடிதம் ஏதுமில்லை’ என்று பதிலளித்தாள். நாங்கள், ‘ஒன்று, நீயாயக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உன்னுடைய) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும்’ என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம்.

அதில் ‘ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ(ரலி) மக்காவாசிகளான இணை  வைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருக்கக் கண்டோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஹாத்திபே! என்ன இது?’ என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி) (தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு), ‘இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்காமல் அவர்களிடையே (வசித்து வந்த) ஒருவனாகவே இருந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும், சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்காவில் உறவினர் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் (எவரும்) இல்லாததால், மக்காவாசிசளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் (பிரதியுபகாரமாக) என் உறவினரைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினேன். (அதனால், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாமைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்கோ இவ்விதம் செய்யவில்லை’ என்று (காரணம்) கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இவர் உங்களிடம் உண்மையே கூறினார்’ என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி) இறைத்தூதர்! என்னை விடுங்கள்; (சதி வேலைகளை செய்த) இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்’ என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப்போரில் பங்கேற்றவர்களிடம் ‘நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்’ என்று கூறினார்கள்.

‘ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ’(ரலி) விஷயத்தில்தான் ‘இறை நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாயிருப்பவர்களை நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 60:1 வது) வசனம் அருளப்பட்டது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:) இந்த இறைவசனம் (அலீ(ரலி) அவர்களின்) அறிவிப்பிலேயே உள்ளதா? அல்லது அம்ர் இப்னு தீனார் அவர்களின் (அறிவிப்பின்போது வந்த) சொல்லா என்று எனக்குத் தெரியாது.

அலீ இப்னு அல்மதீனீ(ரஹ்) கூறினார். சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், ‘ஹாத்திப் இப்னு அபீ பல்த்த ஆ(ரலி) தொடர்பாகத்தான் இவ்வசனம் (திருக்குர்ஆன் 60:01) இறங்கிற்றா?’ என்று கேட்கப்பட்டது. சுஃப்யான்(ரஹ்), ‘இப்படித்தான் மக்களின் அறிவிப்புகளில் காணப்படுகிறது. இந்த அறிவிப்பை நான் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடமிருந்து செவியேற்றேன். அதில் ஒரு வார்த்தையைக் கூட நான் விட்டுவிடவில்லை. நான் அல்லாத வேறு யாரும் அம்ர் அவர்களிடமிருந்து இதனை நன்கு நினைவில் நிறுத்திக் கொண்டதாக நான் கருதவில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4891

நபி(ஸல்) அவர்கள் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். இந்த (திருக்குர்ஆன் 60:10-12 வது வசனங்களின் ஆணைக்கேற்ப இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் சோதனை செய்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் ஏற்றுக் கொண்டவரிடம் ‘உன் நம்பிக்கைப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்’ என்று பேச்சால் மட்டுமே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், ‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்’ என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.

இது இன்னும் பல அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4892

உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார். நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்கமாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரிவைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்கை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தம் கையை பின்வாங்கினார். மேலும், அவர் ‘இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரி வைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்’ என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரி வைத்து)விட்டுத் திரும்பி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4893

இக்ரிமா(ரஹ்) அறிவித்தார். ‘எந்த ஒரு நற்செயலிலும், (நபியே!) உங்களுக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தி)ன், விளக்கவுரையி)ல், ‘இதுவும் பெண்களின் மீது அல்லாஹ் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4894

உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்கமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?’ என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

சுஃப்யான் இப்னு உயையனா(ரஹ்) அவர்களின் அதிகமான அறிவிப்பில் ‘அந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள்’ என்றே காணப்படுகிறது. (‘பெண்கள் பற்றிய வசனம்’ என்று காணப்படவில்லை) தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகி விடும்.

மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்து விட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்’ என்று கூறினார்கள்.

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4895

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனும். அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்த பின்) நபி(ஸல்) அவர்கள் (மிம்பர் – மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தம் கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பது போல் உள்ளது. பிறகு ஆண்(களின் வரிசை)களைப் பிளந்துகொண்டு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள்.

அப்போது ‘நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணைவைக்க மாட்டார்கள் என்றும், திருடமாட்டார்கள் என்றும், விபசாரம் செய்யமாட்டார்கள் என்றும், தம் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள் என்றும், தங்கள் கை கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்றும், எந்த ஒரு நற்செயலிலும் உமக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிடமிருந்து விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். திண்ணமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், கருணை புரிபவனுமாய் இருக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனம் முழுவதையும் ஓதிமுடித்துவிட்டு, ‘இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா?’ என்று கேட்டார்கள். ஒரேயொரு பெண்மணி மட்டும், ‘ஆம் (நீடிப்போம்), இறைத்தூதர் அவர்களே!’ என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. அந்தப் பெண் யாரென்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹஸன் இப்னு முஸ்லிம்(ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை – அப்பெண்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் தர்மம் செய்யுங்கள்!’ என்று கூறினார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை விரித்தார்கள். அப்போது மோதிரங்களையும் மெட்டிகளையும் அப்பெண்கள் பிலால்(ரலி) அவர்களின் ஆடையில் போடலானார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4896

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: எனக்குப் பல பெயர்கள் உண்டு. நான் ‘முஹம்மது’ (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் ‘அஹ்மத்’ (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் ‘மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் ‘ஹாயுர்’ (ஒருங்கிணைப்பாவர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன் என ஜுபைர் இப்னு முதஇம்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4897

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62 வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)’ எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிசீ(ரலி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சல்மான் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸ¤ரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதனை அடைந்தே தீருவார்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4898

அபுல் ஃகைஸ் சாலிம்(ரஹ்) அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘இவர்களில் சில மனிதர்கள் இதனை அடைந்தே தீருவர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4899

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்தபோது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிருந்த மக்கள்) கலைந்து சென்றார்கள். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் ‘அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்று விடுகின்றனர்’ எனும் (திருக்குர்ஆன் 62:11 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4900

ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள்’ என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, ‘நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்’ என்று கூறினான். அவன் கூறியதை ‘(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்’ அல்லது ‘உமர்(ரலி) அவர்களிடம்’ கூறினேன். அவர் அதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) ‘நாங்கள் அதைச் சொல்லவேயில்லை’ என்று அவர்கள் சாதித்தார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை’ என்று கூறினார்கள். அப்போது, ‘இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது’ என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப் படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவு படுத்திவிட்டான்)’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4901

ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பான், ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டும்) விலகிச் சென்று விடுவார்கள்’ என்று சொல்வதையும், மேலும், ‘நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்’ என்று கூறுவதையும் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, ‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை’ என்று சத்தியம் செய்தனர். எனவே, அவர்களை நம்பிவிட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்துவிட்டார்கள். (என் வாழ்நாளில் அதற்கு முன்) இதுபோன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. எனவே, நான் என்னுடைய வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், ‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது’ என்று தொடங்கி ‘ஆயினும், நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்’ என்று முடியும் (திருக்குர்ஆன் 63:1-8) வசனங்களை அருளினான். உடனே, எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, ‘ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப் படுத்திவிட்டான்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4902

ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவழிக்காதீர்கள்’ என்றும், ‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால்,… ‘என்றும் கூறியபோது, அதனை நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது என்னை அன்சாரிகள் கண்டித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை, தான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தான். எனவே, நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள் (எனத் தகவல் வந்தது). உடனே, நான் அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், ‘(ஸைதே!) அல்லாஹ் உன்னை உண்மைப் படுத்திவிட்டான்’ என்று கூறினார்கள். மேலும், ‘இவர்கள் தாம் ‘இறைத்தூதருடன் இருப்பவர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள்’ என்று கூறினார்கள்…’ எனும் (திருக்குர்ஆன் 63:7 வது) வசனமும் அருளப்பெற்றது.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4903

ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை தம் நண்பர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் செல்வார்கள்’ என்றும், ‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்’ என்றும் சொன்னான். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான். அன்சாரிகள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்’ என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது.

அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் ‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது…’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பினார்கள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘குஷுபும் முசன்னதா’ (சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4904

ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலு}ல் என்பான், ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரிடமிருந்து) விலகிச் சென்று விடுவர். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து நிச்சயம், வெளியேற்றிவிடுவர்’ என்று கூறுவதை கேட்டேன். அதை நான் என் நிசிய தந்தையாரிடம் கூறினேன். என் சிறிய தந்தையார் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். (ஆனால்,) அப்துல்லாஹ்வையும் அவனுடைய ஆட்களையும் உண்மையாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். அவர்கள் வந்து, ‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை’ என்று சத்தியம் செய்தனர். (அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நம்பினார்கள்.) என்னை நம்ப மறுத்துவிட்டார்கள். என் வாழ்நாளில், அதற்கு முன் இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. எனவே, நான் என்னுடைய வீட்டில் (கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் (என்னிடம்), ‘நபி(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபமடையும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது, திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கிறோம் என்று கூறுகின்றனர்’ எனும் (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அருளினான். உடனே, எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அந்த வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு, ‘ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப் படுத்திவிட்டான்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4905

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் ‘ஒரு போரில்’ அல்லது ‘ஒரு படையில்’ இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி ‘அன்சாரிகளே! (உதவுங்கள்.)’ என்று கூறினார். அந்த முஹாஜிர் ‘முஹாஜிர்களே! உதவுங்கள்!’ என்று கூறினார். இந்தப் பேச்சை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செவியேற்று, ‘இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இறைத்தூதர் அவர்களே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார்’ என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை’ என்று கூறினார்கள்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இதைக் கேட்டுவிட்டு ‘இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்’ என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி(ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர்(ரலி) எழுந்து, ‘என்னை விடுங்கள் இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது’ என்று கூறினார்கள். மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளை விட அதிகமானார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம்’ என ஜாபிர்(ரலி) கூறினார் எனக் காணப்படுகிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4906

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக, நான் (பெரிதும்) துக்கப்பட்டேன். நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக’ என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன். அன்சாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் நபி(ஸல்) அவர்கள் (துஆவில்) குறிப்பிட்டார்களா? இல்லையா என்பதை உறுதிசெய்யமுடியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஃபள்ல்(ரஹ்) தெரிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தபோது அன்னாருடன் இருந்தவர்களில் சிலர், (ஸைத் இப்னு அர்கம் பற்றிக்) கேட்டனர். அதற்கு அனஸ்(ரலி) ‘(நயவஞ்சகர்களின் முறைகேடான பேச்சுக் குறித்து இவர் தெரிவித்த தகவலை நபிகளார் ஏற்க மறுத்துவிட்ட பின்னர், இவரை உண்மைப்படுத்தி அல்லாஹ் வசனத்தை அருளியபோது) ‘இவர் தம் காதால் கேட்டது உண்மையே என அல்லாஹ்வே அறிவித்து விட்டான்’ என்று இவர் தொடர்பாகத்தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4907

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் ஒரு போரில் இருந்துகொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, ‘அன்சாரிகளே! (உதவுங்கள்)’ என்று கூறினார். முஹாஜிர், ‘முஹாஜிர்களே! (உதவுங்கள்)’ என்று கூறினார். இந்தப் பேச்சை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எட்டச் செய்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள், ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். உடனே, அன்சாரி ‘அன்சாரிகளே, (உதவுங்கள்)’ என்று கூற, முஹாஜிரும், ‘முஹாஜிர்களே, (உதவுங்கள்)’ என்று கூறினார்’ என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இத்தகைய வாதங்களைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளைவிட) அதிகரித்து விட்டார்கள். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை ‘இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக, நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்’ என்று கூறினான். அப்போது (செய்தி அறிந்த) உமர் இப்னு கத்தாப்(ரலி), ‘என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறறேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டு விடுங்கள். ‘முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார்’ என்று மக்கள் பேசி விடக்கூடாது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4908

சாலிம்(ரஹ்) அறிவித்தார். (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் துணைவியாரை விவாகரத்துச் செய்து விட்டார்கள். அப்போது அவர்களின் துணைவியாருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே, (என் பாட்டனார்) உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இதைத்) தெரிவித்தார்கள். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். பிறகு, ‘அவர் (அப்துல்லாஹ் இப்னு உமர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்து, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரைத் தம் மனைவியாகவே வைத்துக் கொள்ளட்டும்! பிறகு, (மீண்டும்) அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு (அதிலிருந்து) தூய்மையும் அடைந்தால், அப்போது அவருக்குத் தோன்றினால் விவாகரத்துச் செய்யட்டும்! அதுவும் தாம்பத்திய உறவுக்கு முன்னால். (மாதவிலக்கிலிருந்து தூய்மையாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும்’ என்றும் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4909

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஒருவர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், ‘தன் கணவன் இறந்து நாற்பது நாள்களுக்குப் பின் பிரசவித்த ஒரு பெண்(ணின் ‘இத்தா’ பிரசவத்தோடு முடிந்துவிடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்கிடுங்கள்’ என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), ‘இரண்டு தவணைகளில் பிந்தியது’ என்று கூறினார்கள். உடனே நான் (இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம்,) ‘கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும்’ (என்று குர்ஆன் 65:4 வது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன்.

அப்போது அபூ ஹுரைரா(ரலி), ‘நானும் என் சகோதரர் மகன் அபூ ஸலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ்(ரலி) தம் பணியாளர் ‘குரைப்’ என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்முஸலமா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதற்கு உம்மு ஸலமா(ரலி) (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவரின் கணவர் (ஸஅத் இப்னு கவ்லா (ரலி) இறந்து விட்டார். அவர் இறந்து நாற்பது நாள்களுக்குப் பின்னால், சுபைஆ குழந்தை பெற்றெடுத்தார். உடனே, அவரைப் பெண் பேசப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக்(ரலி) அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு ‘இத்தா’ பிரசவம் வரையில்தான்.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4910

முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார். நான் (மார்க்க அறிஞர்) அப்துர்ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) இருந்த அவையில் இருந்து கொண்டிருந்தேன். அவரின் நண்பர்கள் அவரைக் கண்ணியப்படுத்தி வந்தனர். (அப்போது அன்னாரின் நண்பர்களில் ஒருவர், கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியின் ‘இத்தா’ காலம் குறித்துப் பேசினார்.) அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்), ‘இரண்டு தவணைகளில் பிந்தியது’ என்று கூறினார்கள். உடனே நான், ‘அப்துல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) வாயிலாகக் கிடைத்த ‘சுபைஆ பின்த் அல்ஹாரிஸ்’(ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைச் சொன்னேன். அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களின் நண்பர்களில் சிலர் என்னை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தனர். அதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன். எனவே, நான் ‘அப்துல்லாஹ் இப்னு உத்பா (தற்போது) ‘கூஃபா’வில் தான் இருக்கிறார். (அவர் சொல்லாத ஒன்றை) அவரின் மீது நான் பொய்யாகச் சொல்வதானால் நான் துடுக்கானவன் ஆவேன்’ என்று சொன்னேன். உடனே (என்னைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்தவர்) கூச்சப்பட்டார். மேலும், அப்துர் ரஹ்மான்பின் அபீ லைலா அவர்கள் ‘ஆனால், அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்களின் தந்தையின் சகோதரர் (இப்னு மஸ்வூத்) அவர்கள் அப்படிக் கூறவில்லையே!’ என்று கூறினார். எனவே, நான் அபூ அத்திய்யா மாலிக் இப்னு ஆமிர்(ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டேன். அவர்களும் சுபைஆ அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைக் கூறலானார்கள். நான் (அவர்களிடம்), ‘இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் ஏதேனும் கேட்டுள்ளீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்.

(கணவர் இறந்து கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் விஷயத்தில் ‘இத்தா’ காலத்தை நீட்டித்து) அவளுக்குச் சிரமத்தை அளிக்கிறீர்களா? அவளுக்குச் சலுகை காட்டக் கூடாதா? (உண்மை என்னவென்றால்,) பெண்கள் தொடர்பான (‘அத்தலாக்’ எனும்) சிறிய அத்தியாயம், பெண்கள் தொடர்பான (‘அல்பகரா’ எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பின்னரே அருளப்பெற்றது. (பின்னால் அருளப்பெற்ற அந்த வசனம் இதுதான்;) ‘மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும்’ (திருக்குர்ஆன் 65:04)4

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4911

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) ‘(ஒருவர் அனுமதிக்கப்பட்ட ஒன்றை சத்தியமிட்டு) விலக்கிக் கொள்ளும் பட்சத்தில், (சத்தியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான) பரிகாரத்தை அவர் செய்யவேண்டும்’ என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ எனும் (திருக்குர்ஆன் 33:21 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4912

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம், (அவர்களின் அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிகநேரம்) தங்கி விடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி(ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ அவர், நபி(ஸல்) அவர்களிடம் ‘கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே’ என்று கூறிட வேண்டும். (வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு, நபி(ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், ‘இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன்’ என்று கூறிவிட்டு, ‘இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!’ என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1 வது இறைவசனம் அருளப்பெற்றது.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4913

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை. (ஒரு முறை) உமர்(ரலி) ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர்(ரலி) தம் (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக ‘அராக்’ மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தம் தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி(ஸல்) அவர்களின் துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிக் செயல்பட்ட இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர்’ என்று பதிலளித்தார்கள்.

உடனே நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், உங்களின் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை’ என்று சொன்னேன். அப்போது ‘(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டு விடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்’ என்று கூறிய உமர்(ரலி), பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள். ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)

(ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, ‘நீங்கள் இப்படிச் செய்யலாமே’ என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், ‘உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?’ என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் விவாதித்தால் அன்றைய நாள் முழுக்க இறைத்தூதர் கோபமாக இருந்தார்கள்’ என்று கூறினார்.

உடனே நான் எழுந்து, அதே இடத்தில் என்னுடைய மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, ‘என் அருமை மகளே! நீ இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)’ என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு’ என்றார். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை – ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே!’ என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி(ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான) உம்மு ஸலமாவிடம் (அறிவுரை கூறச் சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார்.

இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு ஸலமா, ‘கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகிறேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களின் துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள்’ என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு ஸலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்து விட்டார். எனவே, நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து) விட்டேன். மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி(ஸல்) அவர்களின் அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.

(அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) ‘ஃகஸ்ஸான்’ வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால், அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். ‘திறங்கள், திறங்கள்’ என்று கூறினார். (கதவைத் திறந்த) நான், ‘ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘அதைவிடப் பெரியது நடந்து விட்டது; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியரைவிட்டு விலகி விட்டார்கள்’ என்றார்.

உடனே நான், ‘ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!’ என்று கூறிவிட்டு, என்னுடைய உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், ‘இந்த உமர் இப்னு கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!’ என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்து விட்டார்கள். (நான் உள்ளே சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களின் துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு ஸலமாவின் பேச்சு வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்றார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4914

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் உமர்(ரலி) அவர்களிடம் (ஒரு வசனம் குறித்து) கேட்க நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே, (வாய்ப்புக் கிடைத்தபோது அவர்களிடம்) ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இறைத்தூதர்(ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)களின் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல்பட்ட இரண்டு துணைவியர் யார்?’ என்று கேட்டேன். என் பேச்சை நான் முடிப்பதற்குள் ‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம்’ என்று உமர்(ரலி) பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4915

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)களின் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல்பட்ட இரண்டு துணைவியர் யார்? என்பது பற்றி உமர்(ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நெடுநாள்களாக) எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்வாறு ஓராண்டு காலம் இருந்து விட்டேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. (இந்நிலையில் ஒரு முறை) நான் ஹஜ்ஜுக்காக உமர்(ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ‘(மர்ருழ்) ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது உமர்(ரலி) தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோது ‘உளு (அங்கசுத்தி) செய்வதற்கான தண்ணீரை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக தண்ணீர்க் குவளையை எடுத்து வந்து அவர்களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன். நான் (நினைத்திருந்ததைக் கேட்பதற்கு இதுதான்) சந்தர்ப்பம் எனக் கருதினேன். உடனே நான், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட அந்த இரண்டு துணைவியர் யார்?’ என்று கேட்டேன். நான் என் பேச்சை முடிப்பதற்குள், ‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் (அவர்கள் இருவரும்)!’ என்று உமர்(ரலி) பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4916

உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்துகொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்டபோது, ‘நபி(ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்தால் உங்களை விடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்’ என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (திருக்குர்ஆன் 66:5 வது) இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4917

முஜாஹித்(ரஹ்) அறிவித்தார். (திருக்குர்ஆன் 68:13 வது வசனத்தின் விளக்கத்தில்) இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவன் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாவான். ஆட்டிற்கு (வேறுபடுத்திக் காட்டும்) ஓர் அடையாளம் (காதணி) இருப்பதுபோல், அவனுக்கும் (அவனுடைய கழுத்தில் ஓர்) அடையாளம் உள்ளது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4918

ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4919

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
இதைஅபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4921

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், ‘வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்களின் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன’ என்று பதிலளித்தனர். ‘புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே, உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்’ என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.

‘திஹாமா’ எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது ‘உக்காழ்’ சந்ததையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ‘ஃபஜ்ரு’த் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள் அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) ‘வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்’ என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, ‘எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகிறது. எனவே, நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்’ என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, ‘(நபியே!) நீர் கூறுக: வஹீ (இறைச்செய்தி) மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்…’ என்று தொடங்கும் இந்த (72 வது) அத்தியாயத்தை அருளினான்.

ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி ‘வஹி’யின் மூலம் தான் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4922

யஹ்யா இப்னு அபீ கஸீர்(ரஹ்) அறிவித்தார். நான் அபூ ஸலமா இப்னு அப்திர்ரஹ்மான்(ரஹ்) அவர்களிடம் முதன்முதலாக அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார் ‘போர்த்தியிருப்பவரே!’ (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (திருக்குர்ஆன் 74:1 வது) வசனம் என்றார்கள். நான் ‘(நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக!’ (இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (திருக்குர்ஆன் 96:1 வது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகிறார்கள் என்றேன். அதற்கு அபூ ஸலமா அவர்கள், ‘நான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போன்றே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன்.) அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப் பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. என் இடப்பக்கத்தில் பார்த்தேன். அங்கும் எதையும் நான் காணவில்லை. எனவே, நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை கண்டேன். எனவே, நான் (என் துணைவியாரான) கதீஜாவிடம் சென்று, ‘எனக்குப் போர்த்தி விடுங்கள். குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்!’ என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தியும் விட்டார்கள்; என் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும் செய்தார்கள். அப்போது, ‘போர்த்திக்கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், உங்களுடைய இறைவனைப் பெருமைப் படுத்துங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4923

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் ‘ஹிரா’ மலைக் குகையில் தங்கியிருந்தேன். (எனத் தொடங்கி) மேற்கண்ட ஹதீஸ் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4924

யஹ்யா இப்னு அபீ கஸீர்(ரஹ்) அறிவித்தார். நான் அபூ ஸலமா(ரஹ்) அவர்களிடம் ‘முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘போர்த்தியிருப்பவரே!’ (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (திருக்குர்ஆன் 74:1 வது) வசனம் என்றார்கள். அப்போது நான், ‘(நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக!’ (இக்ரஃ பிஸ்மி ரப்பிக் கல்லஃதீ கலக்) எனும் (திருக்குர்ஆன் 96:1 வது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன். அதற்கு அபூ ஸலமா(ரஹ்), ‘நான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம், ‘முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்’ எனும் (திருக்குர்ஆன் 74:1 வது) வசனம் என்று கூறினார்கள். உடனே நான், ‘இக்ரஃ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக்’ எனும் (திருக்குர்ஆன் 96:1 வது) வசனம் தான் (முதன் முதலில் அருளப்பட்ட வசனம்) என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே! என்று கேட்டேன். அதற்கு ஜாபிர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் தெரிவிக்கப்பபோவதில்லi. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நான் ‘ஹிரா’ மலைக் குகையில் தங்கியிருந்தேன். நான் என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கி அங்கிருந்த பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்திருப்பேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டேன். உடனே நான் எனக்கு முன்புறத்திலும் எனக்குப் பின்புறத்திலும் எனக்கு வலப்பக்கத்திலும் எனக்கு இடப்பக்கத்திலும் பார்த்தேன். அப்போது அவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே நான் கதீஜாவிடம் சென்று ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்! என் மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்!’ என்று கூறினேன். மேலும், எனக்கு, ‘போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 74:1-3) இறைவசனங்கள் அருளப்பெற்றன.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4925

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின் வருமாறு) கூறினார்கள்: நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவியாரான) கதீஜாவிடம், ‘எனக்குப் போர்த்தி விடுங்கள்: என்று சொன்னேன். அவர்களும் என்னைப் போர்த்தி விட்டார்கள். அப்போது அல்லாஹ், ‘போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களைத் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.

(மேற்கண்ட 74:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) என்பது சிலைகளைக் குறிக்கும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4926

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். வஹீ (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானை நோக்கி என் பார்வையை உயர்த்தினேன். அங்கு, ‘ஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு (கீழே) பூமியில் விழுந்து விட்டேன். அப்போது நான் (நடுக்கமுற்றவனாக) என் வீட்டாரிடம் (திரும்பி) வந்து (கதீஜாவிடம்), ‘எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்றேன். அப்போது, ‘போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: (திருக்குர்ஆன் 74:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) எனும் சொல், சிலைகளைக் குறிக்கும். (மேற்கண்ட வசனம் அருளப்பெற்ற) பின்னர் ‘வஹீ’ தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4927

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். தம் மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்படும்போது, நபி(ஸல்) அவர்கள் (தாம் இதனை எங்கே மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தினால் வேக வேகமாக ஓதி,) தம் நாவை அசைப்பவர்களாக இருந்தார்கள். -அருளப்படும் வேத வசனங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தம் நாவை அசைத்து ஓதினார்கள் என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்கள்- அப்போது, ‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4928

மூஸா இப்னு அபீ ஆயிஷா(ரஹ்) அறிவித்தார். நான் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், ‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) இறை வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: தம்மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்படும்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி(ஸல்) அவர்களுக்கு ‘வஹீ அருளப்படும்போது அவசர அவசரமாக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம் மீது அருளப்படும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி(ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.

‘அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்’ எனும் (திருக்குர்ஆன் 75:17 வது) வசனத்திற்கு ‘நாமே உங்களின் நெஞ்சத்தில் அதனை(ப் பதியச் செய்து,) ஒன்று சேர்ப்போம். நீங்கள் அதனை ஓதும்படி செய்வோம்’ என்று பொருள்.

‘நாம் இதனை ஓதிவிட்டோமாயின்..’ எனும் (திருக்குர்ஆன் 75:18 வது) வசனத்திற்கு, ‘ஜிப்ரீல் மூலமாக உங்களுக்கு என் வசனங்கள் அருளப்பட்டு விடுமாயின்..’ என்று பொருள்.

‘நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள். பின்னர் அ(தன் கருத்)தை விளக்குவதும் நம்முடைய பொறுப்பாகும்’ (எனும் (திருக்குர்ஆன் 75:19 வது) வசனத்திற்கு, ‘உங்களுடைய நாவினால் பிறருக்கு விளக்கிக் கொடுக்கச் செய்வதும் எம்முடைய பொறுப்பேயாகும்’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4929

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். ‘(நபியே!) இந்த வஹியை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75 வது அத்தியாயத்திலுள்ள) ‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்’ எனும் (திருக்குர்ஆன் 75:16,17) வசனங்களை அருளினான்.

அதாவது, ‘உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்’ என்று இறைவன் கூறினான். மேலும், ‘நாம் இதனை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்’ என்ற (திருக்குர்ஆன் 75:18 வது) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்’ என்று கூறினான். ‘பின்னர், அதனை விளக்குவதும் எம்முடைய பொறுப்பாகும்’ எனும் (திருக்குர்ஆன் 75:19 வது) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்’ என்று கூறினான்.

(இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டு வரும்போது,) தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை நபி(ஸல்) அவர்கள் மெளனத்துடன் கேட்டு)க் கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல்(அலை) அவர்கள் சென்றுவிடும்போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.
‘(மனிதனே! இது) உனக்குக் கேடுதான்! கேடேதான்’ எனும் (திருக்குர்ஆன் 75:34 வது வசனம் ஓர் எச்சரிக்கையாகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4930

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)’ எனும் (77 வது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன்னுடைய புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4931

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருநாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி (ஒன்றின் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)’ எனும் (77 வது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு (தன்னுடைய புற்றுக்குள் புகுந்து)விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டது’ என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4932

அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) அறிவித்தார். (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘கஸ்ர்’ எனும் சொல்லுக்கு விளக்கம் கூறுகையில்,) இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நாங்கள் குளிர்காலத்தில் குளிர் காய்வதற்காக மூன்று முழம், அல்லது அதைவிடக் குறைந்த அளவில் மரக்கட்டைகளை வெட்டி எடுத்து வருவோம். அவற்றுக்கு நாங்கள் ‘கஸர்’ எனப் பெயரிட்டழைத்து வந்தோம்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4933

அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) அறிவித்தார். ‘அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்’ எனும் (திருக்குர்ஆன் 77:32 வது) இறைவசனத்திற்கு விளக்கம் கூறுகையில், இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறக்கேட்டேன். நாங்கள் மூன்று முழம், அல்லது அதைவிட அதிகமான அளவிலுள்ள மரக்கட்டைகளை நாடிச் செல்வோம். அவற்றைக் குளிர்காலத்திற்காக நாங்கள் எடுத்து வைப்போம். அவற்றுக்கு ‘அல்கஸர்’ எனப் பெயரிட்டு அழைத்து வந்தோம்.

(திருக்குர்ஆன் 77:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுமாலத்துன் ஸ¤ஃபர்’ எனும் சொல், மரக்கலங்களைக் கட்டும் கயிறுகளைக் குறிக்கும். அக்கயிறுகள் மனிதர்களின் இடுப்புகளைப் போல் (பருமனாக) மாறும் அளவிற்கு திரிக்கப்படும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4934

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி’ (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77 வது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியேற்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ளி வந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதைக் கொல்லுங்கள்’ என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தன்னுடைய புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து) விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளரான உமர் இப்னு ஹஃப்ஸ்(ரஹ்) கூறினார். ‘இந்நிகழ்ச்சி மினாவிலிருந்த ஒரு குகையில் நடந்தது’ என்று என் தந்தையாரிடமிருந்து (கேட்டு) நான் மனனமிட்டுள்ளேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4935

அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார். ‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூ ஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலகிக் கொள்கிறேன்’ என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலகிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். பின்னர், ‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள்(மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்’ என்று மேலும் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4936

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறக் கேட்டேன்.

(திருக்குர்ஆன் 79:34 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாம்மா’ (அமளி) எனும் சொல்லுக்கு ‘அனைத்துப் பொருள்களையும் துவம்சம் செய்யக்கூடியது’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4937

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4938

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்’ எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) இறை வசனத்தை ஓதிவிட்டு, ‘அன்று தம் இரண்டு காதுகளின் பாதிவரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய் விடுவார்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4939

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(மறுமை நாளில்) கணக்கு வாங்கப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!
‘எவருடைய வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக்கரத்தில் வழங்கப்படுமோ, அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:8 வது வசனத்தில்) கூறுகிறான்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது எவன் துருவித் துருவி விசாரிக்கப்படுவானோ, அவன் அழிந்தான்’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4940

முஜாஹித்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி), ‘(திருக்குர்ஆன் 84:19 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தபக்கன் அன் தபக்கின்’ எனும் சொற்றொடருக்குத் ‘திண்ணமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது’ என்று பொருள்’ என்று கூறிவிட்டு, ‘இந்த வசனம் உங்களுடைய நபி(ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்திப் பேசுகிறது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4941

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் ‘முஸ்அப் இப்னு உமைர்’(ரலி) அவர்களும், ‘இப்னு உம்மி மக்தூம்’(ரலி) அவர்களும் தாம். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பிறகு, அம்மார்(ரலி), பிலால்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) வந்தார்கள். அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள(து வருகையா)ல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், ‘இதோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள்’ என்று கூறி (மகிழலாயி)னர். நான், ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87 வது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருகை தரவில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4942

அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) கூறினார். (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது அவர்கள், ‘(இறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அவர்களிலுள்ள துர்பாக்கியசாலி ஒருவன் முன்வந்தபோது…’ எனும் (திருக்குர்ஆன் 91:12 வது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, ‘அபூ ஸம்ஆவைப் போன்று ஸாலிஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக் காக முன் வந்தான்’ என்று கூறினார்கள்.

மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்கள். உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, ‘(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) ‘உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?’ என்று கேட்டபடி உபதேசித்தார்கள். இன்னோர் அறிவிப்பில், ‘(ஒட்டகத்தைக் கொன்றவன்) ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களின் தந்தையின் சகோதரர் அபூ ஸம்ஆவைப் போன்று (செல்வாக்கு மிக்கவனாக) இருந்தான்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) கூறினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4943

அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது, நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா(ரலி) வந்தார்கள். அப்போது ‘(குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘ஆம்’ என்று சொன்னோம். ‘சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்?’ என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா(ரலி), ‘ஓதுங்கள்!’ என்று (என்னிடம்) கூறினார்கள்.

உடனே நான், ‘வல்லைலி இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகரி வல் உன்ஸா’ என்று (92 வது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன். அபுத்தர்தா(ரலி), ‘இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் வாயிலிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். ‘(இப்படித்தான்) நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து நான் ஓதக் கேட்டுள்ளேன். ஆனால், இவர்கள் (ஷாம்வாசிகள்) நான் கூறுவதை மறுக்கிறார்கள். (பிரபல ஓதலிலுள்ள ‘வமா கலக்கஃத் தகர வல் உன்ஸா’ என்றே ஓத வேண்டும் என்று கூறுகிறார்கள்)’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4944

இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள். பிறகு, ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?’ என்று அபுத்தர்தா(ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘நாங்கள் அனைவரும் தாம்’ என்று பதிலளித்தோம். அபுத்தர்தா(ரலி), ‘(இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா(ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். ‘வல்லைலி இஃதா யஃக்ஷா’ எனும் வசனத்தில் இப்னு மஸ்வூத்(ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா(ரஹ்), ‘வஃத்தகரி வல் உன்ஸா’ என்றே ஓதினார்கள்’ என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா(ரலி), ‘நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) ‘வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா’ என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைப் பின்பற்றமாட்டேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4945

அலீ(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி(ஸல்) அவர்களுடன் ‘பகீஉல் ஃகர்கதி (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்’ இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ‘சொர்க்கத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். உடனே மக்கள், ‘அல்லாஹவின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். பிறகு, ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சிவாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம். உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கதிலுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கி விடுகிறவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்’ எனும் (திருக்குர்ஆன் 92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4946

அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத தரையில் குத்தியபடி (அழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், ‘தம் இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (இதன்மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். பிறகு, ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்’ எனும் (திருக்குர்ஆன் 95:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4947

அலீ(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) நாங்கள் (‘ஜனாஸா’) ஒன்றிற்காக) நபி(ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் மதீனாவின் பொது மையவாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், ‘சொர்க்கத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். உடனே நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா?’ என்று கேட்டோம். (அதற்கு,) நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். பிறகு, ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவருக்கு சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்’ எனும் (திருக்குர்ஆன் 92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4948

அலீ(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒருநாள்) மதீனாவிலுள்ள பொது மையவாடியான) ‘பகீஉல்’ ஃகர்கதில்’ ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அவர்கள் (தம் தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். பிறகு, ‘உங்களில் எவரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தம் இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது துர்பாக்கியசாலியா, அல்லது நற்பாக்கியசாலியா என்று எழுதப்பட்டிராமல் இல்லை’ என்று கூறினார்கள். ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்துவிடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பாக்கியம் பெற்றவரோ அவர் நற்பாக்கியசாலியாக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) துர்பாக்கியசாலியோ அவர் துர்பாக்கியசாலிகளின் செயலுக்கு மாறுவார்’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(இதோ பாருங்கள்!) நல்லவருக்கு நல்லவர்களின் செயலைப் புரிய வகைசெய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும்’ என்று கூறினார்கள். பிறகு ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்கிறவர்…’ எனும் (திருக்குர்ஆன் 92:5-10) வசனங்களை ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4949

அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (‘பகீஉல் ஃகர்கத்’ மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதனைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். மேலும் அவர்கள், ‘தம் இருப்பிடம் நரகத்திலா அல்லது சொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டு விடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொருவருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகை செய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர்களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழி காணப்படும்’ என்று கூறிவிட்டு, ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர்…’ எனும் (திருக்குர்ஆன் 92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4950

ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை’ என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 93:1-3) வசனங்களை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4951

ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) கூறினார். ஒரு பெண், ‘இறைத்தூதர் அவர்களே! தங்கள் நண்பர் (வானவர் ஜிப்ரீல்) தங்களிடம் தாமதமாகத்தான் வந்துள்ளார் என்று கருதுகிறேன்’ என்று கூறினார். அப்போதுதான், ‘(நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 93:3 வது) இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4952

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95 வது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள்.

(திருக்குர்ஆன் 95:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தக்வீம்’ எனும் சொல்லுக்குப் ‘படைப்பு’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4953

நபி(ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக்கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. எனவே, அவர்கள் ‘ஹிரா’க் குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள். (இவ்வாறு) தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்கு முன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்து வந்தார்கள். அதற்காக (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைக் கொண்டு செல்வார்கள். இந்நிலை, ஹிராக் குகையில் அவர்களுக்கு சத்திய(வேத)ம் வரும் வரை நீடித்தது. ஒரு நாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ‘ஓதும்!’ என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:

அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதும்!’ என்றார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!’ என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கமுடியாத அளவிற்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு, ‘ஓதும்!’ என்று கூறினார். அப்போதும் ‘நான் ஒதத் தெரிந்தவனல்லவே!’ என்று கூறினேன். உடனே, அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்’ எனும் (திருக்குர்ஆன் 96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.

பிறகு, அசல் வசனங்களுடன், தம் கழுத்து சதைகள் (அச்சத்தால்) படபடக்க திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு,) ‘கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு கதீஜா(ரலி), ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலைடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை(யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறார்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தை சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு சகாயம் செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை)’ என்று (ஆறுதல்) கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான ‘வரக்கா இப்னு நவ்ஃபல்’ என்பாரிடமும் சென்றார்கள். -’வராக்க’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழிந்த முதியவராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!’ என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), ‘என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் தாம் பாார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக்கேட்ட ‘வரக்கா’, ‘(நீர் கண்ட) இவர் தாம் (இறைத்தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, (மகனே!) உம்மை உம் சமூகத்தார் உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று சொல்லி வேறு சில வார்த்தைகளையும் கூறினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டும்) வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று கேட்க, ‘வரக்கா’, ‘ஆம். நீங்கள் பெற்றிருக்கிற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்’ என்று கூறினார். அதன் பின்னர் ‘வரக்கா’ நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்று போயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4954

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். வேத அறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலம் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஆகாயத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய பார்வையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். உடனே நான் (என் துணைவியார் கதீஜாவிடம்) திரும்பி வந்து, ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்றேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், ‘போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களை அருளினான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸலமா(ரஹ்) கூறினார்: (மேற்கண்ட 74:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) என்பது, அறியாமைக் கால மக்கள் வழிபட்டுவந்த சிலைகளைக் குறிக்கும். இதன் பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடரலாயிற்று.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4955

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கக் கற்பித்தான்’ எனும் (திருக்குர்ஆன் 96:1-5) இறைவசனங்களை ஓதினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4956

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதும்! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்’ எனும் (திருக்குர்ஆன் 96:1-5) இறைவசனங்களை ஓதினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4957

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஹிராக் குகையிலிருந்து, கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, ‘எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்டபடி முழுதுவமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4958

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘கஅபா’ அருகில் முஹம்மது தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரின் கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூ ஜஹ்ல் சொன்னான். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, ‘அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப்பார்கள்’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4959

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், ‘உங்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98 வது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்’ என்று கூறினார்கள். உபை(ரலி), ‘அல்லாஹ் என் பெயரைச் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை(ரலி) அழுதார்கள்

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4960

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், ‘உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’ என்று கூறினார்கள். உபை(ரலி), ‘அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்), அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்), ‘உபை இப்னு கஅப்(ரலி) அவர்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98 வது) அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது’ என்றார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4961

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், ‘உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்’ என்று கூறினார்கள். உபை(ரலி), ‘என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?’ என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), ‘அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட்டேனா?’ என்று (மீண்டும்) கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். இதைக்கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4962

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்கு பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகப் பசுமையான ஒரு ‘வெட்ட வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டி வைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு ‘அந்தப் பசும் புல்வெளியில்’ அல்லது ‘அந்தத் தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிருமுறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும் கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும்.

இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதனுடைய பிடரியின் (ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு, (அவருடைய) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவன் ஆவான். அதன் காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக மாறிவிடுகிறது.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை’ ‘அணுவளவு நன்மை செய்தவர் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வார். மேலும், அணுவளவு தீமை புரிந்தவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டு கொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (திருக்குர்ஆன் 99:7,8) வசனங்களைத் தவிர’ என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4963

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், ‘இவை குறித்து எனக்கு இந்தத் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசனத்தைத் தவிர வேறெதுவும் அருளப்படவில்லை’ என்று கூறிவிட்டு, ‘அணுவளவு நன்மை செய்தவர் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வார். மேலும், அணுவளவு தீமை செய்தவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டு கொள்வார்’ எனும் (திருக்குர்ஆன் 99:7,8) இறை வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4964

தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ‘ஜிப்ரீலே, இது என்ன?’ என்று கேட்டேன். ‘இது அல்கவ்ஸர்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4965

அபூ உபைதா ஆமிர் இப்னு அப்தில்லாஹ் இப்னி மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நபியே!) நாம் உங்களுக்கு அல்கவ்ஸரை அருளினோம்’ எனும் (திருக்குர்ஆன் 108:1 வது) இறை வசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘(அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும்’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4966

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். (திருக்குர்ஆன் 108:1 வது வசனத்தில் இடம் அப்பாஸ்(ரலி) கூறுகையில், ‘அது, நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும்’ எனத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூ பிஷ்ர்(ரஹ்) கூறினார்: நான் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், ‘மக்கள் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்றனரே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்’ என்று கூறினார்கள்:

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4967

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து…’ எனும் (110 வது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின் ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி(ஸல்) அவர்கள் தொழுததில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4968

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குர்ஆனின் (110 வது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தம் (தொழுகையின்) ருகூஉவிலும் சுஜுதிலும் அதிகமாக ‘சுப்ஹானக்க ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4969

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி), ‘(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து..’ எனும் (110 வது) அத்தியாயம் குறித்து (பத்ருப் போரில் கலந்துகொண்ட) நண்பர்களிடம் கேட்டார்கள். நண்பர்கள் ‘பல நாடுகளையும் கோட்டைகளையும் வெற்றிகொள்வது (குறித்துத்தான் இந்த வசனம் முன்னிறிவிப்புச் செய்கிறது)’ என்று கூறினர். ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று உமர்(ரலி) (என்னிடம்) கேட்டார்கள். ‘(இது,) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஆயுட்காலம், அல்லது ஓர் உதாரணமாகும். (இதன் மூலம்) அவர்களின் இறப்புச் செய்தி முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது’ என்று (விளக்கம்) கூறினேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4970

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) பத்ருப்போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, ‘எங்களுக்கு இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இவரை மட்டும் எங்களுடன் ஏன் அமரச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), ‘அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால் தான்’ என்றார்கள். பின்னர் ஒருநாள் (எங்களை) உமர்(ரலி) (அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியினை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர்(ரலி), ‘அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்..’ எனும் (திருக்குர்ஆன் 110:1 வது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், ‘நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படுமபோது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்’ என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர். அப்போது உமர்(ரலி) என்னிடம், ‘இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?’ எனக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். ‘அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘அது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் (முடிந்து விட்டதைக்) குறித்து (முன்) அறிவிப்புச் செய்ததாகும். ‘இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்’.. அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)’ என்று பதிலளித்தேன். அப்போது உமர்(ரலி), ‘நீங்கள் கூறுகிற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகிறேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4971

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!’ (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ (மலை) மீதேறி உரத்த குரலில், ‘யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)’ என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், ‘யார் இவர்?’ என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்று கூடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கிறேன்’ என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூ லஹப், ‘உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்று கூட்டினாயா?’ என்று கேட்டான். பின்னர் நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது ‘அழியட்டும் அபூ லஹபின் இரண்டு கரங்கள்; அவனுமே அழியட்டும்’ எனும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது. இந்த (திருக்குர்ஆன் 111:1 வது) வசனத்தை (அதன் இறுதியில் ‘கத்’ எனும் இடைச் சொல்லை இணைத்து) ‘வ கத் தப்ப’ (அவன் அழிந்தும் விட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ்(ரஹ்) ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4972

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ‘ஸஃபா’ எனும்) அந்த மலை மீதேறி, ‘யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே, அவர்களிடம் குறைஷியர் குழுமினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களிடம் ‘காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள்’ என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்!’ என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், ‘ஆம் (நம்பவே செய்வோம்)’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என உங்களை எச்சரிக்கை செய்கிறேன்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூ லஹப், ‘உனக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்று திரட்டினாயா?’ என்று கேட்டான். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘அழியட்டும் அபூ லஹபின் இரண்டு கரங்கள்’ என்று தொடங்கும் (111 வது) அத்தியாயத்தை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4973

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்று கூட்டினாய்!’ என்று (நபி(ஸல்) அவர்களைப் பார்த்து) அபூ லஹப் கேட்டான். அப்போது ‘அழியட்டும், அபூ லஹபின் இரண்டு கரங்கள்..’ எனும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4974

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்துவிட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமல்ல.) ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4975

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும. ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (அல்லாஹ் கூறினான்:) ‘அவன் (எவரையும்) பெற்றவனுமல்லன்; (யாருக்கும்) பிறந்தவனுமல்லன். (எனவே, அவனுக்குப் பெற்றோருமில்லை; பிள்ளைகளுமில்லை) தவிர, அவனுக்கு நிகராகவும் யாருமில்லை’ (திருக்குர்ஆன் 112:3,4)

(திருக்குர்ஆன் 112:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃப்வ்’ எனும் சொல்லும், கஃபீஃ, கிஃபாஉ ஆகிய சொற்களும் (‘நிகரானவன்’ என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4976

ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அறிவித்தார். நான் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் ‘முஅவ்வஃதத்தைனி’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114 வது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா? என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இது குறித்து நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘என்னிடம் (நபியே!) கூறுக: நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன்’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ருபின் ஹுபைஷ்(ரஹ்) கூறினார்:) எனவே, நாங்களும் (நானும் உபை இப்னு கஅபும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4977

ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) கூறினார். நான் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் ‘அபூ முன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்வூத்(ரலி) இப்படி இப்படி சொல்கிறாரே?’ என்று கேட்டேன். அதற்கு உபை(ரலி), ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என்னிடம் (இவ்விரு அத்தியாயங்களிலும் ‘நபியே! கூறுக: பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று) கூறப்பட்டது. (அதற்கேற்ப) நானும் கூறினேன்’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ரு கூறுகிறார்கள்:) எனவே, நாங்கள் (நானும் உபை அவர்களும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s