முதல் முஸ்லிம் யார்?


இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.

கேள்வி:- 1. முதல் முஸ்லிம் யார்? – Who Was the First Muslim? Muhammad [6:14, 163], Moses [7:143], some Egyptians [26:51], or Abraham [2:127-133, 3:67] or Adam, the first man who also received inspiration from Allah [2:37]?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முதல் முஸ்லிம் யார்? முஹம்மது (6:14, 163) மோசஸ் (7:143) சில எகிப்தியர்கள் (26:51) ஆப்ரஹாம் (2:127-133, 3:67) அல்லது ஆதம் அல்லாஹ்வின் கட்டளை பெற்ற முதல் மனிதன் (2:37)?

விளக்கம்:- ஆண்களில், முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம்! பெண்களில், ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம்! என்பது முறையாக இஸ்லாத்தைப் படித்தவர்களின் சாதாரணப் பதிலாக இருக்கும். இதைப் புரியும்படி விளக்குவதற்கு முன், இவர்களிடையே இந்தக் கேள்விகள் எழுவதற்கு ”என்ன காரணம்?” என்பதையும் தெரிந்து கொள்வோம்!

முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் இஸ்லாத்தைப் போதித்தார்கள். அதனால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் இஸ்லாத்தின் நிறுவனர் என்ற தவறானக் கருத்து மேலைநாட்டவரிடம் நிலவுகிறது. மேற்கத்தியர்களின், அந்தத் தவறானக் கருத்தின் தாக்கம் மேற்கண்ட கேள்விகளிலும் பதிந்திருக்கிறது. இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்தது. தூதர்கள் அனைவருமே இறைச் செய்தியைத்தான் கொண்டு வந்தார்கள். இஸ்லாத்தின் நிறுவனராக எந்த இறைத்தூதரும் இருந்ததில்லை. எல்லாக் காலத்திலும் இறைத்தூதர்கள் மூலம் மனித குலத்துக்காக இறைவனால் அருளப்பட்ட நற்போதனைகள் இஸ்லாம். இதை அறியாததால், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முன்பு இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருக்கவில்லை, அதனால் முஸ்லிம் என்பவர்களும் இருந்ததில்லை எனப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அகிலங்கள் அனைத்திற்கும் ஒரே இறைவன்தான் இருக்கிறான் என்னும் ஓரிறைக் கொள்கை, மற்றும் மறுமை இருக்கிறது என்பது போன்ற கொள்கைகளே, முதல் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் போதித்தார்கள் சில கிளை சட்டங்கள் மட்டுமே வித்தியாசமாக சிலருக்கு வழங்கப்பட்டன. மற்றபடி அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது…

(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)

”என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, ‘இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, 3535.

அனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது. எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதராணத்தை நபிமொழி கூறுகிறது. ஆதியிலிருந்து இறுதிவரை எல்லா நபிமார்களுக்கும் இறைவன் வழங்கிய மார்க்கம் இஸ்லாம். ஒவ்வொரு நபியும் கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்! எனவே முஸ்லிம் என்ற பெயர், இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தாருக்கு மட்டும் உள்ள பெயர் அல்ல. முந்தைய நபிமார்களின் உபதேசத்தை ஏற்றுப் பின்பற்றியவர்களும் இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களே!

இதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம் குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது. ”இதற்கு முன்னரும் இதிலும் அவன்தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்…” என்று இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள் ”முஸ்லிம்கள்” எனப் பெயர் சூட்டப்பட்டார்கள் என்பதை விளங்கலாம். நபி நூஹ் (அலை) அவர்களும் முஸ்லிமாக இருந்தார். (010:072) இஸ்லாத்தின் எதிரி ஃபிர்அவ்னும் மரணிக்கும் நேரத்தில், தன்னை முஸ்லிம் எனச் சொல்லிக் கொண்டான். (010:090)

இன்னும் முந்தைய நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த வேத வசனங்களையும் நம்பிக்கைக் கொண்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என மறுமையில் சொல்லப்படும் என்பதை கீழ்வரும் வசனத்திலிருந்து…

”இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, முஸ்லிம்களாக இருந்தனர்.” (திருக்குர்ஆன், 043:069)

************************************

கேள்விக்கு வருவோம்:- முதல் முஸ்லிம் யார்?

முஹம்மதா?

”கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவானக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்!” (006:014)

”முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!” (006:163)

மூஸாவா?

”நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” என்று (மூஸா) கூறினார். (007:143)

சில எகிப்தியர்களா?

”நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக…” (026:051)

ஆப்ரஹாம் என்ற இப்ராஹீமா?

”எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் சந்ததிகளை உனக்குக் கட்டப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!” (002:128)

”அவரது இறைவன் ‘கட்டுப்படு’ என்று அவரிடம் கூறினான். ‘அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்’ என்று அவர் கூறினார்.” (002:131)

”என் மக்களே அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக்கூடாது.” என்று இப்ராஹீமும், யாகூப்பும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினார்கள். (002:132)

”…நாங்கள் அவனுக்கேக் கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினார்கள். (002:133)

”இப்ராஹீம்… அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார்…” (003:067)

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், திருக்குர்ஆன் வசனங்கள் சில ஒன்றுக்கொன்று முரண்படுகிறது என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் மனிதருக்கு அருளியதிலிருந்து தொடர்ந்து இறைவன் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாமாகும். முதல் மனிதரிலிருந்து தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள்! என்பதற்கு விளக்கமாக திருக்குர்ஆன் வசனங்களை மேலே சொல்லியுள்ளோம்.

இனி…
”முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது அதற்கு முன் முஸ்லிம்களே இருந்திருக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது! இந்த ஆண்டு படித்த மாணவர்களிலேயே முதல் மாணவனாகத் தேர்வுப் பெற்றது ஒரு மாணவன் என்பதால் அதற்கு முன் எந்த மாணவனும் முதலிடத்தைப் பெறவில்லை என்று பொருளாகி விடாது.

ஒரு குடும்பம் இஸ்லாத்தைத் தழுவியது என்றால், முதன் முதலில் முஸ்லிமானது நான்தான் என்று முதலில் இஸ்லாத்தை ஏற்ற அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சொன்னால், அதற்கு முன் முஸ்லிம்களே இல்லை என்று பொருள் கொள்ள மாட்டோம்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக எற்றுப் பின்பற்றும் இந்த முஸ்லிம் சமுதாயத்தில், முஹம்மது (ஸல்) அவர்களே முதல் முஸ்லிம் ஆவார்கள். இறைச் செய்தி அவர்களுக்குத்தான் முதலில் அறிவிக்கப்படுகிறது. தமக்கு அறிவிக்கப்பட்ட இறைக் கட்டளையை முதலில் நிறைவேற்றும், முதல் முஸ்லிமாக அவர்கள் இருந்தார்கள். ”உங்களையெல்லாம் விட நான் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். இறை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றியதிலும் இந்த சமுதாயத்தின் அனைத்து முஸ்லிம்களை விடவும் உயர்வான முதன்மை இடத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்படி இருக்க வேண்டுமென இறைவனால் கட்டளையிடப்பட்டிருந்தது…

”முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனக் கூறுவீராக. (039:012)

இறைத்தூதர்கள் அனைவருமே அந்தந்த சமூகத்தினர் பின்பற்றியொழுக வேண்டிய முன்னோடிகள் என்பதால், இறைத்தூதர்கள் யாவரும் அந்த சமுதாயத்தின் முதல் முஸ்லிமாக இருந்தார்கள். முஸ்லிம்களில் முதன்மையானவர்களாகவும் இருந்தார்கள். இது போல்…

”நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” என்று (மூஸா) கூறினார். (007:143)

இறைச் செய்திகள் முதலில் நபிமார்களுக்கே அறிவிக்கப்படுவதால், நம்பிக்கை கொள்வதிலும் நபிமார்களே முதலிடம் வகிப்பார்கள். இறைத்தூதரைப் பின்பற்றி இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் அதாவது, நபியை உண்மைப்படுத்திய சமூகத்தவரில் முதலாமவர்களாக இருக்க விரும்புபவர்களைப் பற்றியே கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் பேசுகிறது…

”நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக…” (026:051)

இன்னும், இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகை நேரத்தில் முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்கள் தங்களை ”முஸ்லிம்கள்” என்று சொல்லிக் கொண்டார்கள்…

”… இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்” என்று கூறுகின்றனர். (028:053)

*****************************************************************************
கேள்வி:- 2.

Can Allah be seen and did Muhammad see his Lord? Yes [S. 53:1-18, 81:15-29], No [6:102-103, 42:51].

இறைவனைப் பார்க்க முடியுமா? முஹம்மது இறைவனைப் பார்த்தாரா? ஆம் (53:1-18, 81:15-29) இல்லை (6:102-103, 42:51)

மேற்கண்ட கேள்வியில் சுட்டியுள்ள முரண்பாடு!? பற்றி அடுத்தப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,

பஸ்லி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s